கோடை விடுமுறை என்றாலே பாட்டி வீட்டுக்குப் போவது ஒரு வழக்கம். 80-90-களின் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையை பாட்டி வீட்டில் கொண்டாடும் வாய்ப்பு
அதிகமாக இருந்தது. தற்போதைய வாழ்க்கைச் சூழல் மனிதர்களை தனித் தனியாக வெவ்வேறு நிலத்தில் பிரித்துப் போட்டிருக்கிறது. உலகளவில் பெரும்பாலான தாய் வழிச் சமூகமானது மகள் வழிப் பேரன் பேத்திகளை கொண்டாடியே வந்திருக்கிறது. கொரியாவிலும் இதுவே வழக்கம். ஒரு கோடை விடுமுறையில் நகரத்தில் இருந்து தன்
தாய்வழிப் பாட்டி வசிக்கும் மலைக் கிராமத்திற்கு வரும் ஏழு வயது பேரன் சாங்வூ’விற்கும், அவனது பாட்டிக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களின் இதமான தொகுப்பு தான் 2002’ல் வெளியான ‘தி வே ஹோம்’ என்ற கொரிய சினிமா.

image

கொரியாவின் முக்கிய நகரமான சியோலில் வசிக்கும் இளம்பெண் தன் ஏழுவயது மகன் சாங்வூ’வை ஒரு கோடை விடுமுறையில் தன் தாய் வாழும் மலைக் கிராமத்திற்கு
அழைத்து வருகிறார். “இந்தா.. உன் பேரனோட சேட்டை தாங்கள., சம்மர் முடியிற வரை இவன் உன் கிட்டயே இருக்கட்டும்.” என்பது போல அந்த இளம் பெண் தன்
மகனை அவனது பாட்டியிடம் ஒப்படைத்து விட்டு நகருக்கு திரும்பிவிடுகிறாள். சரியாக காது கேட்காத வாய் பேசமுடியாத கூன் விழுந்த பாட்டியை பேரன் ரொம்பவே
தொந்தரவு செய்கிறான். அவனுக்கு அந்த ஊர் பிடிக்கவில்லை. கிராமம் பிடிக்கவில்லை. ஊரிலிருண்டு கொண்டு வந்த வீடியோ கேமின் பேட்டரி தீர்ந்துவிடவே பாட்டியிடம் எனக்கு வீடியோ கேம் பேட்டரி வேண்டும் என தொல்லை செய்கிறான் சிறுவன் சாங்வூ. அந்த குட்டி மலைக் கிராமத்தில் பேட்டரிக்கு எங்கே போவாள் பாட்டி. பின் பேட்டரி
வாங்கிக் கொடுக்காத பாட்டியை திட்டித் தீர்க்கிறான் அவன்.

image

பாட்டி ஆசை ஆசையாக பேரனுக்கு சமைத்துக் கொடுக்கும் உணவை அவன் தொடக் கூட விரும்பவில்லை. அவனது அம்மா அவனை அழைத்து வந்த போது கொடுத்து
விட்டுப் போன பிஸ்கட், சாக்லேட்டுகளையே தின்று தீர்க்கிறான். அது எத்தனை நாளைக்குத் தாங்கும் சொல்லுங்கள். ஒரு நாள் “பாட்டி எனக்கு கெண்டகி சிக்கன் வேணும்” என அடம் பிடிக்கிறான். கோழி போல சேவல் போல தலையில் கையை கொண்டை என வைத்து பாவனை காட்டி அதனை பாட்டிக்கு புரிய வைக்கிறான் சாங்வூ. சரி
பேரனுக்கு கோழி சாப்பிடனும் போல என புரிந்து கொண்ட பாட்டி. தன் நிலத்தில் விளைந்த பழங்களை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் சந்தைக்குப் போயி வெயிலில் அமர்ந்து வியாபாரம் பார்க்கிறாள். அதில் கிடைத்த பணத்தில் வரும் போது ஒரு கோழியை கொண்டு வரும் பாட்டி அதனை பேரனுக்கு ஆசையாக சமைத்து ஊட்டுகிறாள்.
ஆனால் அது கெண்டகி சிக்கன் இல்லை என்பதால் பேரன் கோவித்துக் கொண்டு திட்டுகிறான் தன் பாட்டியை. பாட்டிக்கு கெண்டகி சிக்கன் என்றால் என்ன வென்றே
தெரியாதே. அவள் தன் கிராமத்து சமையலைத்தானே செய்வாள். சிறுவன் கோவத்தில் சாப்பிடாமல் படுத்து விடுகிறான். பாட்டியும் உறங்கிவிடுகிறாள். பிறகு நடு இரவில்
பசி எடுக்கவும் பூனை நடை நடந்து பாட்டி செய்த சிக்கனை ரகசியமாக சாப்பிடுகிறான். சுவை தூளாக இருக்கவும் சப்பு கொட்டி அத்தனை சிக்கன் துண்டுகளையும் தின்று
விடுகிறான்.

image

பாட்டி பேரனுக்குச் சந்தையில் இருந்து வீடியோ கேம் பேட்டரிகளையும் வாங்கி வந்திருந்தாள் அதனை அவனுக்கு ஒரு காகிதத்தில் சுத்திக் கொடுக்கவும் பேரனுக்கு ‘சே நம்ம பாட்டி எவ்ளோ நல்ல பாட்டி’ என தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பாட்டியை புரிந்து கொள்ளும் சிறுவனுக்கு அவள் மேல் கொள்ளை பிரியம் வந்து விடுகிறது.
அவளுக்கு சமையலில் உதவுகிறான்., ஊசியில் நூல் கோர்த்துக் கொடுக்கிறான். இப்படி சின்னச் சின்ன உதவிகள் செய்யத் துவங்குகிறான் பேரன் சாங்வூ. இப்படியாக
கிராமத்து பாட்டிக்கும் நகரத்து பேரனுக்கும் இடையில் அழகான துருதுரு பொழுதுகள் கழிகிறது. அன்பு மலையளவு பெருகிவிடுகிறது.

நடுவில் ஒரு நாள் இரவு பாட்டி அயர்ந்து உறங்கும் போது அவளது நெஞ்சில் தலை வைத்து இதயம் துடிக்கிறதா., பாட்டி உயிரோடு இருக்காளா என்று சோதனை
செய்கிறான் அந்த குறும்புக்கார சிறுவன். பேரனை பாட்டி ஆசை ஆசையாக கவனித்துக் கொள்வதும்., அவனுக்கு முடி திருத்தம் செய்து விடுவதும் என காட்சிகள்
ஒவ்வொன்றும் நாம் தவறவிட்ட நாட்களின் நினைவுகளை நினைத்து நினைத்து ஏங்க வைக்கிறது. கோடை விடுமுறையும் முடிகிறது. மகனை அழைத்துப் போக மறுநாள்
காலை அம்மா வரவிருக்கிறாள். அதுவே பாட்டியுடன் அவன் உறங்கும் கடைசி இரவு. மறுநாள் நகரத்துக்கு போக வேண்டும். நேரம் நெருங்க நெருங்க பிள்ளை மனம்
பதறுகிறது. அவனுக்கு பாட்டியை விட்டுப் பிரிய மனமில்லை. “நீ என் கூட வறியா…? இல்ல இல்ல நீ இங்கயே இரு நான் வந்து உன்ன பாத்துக்கிறேன் சரியா…?”
என்றெல்லாம் பேசுகிறான் பேரன். “பாட்டி உனக்கு உடம்பு முடியாட்டி எனக்கு லெட்டர் போடு சரியா…?” எனச் சொல்லும் பேரன் “உனக்கு எழுத படிக்க தெரியாதே., சரி
உனக்கு உடம்பு முடியாட்டி எதும் எழுதாம வெறும் லெட்டர மட்டும் அனுப்பு நான் புரிஞ்சுகிட்டு ஓடி வந்திடுவேன்..” என்கிறான் பிள்ளை மொழியில். அந்த காட்சிகள்
பார்க்கும் அனைவரையும் நெகிழச் செய்துவிடுகிறது.

image

பொழுதும் விடிகிறது., காலையில் மலைச் சரிவில் எப்போதாவது வரும் பேருந்துக்கு கூன்விழுந்த பாட்டியும் பேரனும் மகனை அழைத்துப் போக வந்திருந்த பாட்டியின்
மகளும் காத்திருக்க நகரத்துக்குச் செல்லும் பேருந்தும் வந்து விடுகிறது. மனசை எல்லாம் பாட்டியிடம் விட்டுவிட்டு கனத்த இதயத்துடன் பேருந்தில் ஏறுகிறான் சிறுவன்.
பாட்டிக்கும் பேரன் பிரிவதில் ரொம்பவே வருத்தம். பேருந்து நகர்கிறது பாட்டி கவலையுடன் கூடு திரும்புகிறாள். பேரன் பேருந்தின் கண்ணாடி வழியே பாட்டி ஊர்ந்து
நடப்பதை சாலை மறையும் வரை பார்க்கிறான்.

image

லீ ஜியோங் ஹியாங் என்ற பெண் இயக்குநர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். கொரியாவின் தாய்வழிச் சமூகத்தின் உறவுப் பிணைப்பை அத்தனை துல்லியமாக நமக்கு
பதிவு செய்கிறார் இயக்குனர். ஒளிப்பதிவாளர் யூன் ஹியூன் சிக் அந்த மலைக்கிராமத்தை அத்தனை அழகாக காட்டியிருப்பார். சிறந்த தென்கொரிய திரைப்படமாக தேர்வு
செய்யப்பட்ட இப்படம் கிராண்ட் பெல் விருதைப் பெற்றது. இன்றைய சூழலில் தாத்தா பாட்டிகளின் முக்கியத்தை நாம் நம் வீட்டுக் குழந்தைகளுக்குச் சொல்லத்
தவறுகிறோம். இப்படத்தை உங்கள் வீட்டு சுட்டிகளுக்கு இந்த குவாரண்டைன் காலத்தில் போட்டுக் காட்டுங்கள் பாட்டிகளும் பேர பிள்ளைகளும் கொண்டாடட்டும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.