தமிழக பா.ஜ.க தலைவராக கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், தெலங்கானா மாநில கவர்னராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அறிவிக்கப்பட்டார். `தாமரை மலர்ந்தே தீரும்’ எனும் முழக்கத்தோடு பா.ஜ.க.வை பட்டிதொட்டியெங்கும் கொண்டு போய்ச் சேர்த்த பெருமை தமிழிசையையே சேரும். அந்தளவுக்கு அடித்தட்டுத் தொண்டர்கள் முதல் டெல்லி தலைமை வரை அனைவருக்கும் பிடித்த ஒரு நபராக வலம் வந்தார் தமிழிசை. இதுவரை தமிழக பா.ஜ.க. தலைவர்களாக இருந்தவர்களில் அதிக ஆண்டுகள் அந்தப் பதவியை அலங்கரித்த பெருமையும் தமிழிசையையே சாரும்.

தமிழிசை

தமிழிசை ஆளுநரான பிறகு தமிழக பா.ஜ.க. தலைமை இல்லாமல் கிட்டத்தட்ட ஆறு மாத காலம் தாயில்லாப் பிள்ளையாகத் தவித்து வந்தது. அடுத்ததாக யாரைத் தலைவராகக் கொண்டு வருவது என்பதில் டெல்லி தலைமைக்கு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது. பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், நயினார் நாகேந்திரன், கரு.நாகராஜன், வானதி சீனிவாசன் எனப் பலரின் பெயர்கள் பட்டியலில் இருந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில், யாருமே எதிர்பார்க்காத வண்ணம், தேசியப் பட்டியல் இன நல ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள பா.ஜ.க. தலைவர்கள் பலருக்குமே இது மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவால்தான் அவருக்கு அந்தப் பதவி கிடைத்திருப்பதாக பா.ஜ.க தரப்பில் அப்போது சொல்லப்பட்டது. ஆனால், முருகனை தமிழக பா.ஜ.க தலைவராகத் தேர்ந்தெடுத்ததன் பின்னணியில் இருந்தது முழுக்க முழுக்க தமிழிசைதான் என்கிற தகவல், பா.ஜ.க.வின் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தற்போது கசிந்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க. மாநில நிர்வாகி ஒருவர், “தமிழகத்திலுள்ள பா.ஜ.க சீனியர் தலைவர்களான பொன்னார், ஹெச்.ராஜா, இல.கணேசன், இரண்டாம் கட்டத் தலைவர்களான வானதி, கரு.நாகராஜன் என யாருடைய ஒத்துழைப்பும் இல்லாமல், ஒற்றை ஆளாகத் தொண்டர்களை மட்டும் நம்பி, தமிழகம் முழுவதும் கட்சியைக் கொண்டு சேர்த்தவர் தமிழிசை. தமிழகத்தில் பா.ஜ.க என்கிற கட்சி இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அவரின் உழைப்புதான். அவருக்கு இணையாக, இதுவரை எந்தத் தலைவரும் கட்சிக்காக முழு அர்ப்பணிப்போடு உழைத்ததில்லை. அதனால்தான், அவர் கவர்னர் ஆன பிறகு, அடுத்த தலைவராக யாரைக் கொண்டு வருவது என்பதில் மிகப்பெரிய குழப்பம் நிலவியது. அதற்குக் காரணம், அதற்கான தகுதியோடு யாரும் இல்லை என்பதால் அல்ல. பொன்னாருக்கோ, சி.பி,ஆருக்கோ, வானதிக்கோ கொடுத்தால் அவர்களுக்கென்று உள்ள அணியினரை உள்ளே கொண்டு வந்து, மற்ற அணியினரை ஒதுக்கிக் கட்சியை மீண்டும் காணாமல் ஆக்கிவிடுவார்கள் என்கிற அச்சம், கட்சித் தலைமைக்கு இருந்ததுதான்.

ஹெச்.ராஜா

தன் இத்தனை ஆண்டுக்கால உழைப்பு வீணாகிவிடக்கூடாது என்பதில் தமிழிசை மிகவும் கவனமாக இருந்தார். தான் கஷ்டப்பட்டு கட்டிய இந்தக் கோட்டையைக் காக்கவேண்டிய பொறுப்பு டெல்லித் தலைமையை விட தனக்கு இருப்பதாக அவர் நினைத்தார். அதனால்தான், அவர், தனக்குப் பின்னால் இதுபோன்ற அணி அரசியலில் எதிலும் இல்லாத முருகனைப் பரிந்துரைத்தார். அவரின் பரிந்துரையால்தான் முருகனுக்குத் தலைவர் பதவி கிடைத்தது. அது முருகனுக்கே தெரியும். திடீரென எப்படித் தலைவரானார் என்று பா.ஜ.க தலைவர்கள் சிலருக்கே ஆச்சர்யம். முருகனின் பெயர் பட்டியலில் இருப்பதாகக் கூட எந்தத் தகவலும் கடைசி வரை வெளிவரவில்லை. ஆனால், முருகன்தான் தலைவராகப் போகிறார் என்பது தமிழிசைக்கு முன்பே தெரியும். அவரின் ஆதரவால்தான் முருகன் தமிழக பா.ஜ.க. தலைவராக முடிந்தது.

தமிழிசையுடன் முருகன் நன்றாகப் பழகக் கூடியவர். இருவரும் அக்கா, தம்பிபோல் மிகவும் சகோதரத்துவத்தோடு பழகிவந்தார்கள. ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து கட்சிக்காக அர்ப்பணிப்போடு இருப்பதால், அவரின் ஆரம்பகால வளர்ச்சியிலிருந்தே தமிழிசை அவருக்குப் பக்கபலமாக இருந்து வந்தார். முருகனும் கட்சிக்காக கடுமையாக உழைத்து படிப்படியாக முன்னேறியவர். அந்தவகையில் முருகனின் மீது தமிழிசைக்கு எப்போதும் தனிப்பிரியம் உண்டு. தான் தலைவராக இருக்கும் போது, டெல்லிக்குச் செல்லும்போதெல்லாம் முருகனின் வீட்டில்தான் தமிழிசை தங்குவார். `என் தம்பி வீடு இருக்கும்போது நான் எதற்காக ஹோட்டலில் தங்கவேண்டும்’ என மிக உரிமையோடு பேசுவார். அந்தளவுக்கு முருகனின் மீது அவரின் உழைப்பு, திறமையின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் தமிழிசை.

முருகன்

அதனால்தான், மற்ற யாரையும் விட கட்சியைக் காப்பாற்ற முருகன்தான் சரியான சாய்ஸாக இருப்பார் என டெல்லித் தலைமையிடம் போராடி அவரைத் தலைவராகக் கொண்டு வந்தார். கவர்னராக அறிவிக்கப்படாமல் இருந்தாலும் டிசம்பரோடு அவரின் தலைவர் பதவிக்காலம் முடிவுக்கு வர இருந்தது, அப்படி இருந்திருந்தாலும் அவர் முருகனைத்தான் பரிந்துரைத்திருப்பார்” என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். அவரிடம் `ஏற்கெனவே, ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தமிழக பா.ஜ.க. தலைவரான கிருபாநிதி, பா.ஜ.க.வின் மற்ற தலைவர்களால் சாதிய ரீதியாக கடுமையான ஒடுக்குமுறைகளைச் சந்தித்தாரே… அப்படியிருக்க முருகனால் சமாளித்துவிட முடியுமா?’ என்று கேட்டோம்.

Also Read: `ட்ரம்ப் இந்தியாவிடம் மருந்தை கேட்பதற்கான காரணம் என்ன?’ – இந்த வரலாறு முக்கியம் பாஸ் #MyVikatan

அதற்கு அவர், “கிருபாநிதி ஒரு மருத்துவர். இயல்பாகவே அமைதியான குணம் உடையவர். அதனால்தான் அவரால் இது போன்ற பிரச்னைகளைச் சமாளிக்க முடியவில்லை. ஆனால் முருகன் அப்படியல்ல, அவர் ஒரு வழக்கறிஞர். அதை விட, தேசியப் பட்டியல் இன நல ஆணையத்தின் துணைத்தலைவராக இருந்தவர். அதனால், கிருபாநிதியிடம் செய்த வேலைகளை எல்லாம் முருகனிடம் செய்யமுடியாது. அந்த நம்பிக்கையில்தான் தமிழிசையும் அவரைக் கொண்டு வந்திருக்கிறார். அது மட்டுமல்ல, பா.ஜ.க.வில் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராக்கினால், உயர்சாதியினருக்கான கட்சி என பா.ஜ.க.வுக்கு இருக்கும் பிம்பத்தையும் இதன் மூலம் உடைக்க முடியும். பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரைத் தலைவராகக் கொண்டுவந்ததன் மூலம் திராவிடக் கட்சிகளுக்குக் குறிப்பாக தி.மு.க.வுக்கு இது நெருக்கடியாக அமையும் என்பதையும் கருத்தில் கொண்டுதான் டெல்லித் தலைமை அவரை தலைவராகக் கொண்டுவந்திருக்கிறது ” என்றார் அவர்.

மோடி, அமித் ஷா

ஆகமொத்தம், மகிழ்மதி சாம்ராஜ்யத்தை தனக்குப் பின்னால் காக்கவேண்டும் என்பதற்காக ஒற்றைக் கையில் மகேந்திர பாகுபலியைப் தூக்கிப் பிடித்த ராஜாமாதா போல்தான், தான் வளர்த்த கட்சியைத் தனக்குப் பின்னால் காப்பாற்ற முருகன்தான் சரியான சாய்ஸ் என அவரின் பெயரை டெல்லித் தலைமையிடம் தூக்கிப் பிடித்து அவரைத் தலைவராகக் கொண்டு வந்திருக்கிறார் தமிழிசை என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

ஆக தமிழிசையின் ஆசியுடனும் ஆதரவுடனும் அவருடைய தம்பியால் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீருமா?!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.