உலக அளவில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் முன்னெச்சரிக்கை மற்றும் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்தியாவில், தேசிய அளவில் 21 நாள்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது.

தமிழகத்தில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், `சமூகப் பரவல் எனும் மூன்றாவது கட்டத்தை அடையலாம்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எச்சரித்திருக்கிறார். போலீஸாரும் சுகாதாரத்துறையினரும் மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறார்கள். ஊரடங்கை மதிக்காமல், இன்னும் ஒருசிலர் வெளியில் நடமாடிக்கொண்டு இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி அலட்சியமாகச் செயல்பட்ட ஒருசிலரால் காவலர் ஒருவரின் கண்பார்வை பாதிக்குமளவுக்குச் சென்றிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அடுத்த கீழக்கோட்டை கண்மாயில் அப்பகுதியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தங்களது காளைகளுக்கு 144 தடை உத்தரவு சமயத்தில் மஞ்சுவிரட்டு போட்டிக்குப் பயிற்சி கொடுத்துள்ளனர். அதைத் தடுக்க மதகுப்பட்டி எஸ்.ஐ. மற்றும் ஏட்டு கனகராஜ் சென்றுள்ளனர். அப்போது காவலர்களை பார்த்த உடன் காளை உரிமையாளர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த நபர்கள் என 50க்கும் மேற்பட்டோர் தப்பியோடினர்.

அப்போது அங்கிருந்த காளை ஒன்று ஏட்டு கனகராஜை முகத்தில் முட்டியது. இதனால் வலது கண் அருகே காயம்பட்ட கனகராஜ், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். தடையை மீறி காளைகளுக்குப் பயிற்சி வழங்கிய 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து 8 பேரைக் கைது செய்த நிலையில், அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் காவலருக்குக் காயம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து காவலர் கனகராஜ் மனைவி சசியிடம் பேசினோம். “நாங்கள் குடும்பத்துடன் சிவகங்கையில் வசித்துவருகிறோம். எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். எனது கணவர் மதகுப்பட்டி காவல்நிலையத்தில் ஏட்டாக உள்ளார். கடந்த ஞாயிறு அன்று வேலைக்குச் சென்ற போது மாடு முட்டியுள்ளது. இதனால் துடித்துப்போன என் கணவரை மதுரைக்குக் கொண்டு சென்றோம். அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

கண்களுக்கு அருகில் பலமாக காயம்பட்டுள்ளதால் குணமாக தாமதமாகும். காயம் சரியான பின்னர்தான் அவரின் கண் எந்த நிலைமையில் உள்ளது என்று சொல்ல முடியும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். தற்போது வீட்டில் ஓய்வு எடுத்துவருகிறார். கட்டைப் பிரிக்கும் போது கண்களுக்கு எந்தப் பாதிப்பும் இருந்துவிடக் கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’’ என்றார் கண்ணீருடன்.
#GameCorner
கொரோனா அச்சம், லாக் டவுன் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.