கொரோனா… இந்தப் பெயரைக் கேட்டு உலகமே நடுங்கிக் கொண்டிருக்கிறது. சீனாவில் ஆரம்பித்த இதன் கோரத்தாண்டவம் இன்னும் முடிந்தபாடில்லை. கோவிட் -19 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ், தற்போது சீனாவைத் தாண்டி கிட்டத்தட்ட 140 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் மரணம் அடைகின்றனர். அப்படிப்பட்ட கொடிய வைரஸை எதிர்க்கும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளவர்கள், சுகாதாரப் பணியாளர்கள். நாட்டின் நிலைமையைப் புரிந்துகொண்டு, மக்களுக்காக இவர்கள் இரவு பகலாகப் பணியாற்றிவருகிறார்கள்.

கொரோனா

போர்க் காலங்களில், வீரர்கள் தங்களது உயிர்களைப் பணயம் வைத்து இந்த நாட்டுக்காகப் போராடுவதைப் போல, இன்றைய சூழலில் சுகாதாரப் பணியாளர்கள் செய்யும் பணி, ராணுவ வீரர்களின் சேவைக்கு சற்றும் குறைவில்லாதது.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டி இருப்பதால் மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் அவ்வளவாக வீட்டுக்குச் செல்வதில்லை. அப்படியே சென்றாலும், வீட்டில் உள்ளவர்களிடமிருந்து தனித்தே இருக்கிறார்கள். தங்களது குடும்பத்தினருக்கு கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சம்தான் காரணம் இதற்கு. மத்தியப்பிரதேசத்தில், மருத்துவர் ஒருவர் வீட்டுக்குச் செல்லாமல் காரிலேயே தங்கிவருகிறார் என்று செய்தி வெளியானது.

இதேபோன்ற ஒரு சம்பவம் கர்நாடகாவிலும் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி காண்பவர்களை உருக வைக்கிறது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் நர்ஸாக வேலைபார்த்து வரும் சுனந்தா, கடந்த சில நாள்களாக கொரோனா வார்டில் பணி செய்து வருகிறார். இதன்காரணமாக, அவர் கடந்த 15 நாள்களாக வீட்டுக்குச் செல்லவில்லை. பெலகாவி மாவட்டத்தில் மட்டும் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சுனந்தா மருத்துவமனையை விட்டு வெளியேற விரும்பவில்லை. மாறாக, மருத்துவமனை விடுதிலேயே தங்கியுள்ளார்.

சுனந்தா

எதார்த்த சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, சுனந்தா வீட்டுக்கு வராததை வீட்டில் உள்ள மற்றவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இருப்பினும், சுனந்தாவின் மூன்று வயது மகளால் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தாயைப் பார்க்க முடியாத வருத்தத்தில் வீட்டிலேயே தினமும் அழுதபடி இருந்துள்ளார். நேற்றுமுன்தினம், சுனந்தாவின் கணவர், குழந்தையை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

நீண்ட நாளுக்குப் பிறகு சுனந்தாவைப் பார்த்த அந்தக் குழந்தை, தாயிடம் செல்ல பைக்கில் இருந்து கீழே இறங்க முயன்றுள்ளது. ஆனால், கொரோனா பயம் காரணமாக சுனந்தா மறுப்பு தெரிவிக்கவே, குழந்தையைப் பிடித்துவைத்துக்கொண்டார் அப்பா. எட்டும் தூரத்தில் தாயும் மகளும் இருந்தும், இருவராலும் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட, குழந்தை `அம்மா இங்க வா..’ என்று கதறி அழத்தொடங்கியது. சுனந்தாவும் மகளைக் கொஞ்ச முடியாத சோகத்தில் கண்ணீர் வடிக்கத் தொடங்கினார்.

சுனந்தா

மருத்துவமனை வாயிலில் நடந்த இந்தப் பாசப் போராட்டத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து வலைதளங்களில் பதிவிட, அது வைரலாகியது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா வரை இந்த வீடியோ செல்ல, சுனந்தாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். “உங்கள் சொந்தக் குழந்தைகளைக் கூட பார்க்காமல் மிகவும் கடினமாக உழைக்கிறீர்கள். உங்கள் பாசப்போராட்டத்தை டி.வி-யில் பார்த்தேன். தயவுசெய்து இன்னும் சிறிது நாள் ஒத்துழைக்கவும். எதிர்காலத்தில் உங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார், உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பெயர் எடுத்துத் தரும் என்று நம்புகிறேன்” என்று ஆறுதல் கூறியுள்ளார் எடியூரப்பா.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.