வறட்சியிலும் வனத் தீயிலும் சிக்கித்தவிக்கும் நீலகிரியில் கடந்த மூன்று நாள்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்துவருகிறது. கோடைப் பரிசாய்க் கிடைத்துவரும் இந்த மழையால் சிற்றோடைகளும் வனக்குட்டைகளும் மெல்ல உயிர் பெற்றுவருகின்றன.

மேலும் காட்டுத் தீயும் கட்டுக்குள் வந்துள்ளதால் வனத்துறையினர் நிம்மதியில் உள்ளனர்.
கடந்த மூன்று நாள்களாக கேத்திப் பள்ளத்தாக்கில் பெரு மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கேத்தியில் 22 மி.மீ மழை பெய்தது.

இன்றும் கேத்தி பகுதியில் சாரலுடன் துவங்கிய மழை மதியம் பெரு மழையாக மாறி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது.
இடைவிடாது பெய்த இந்த மழையால் கேத்தி, பாலாடா, காட்டேரி, கோலனிமட்டம் ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த விளை நிலங்கள் வெள்ளக்காடாக மாறின.

மேலும், சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. காட்டேரி அணைக்குச் செல்லக்கூடிய கேத்தி உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் ஒரு சில வீடுகளையும் வெள்ளநீர் சூழ்ந்தது.
கேரட், பீட்ரூட், பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மழை பாதிப்பு குறித்து நம்மிடம் பேசிய கேத்தி பாலடா விவசாயி ஹரிஹரன்,“கடந்த ஆண்டு கொட்டித்தீர்த்த பெருமழையில் நீலகிரியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான மலைக் காய்கறி விளைநிலங்கள் நீரில் மூழ்கின. அதற்கான இழப்பீடும் முறையாக வந்து சேரவில்லை. தற்போதுதான் பெரும்பாடுபட்டு நிலத்தைச் சீரமைத்துப் பயிர் செய்தோம். கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அறுவடைப் பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது கோடையின் பரிசாக நாங்கள் எதிர்பார்த்திருந்த மழை பேரிடியாக மாறிவிட்டது. அரசு இழப்பீடு வழங்கினால் மட்டுமே மீள முடியும்” என வேதனை தெரிவித்தார்.
#GameCorner
கொரோனா அச்சம், லாக் டவுன் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.