அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படலாம் என பிரதமர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க வரும் 14 ஆம் தேதி வரை மத்திய அரசு நாடு முழுவதும் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. ஆகவே ஒட்டு மொத்த இந்தியாவும் முடக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். இதுவரை நாடு இதைப் போன்ற நெருக்கடியைச் சந்தித்ததே இல்லை. இதனிடையே பிரதமர் மோடி இந்த ஊரடங்கு உத்தரவைக் குறித்து மாநில வாரியாக தலைவர்களுடன் விவாதிக்க அழைப்பு விடுத்திருந்தார். அதற்கான சந்திப்பு நேற்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. அப்போது அனைவரின் ஆலோசனையையும் பிரதமர் கேட்டுப் பெற்றார்.

இந்நிலையில் அந்தக் கூட்டத்திற்குப் பிறகு வெளியான தகவலின் படி ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. இது குறித்து பிரதமர் தனது பேச்சில் உணர்த்தியதாகக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தகவல் அளித்துள்ளனர். நாடாளுமன்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் மோடி பேசும் போது, பல மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் வல்லுநர்கள் ஊரடங்கை நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் என அப்போது தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் இந்த நிலைமையை ஒரு “தேசிய” மற்றும் “சமூக அவசர காலநிலை” உடன் அதிகாரிகள் ஒப்பிட்டுப் பேசியுள்ளனர். இப்போது நடைமுறையில் உள்ள மூன்று வார ஊரடங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதி முடிவடைய உள்ளது. மேலும் “நான் முதலமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்” என்று அப்போது பிரதமர் கூறியுள்ளார். “சமூக விலகல் விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் நாங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். எனவே ஊரடங்கை நீக்குவது அல்லது நீட்டிப்பது குறித்த ஆலோசனையில் உள்ளோம். ஒருவேளை நீடிக்கப்படலாம். ஆனால் அது எளிதல்ல என்பதும் தெரியும் ” எனக் கூறியதாகத் தெரிகிறது.
இது குறித்து விவாதிக்கப் பிரதமர் மோடி வரும் வரும் 11 ம் தேதி நடைபெற உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன் பிற ஊரடங்கு குறித்து இறுதியான முடிவை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே “ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் முன்னுரிமை என மோடி கூறியுள்ளார்” என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM