இந்த ஊரடங்கு நேரத்தில், நம் சூப்பர் ஸ்டார் படம் ஒன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது தெரியுமா? கையில் மெழுகுவத்தியுடன் நின்றாரே அந்தப் படமல்ல, இது குறும்படம். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பில் ஆரம்பித்து, பஞ்சாபி ஸ்டார் தில்ஜித் தோசஞ் வரை எண்ணற்ற இந்தியத் திரை நட்சத்திரங்கள் நடித்து வெளியாகியிருக்கும் `ஃபேமிலி’ திரைப்படம். பாலிவுட்டின் `பிக் பி’ அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா மற்றும் அலியா பட், கோலிவுட்டின் `சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், டோலிவுட்டின் `மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி, மல்லுவுட்டின் `கிங் ஆஃப் மல்லுவுட்’ மம்முட்டி மற்றும் `தி கம்ப்ளீட் ஆக்டர்’ மோகன்லால், சாண்டல்வுட்டின் `ஹாட்ரிக் ஹீரோ’ சிவ ராஜ்குமார், வங்கமொழி சினிமா நட்சத்திரம் ப்ரொசன்ஜிட் சட்டர்ஜி, பஞ்சாபிமொழிப் பாடகர் மற்றும் நடிகர் தில்ஜித் தோசஞ், மராத்திய நடிகை சோனாலி குல்கர்னி ( தமிழின் `மே மாதம்’ படத்தின் நாயகி ) ஆகியோர் நடித்திருக்கும் இந்தக் குறும்படத்தை, பிரபல விளம்பர பட இயக்குநர் ப்ரசூன் பான்டே இயக்கியிருக்கிறார்.

படத்தில், வீட்டில் மூத்தவரான அமிதாப்பின் கூலர்ஸ் காணாமல் போய்விடுகிறது. அது எங்கே போனது என வீட்டின் இளையவர்களான ரன்பீரும் தில்ஜித்தும் தேடுவதுதான் கதை. அந்த வீட்டிலுள்ள குடும்ப உறுப்பினர்களாக மற்ற நட்சத்திரங்கள் என சுவாரஸ்யமாகவே நகர்கிறது படம். அதைவிட சுவாரஸ்யம் என்னவென்றால், ஊரடங்கு நேரமான இப்போது, இந்தப் படத்தை எப்படி இயக்கினார்கள் என்பதுதான். `மேட்-அட்-ஹோம்’ என்ற பாணியில், அவரவர் காட்சிகளை அவரவர் வீட்டிலிருந்தே படமாக்கி அணுப்பியிருக்கிறார்கள். அதை வெட்டி, ஒட்டி ஒரே வீட்டில் நடப்பதுபோல் நமக்குத் தந்திருக்கிறார்கள். வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு லைட் டோனில் எடுத்திருப்பதை ஒன்றாக்க சிரமமாக இருந்த காரணத்தினால், மொத்தப் படத்தையும் ப்ளாக் & ஒயிட் ஃபார்மட்டில் வெளியிட்டிருக்கிறார்கள்.
அனைத்து மொழி உச்ச நட்சத்திரங்களையும் ஒரே படத்தில் காண்பது, மனதுக்குள் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சில நொடிகளே வந்தாலும் தனது டிரேட் மார்க் ஸ்டைலில் ஒன்றைச் செய்து ரசிக்கவைக்கிறார் ரஜினிகாந்த். கான்செப்ட்டும் அதை எப்படி படமாக்கப்போகிறோம் என்கிற ஐடியாவும் இயக்குநருடையது. ஆனால், அந்த நடிகர்களை நடிக்கச் சொல்லி படம்பிடித்ததும், ஃப்ரேமுக்குள் இருக்கவேண்டிய பொருள்களை எடுத்துவைத்ததும் என ஒவ்வொருவரின் குடும்பமும் அதில் உழைத்திருப்பார்கள் என்பதை நினைக்கும்போது, புன்னகை தானாக மலர்கிறது. மக்கள் அனைவரும் அவரவர் வீட்டுக்குள் தனிமைப்பட்டுக் கிடந்தாலும், ‘நாம் அனைவரும் நம் நாடு எனும் ஒற்றை வீட்டுக்குள்தான் இருக்கிறோம். இந்தியர் அனைவரும் நம் வீட்டு உறுப்பினர்கள், நம் சொந்தங்கள்’ என்ற உணர்வை ஏற்படுத்துகிறது இப்படம்.

‘மொழியால் பிரிந்திருந்தாலும், சினிமா எனும் கலையால் நாங்கள் எல்லோரும் ஒற்றைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இப்படி குடும்பமாக இணைந்து இந்தக் குறும்படம் வெளியிட்டதற்கான நோக்கம், ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிற சினிமாத் துறையின் தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவி செய்யவே’ என்கிறார்கள். இந்த நடிகர்கள் ஓர் அணியாக இணைந்து ஸ்பான்ஸர்கள் மற்றும் டி.வி சேனல்களின் உதவியோடு நிதி திரட்டி, அதை சினிமாத்துறையிலுள்ள கடைநிலையிலுள்ள தினக்கூலி தொழிலாளர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கப்போவதாகவும், அதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம், பாதுகாப்பாக இருங்கள் என்ற செய்தியையும் இப்படத்தின் முடிவில் சொல்லியிருக்கிறார்கள்.