கொரோனா வைரஸ் தடுப்புக்கான நிதியைத் திரட்ட இந்தியா – பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
“டிவி ஷோக்களில் பேசுறதா என் வேலை?” : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விளாசும் அக்தர்
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸை தடுக்க இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியளிக்குமாறு, பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் நிதி திரட்ட யோசனை தெரிவித்துள்ளார், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் “இப்போதுள்ள கடினமான சூழ்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரை நடத்த வேண்டும். இப்போதுள்ள சூழ்நிலையால் மக்கள் போட்டியின் முடிவைப் பெரிதும் எதிர்பார்க்கமாட்டார்கள். அந்தப் போட்டிகளில் கோலி சதமடித்தால் பாகிஸ்தான் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். அதேபோல பாபர் அசாம் சதமடித்தால் இந்தியர்கள் சந்தோஷப்படுவார்கள்” என்றார்.
மேலும் தொடர்ந்த அக்தர் “அப்படி நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இரு அணிகளும்தான். இந்தப் போட்டிகளை உலகம் முழுவதும் பலரும் கண்டு ரசிப்பார்கள். முதல் முறையாக இரு அணிகளும் தங்களுடைய நாட்டு நலனுக்காக விளையாடுவார்கள். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் சரிபாதியாக பங்கிட்டுக் கொள்ளலாம். கொரோனா வைரஸ் காரணமாக இரு நாடுகளுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
“இந்தியர்கள் பாகிஸ்தானுடன் போர் வேண்டாமென்றே நினைக்கிறார்கள்” ஷோயப் அக்தர் !
இரு நாடுகளின் உறவு குறித்துப் பேசிய அக்தர் “இப்போதுள்ள சூழ்நிலையில் அனைவரும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருக்கிறார்கள், அதனால் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். உடனடியாக போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதில்லை. கொரோனா பாதிப்புகள் குறைந்ததும், துபாய் போன்ற நாட்டில் இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியை நடத்தலாம். இதன் மூலம் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படும். மீண்டும் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும், அரசுகளுக்கு இடையிலான உறவும் மேம்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM