கடலூர் மாவட்டம், ஸ்ரீ முஷ்ணம் தாலுகா, ஸ்ரீநெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மதுரையில் ஓட்டுநராகப் பணிபுரிந்துவருகிறார். கொரோனா ஊரடங்கின் காரணமாக இவரால் சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லை.

அவரது மனைவி சுகுணா (வயது 39) ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் ஓட்டுநர் வேலை பார்த்துச் சம்பாதித்த மொத்தப் பணத்தையும் தன் மனைவியின் வைத்தியத்திற்குச் செலவு செய்தார் சக்திவேல்.
பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து வைத்தியம் பார்த்தவர், கடைசியாக பாண்டிச்சேரியில் வைத்து மனைவிக்கு சிகிச்சை பார்த்து வருகிறார். கீழ்க்கண்ட உயிர்காக்கும் மாத்திரைகளை வடலூரில் உள்ள தனியார் மருந்தகத்தில் தொடர்ந்து வாங்கிவந்துள்ளார்.
இந்த மாத்திரைகளில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ள HYDROXY CHLOROQUINE SULPHATE 200MG TAB தீர்ந்துள்ளது. இந்த மாத்திரையானது, தொடர்ந்து வாங்கிவரும் மருந்தகத்தில் ஸ்டாக் இல்லை என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து கடலூர் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள பல மருந்தகங்களில் தேடி அலைந்தும் மாத்திரை கிடைக்கவில்லை.
செய்வதறியாத சக்திவேல் , மதுரையில் தான் பணிபுரியும் அலுவலகத்தில் வழக்கறிஞர் சந்தனத்தின் உதவியுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை இயக்குநர், மருத்துவ ஊரகநலப்பணியாளர் ஆகியோருக்குத் தன் மனைவிக்கு மேற்கண்ட மாத்திரைகள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்ற கோரிக்கையோடு அவசரக் கடிதம் ஒன்றை இ-மெயில் மூலம் கடந்த 07.04.2020 அன்று அனுப்பியுள்ளார். மேலும் தொலைபேசியிலும் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

அதன் அடிப்படையில் ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் ஏற்பாட்டின் பேரில் ஸ்ரீநெடுஞ்சேரியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அவர்களின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று மாத்திரை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவரும் மேலிடத்திலிருந்து தகவல் வந்தது அந்த மாத்திரை ஸ்டாக் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தப் பதிலால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்த சக்திவேல் இன்று (09.04.2020) தமிழக சுகாதாரத்துறைச் செயலர் மின்னஞ்சலுக்கு இ-மெயில் மூலம் நடந்த அனைத்து விவரங்களையும் எழுதி அனுப்பியுள்ளார். மேலும், அலுவலக எண்ணுக்கும் தொடர்புகொண்டு பேசியுள்ளார். முறையான பதில் கிடைக்கவில்லை.

இந்த மாத்திரைகள் கொரோனா சிகிச்சையில் பயன்படும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இரு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அப்பொழுதிலிருந்து முன்பைவிட இந்த மாத்திரை மருத்துவச் சந்தைகளில் அதிக முக்கியத்துவம் பெற்றது.
அதோடு இந்த மாத்திரையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்தியா தடை விதித்தது. சில நாள்களுக்கு முன்னர், டிரம்ப் இந்தியா இந்த மாத்திரைகளை அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும் என்றும் மிரட்டும் தொனியில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து தற்பொழுது டிரம்பின் கோரிக்கையை ஏற்ற இந்தியப் பிரதமர். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த சில நாள்களாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் கடும் தட்டுப்பாட்டில் உள்ளன. மருந்து நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களும் மாத்திரைகளைப் பதுக்கும் செயல்களில் ஈட்டுப்பட்டுள்ளார்களா என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது. மேலும் வருங்காலங்களில் தமிழகத்தில் அனைத்துத் தனியார் மற்றும் அரசு மருந்தகங்களில் எவ்வித தட்டுப்பாடின்றி இந்த மாத்திரை கிடைக்குமா என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சமூக ஆர்வலரும் வழக்கறிஞர்கள் தோழமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்தனம் நம்மிடம், “கடந்த இரண்டு நாள்களாக HYDROXY CHLOROQUINE SULPHATE 200MG TAB மாத்திரைக்காக கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றும், அவர்களால் ஏற்பாடு செய்ய முடியவில்லை. இந்த ஒருவரைப்போல இன்னும் பலர் இம்மாத்திரை கிடைக்காது அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. சுகாதாரத் துறைச் செயலர் உடனடியாகச் செயல்பட்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தனியார் மற்றும் அரசு மருந்தகங்களிலும் உயிர்காக்கும் மருந்து தட்டுப்பாடின்றிக் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் சக்திவேலின் மனைவிக்கு இந்த மாத்திரைகள் உடனடியாகக் கிடைக்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.

இந்தப் பிரச்னை தொடர்பாகத் தமிழக சுகாதாரத் துறை மருந்து கொள்முதல் துறையைச் சார்ந்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “தமிழக அரசிடம் தேவைக்கு அதிகமாகவே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கையிருப்பு உள்ளது. மேலும், இன்னும் சில தினங்களில் நம்மிடம் உள்ள அளவை விட இன்னும் அதிகளவு மாத்திரைகள் தமிழகம் வந்து சேரும். தமிழகத்தின் அனைத்து மாவட்ட மருந்துக் கிடங்கில் இந்த மாத்திரை இருப்பு உள்ளது உறுதி செய்யப்படும்.
அதோடு, நீங்கள் கூறும் அந்த நபருக்கும் உடனடியாக மாத்திரை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். சில தனியார் மருந்தகங்களில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை தட்டுப்பாடு ஏற்படக் காரணம் பொதுமக்கள் பலர், இந்த மாத்திரை எடுத்துக்கொண்டால் தங்களுக்குக் கொரோனா வராது என்று வாங்கி வைத்திருப்பதனால்தான். தமிழக அரசிடம் அனைத்து உயிர் காக்கும் மருத்து மற்றும் மாத்திரைகள் தேவைக்கு அதிகமான அளவு கையிருப்பு உள்ளது. எனவே மக்கள் யாரும் அச்சம் கொள்ளவேண்டாம்” எனக் கூறினார்.
இந்த சமயத்தில், உயிர்காக்கும் மருந்து மற்றும் மாத்திரைகளை அனைத்து அரசு மற்றும் தனியார் மருந்தகங்களிலும் தங்குதடையின்றிக் கிடைக்கச் செய்யவேண்டும். எவ்வித மருந்துப் பதுக்கல்கள் இல்லாமல் அரசு பார்த்துக்கொள்ளவேண்டும். என்பதே அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோளாக உள்ளது.
#GameCorner
கொரோனா அச்சம், லாக் டவுன் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.