பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தமிழகத்திலிருந்து இந்தியாவின் முதல் பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்றவர் சுவாமிநாதன். இவர் பண்டித நேருவிடம் நேரடியாகப் பணியாற்றியவர். இவருடைய மகன் சிவராம். டெல்லியில், பணிச்சுமை காரணமாக, தன் மகன் சிவராமை பள்ளியில் சேர்க்க தனது மைத்துனரோடு அனுப்பியிருக்கிறார். அந்தப் பள்ளியில் நுழைவுத்தேர்வு வைத்திருக்கிறார்கள். அதில் சிவராம் தேர்ச்சி பெற்றவுடன், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை சிவராமை சேர்க்க பெற்றோருடன் வரச் சொல்லியிருக்கிறார். அடுத்த நாள் கையொப்பமிடும்போதுதான் சுவாமிநாதனுக்கு தெரிந்திருக்கிறது, சிவராமை நான்காம் வகுப்பில் சேர்க்கிறார்கள் என்ற தகவல்.

Dr. சுவாமிநாதன் சிவராம்

உண்மையில் சிவராம் படிக்க வேண்டியது மூன்றாம் வகுப்பு. இதை சுவாமிநாதன் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட தலைமை ஆசிரியை, சிவராம் எழுதி தேர்ச்சி பெற்றது நான்காம் வகுப்பு நுழைவுத் தேர்வு, எனவே நான்காவது படிக்கட்டும் என்று சொல்லிவிட்டார். தவறுதலாக மூன்றாம் வகுப்பு நுழைவுத்தேர்வு நடக்கும் அறைக்குப் பதிலாக, நான்காம் வகுப்பு நுழைவுத் தேர்வு நடக்கும் அறையில் நுழைந்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார் சிவராம்.

தமிழில் உள்ள பழமொழி, `விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பதற்கான உதாரணம் இது. பள்ளிப்படிப்பை முடித்த சிவராமால் டெல்லியில் கல்லூரியில் சேர முடியவில்லை. ஏனென்றால் அங்கே கல்லூரியில் சேர 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். சிவராமுக்கு வயது 16 தான். எனவே தமிழகம் திரும்பி, சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை வேதியியல் படித்தார்.

ஐஐடி கான்பூரில் முதுகலை படிப்பை முடித்துவிட்டு, அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழகங்களில் ஒன்றான பர்டியூ பல்கலைகழகத்தில் (Purdue University) முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அங்கே இவருடைய நெறியாளர் (PhD Mentor), நோபல் பரிசு பெற்ற ஹெர்பர்ட் பிரவுன். சிவராமுடன் ஆராய்ச்சி செய்த இன்னொருவரும் நோபல் பரிசு பெற்றார், அவர் நெகிஸி. அதன்பின் ஏக்ரான் பல்கலைக்கழகத்தில் (University of Akron) ஆராய்ச்சி செய்துவிட்டு இந்தியா திரும்பிய சிவராம் குஜராத்தில் உள்ள IPCL இல் தனது ஆராய்ச்சியைத் தொடங்கினார்.

விருது பெறும் Dr. சிவராம்

அந்தச் சமயத்தில் சிவராம் அறிமுகம் செய்த ஒரு பொருள், இந்திய மக்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றைக்கு, பாலை (Milk) பாத்திரங்களில் வாங்க வேண்டும். இதனால் பாலை நீண்ட தூரம் எடுத்துச் செல்வது, சேமிப்பது ஆகியவை கடினமானது. எனவே, உற்பத்தி செய்த பால் பெருமளவில் வீணாகியது. இதில் மாற்றம் அவசியம் என உணர்ந்த சிவராமும் அவர் நண்பர் வரதராஜனும் அமுல் அமைப்பை நிறுவிய வர்கீஸ் குரியனை சந்தித்து, பாலை பாக்கெட்டுகளில் அடைக்கலாம் என்று விளக்கினர். தொலைநோக்கு பார்வை கொண்ட குரியன், இந்த யோசனையை உடனே ஏற்றுக்கொண்டார். எளிதான வேலையில்லை என்றாலும், சிவராம் குழுவினர் பாலை பாக்கெட்டுகளில் அடைத்துக் காட்டினர். அன்றைக்கு அர்ப்பணிப்புடன் சிவராம், வரதராஜன், குரியன் ஆகியோர் செயல்பட்டதன் பலனை நாம் அனுபவிக்கிறோம். பாலை பாக்கெட்டுகளில் அடைக்கும் முறையால், பல கோடி இந்தியர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.

பின்னர் சிவராம் CSIR-NCL இல் பணியில் சேர்ந்தார். அப்போது அவர் கண்டுபிடித்த பாலிகார்பனேட்டை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதுதான் வாகன முகப்பு விளக்குகள் (Head Lights). இந்தத் துறையில் ஜாம்பவான் அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக் (General Electric). சிவராமின் கண்டுபிடிப்பை, CSIR-NCL இன் இயக்குநராக இருந்த மஷேல்கர் GE யின் தலைவரிடம் சொன்னபோது, அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருக்கிறார்.

இந்தக் கண்டுபிடிப்பை வேறு கம்பெனிகளுக்குக் கொடுத்தால், GE-க்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே, சிவராமின் கண்டுபிடிப்பை மொத்தமாக வாங்கிக்கொண்டது GE. அதோடு மட்டுமல்ல, இவ்வளவு திறமையான விஞ்ஞானிகள் இந்தியாவில் இருக்கும்போது, நமக்கு அங்கே ஒரு கிளை ஆய்வகம் வேண்டுமென்று முடிவு செய்து, பெங்களூரில் GE தொடங்கப்பட்டது. அதுதான் சர்வதேச கம்பெனிகள் இந்தியாவில் கிளை தொடங்க காரணமான துவக்கப்புள்ளிகளில் ஒன்று. சிவராமின் கண்டுபிடிப்பு இந்திய அறிவியல் தொழில்நுட்பத்தில், பொருளாதாரத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என கவனியுங்கள்.

Dr. Swaminathan Sivaram

1991-ல், இந்தியா மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இருந்தது. CSIR-NCL ஆய்வகத்திடம் மின்கட்டணம் செலுத்தப் பணமில்லை. அன்றைய இயக்குநர் மஷேல்கர், கடன் வாங்கி ஆய்வகத்தை நடத்துவது என்று முடிவு செய்தார். கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்த வேண்டும், அதற்கு என்னுடன் இணைந்து பணி செய்ய முடியுமா என சிவராம் மற்றும் பால் ரத்தினசாமியிடம் கேட்டிருக்கிறார். இருவரும் சரி என்று சொல்லி கடுமையாக உழைத்து கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்தினர்.

2005-ம் ஆண்டு கடைசி காசோலையில் கையொப்பமிட்டார், சிவராம். உலக வரலாற்றில் கடன் வாங்கி, ஆராய்ச்சி செய்து அதில் வெற்றி பெற்ற ஒரே அரசாங்க ஆராய்ச்சி நிறுவனம் CSIR-NCL. இதில் முக்கிய பங்கு சிவராமுக்கு உண்டு. CSIR-NCL பொருளாதார சிக்கலைச் சந்தித்தபோது, நிதியமைச்சராக இருந்தவர் மன்மோகன் சிங். இதை தெரிந்திருந்த காரணத்தால், 2004-ல் பிரதமரான மன்மோகன் சிங் மிகப்பெரிய பொருளாதார உதவியைச் செய்தார்.

சிவராமின் பங்களிப்புகளில் சிலவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறேன். அவருடைய ஆகச்சிறந்த பங்களிப்புகளில் ஒன்றை சுட்டக்காட்டி இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

போபால் விஷ வாயு விபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். லட்சக்கணக்காண மக்கள் காயமடைந்தனர். இந்த பிரச்னையை சரி செய்ய நியமிக்கப்பட்ட குழுவில் இருந்தவர் சிவராம். யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் இருந்த இரண்டு கொள்கலன்களில் ஒன்று வெடித்ததால் மயங்கிக் கிடந்தவர்கள் பல லட்சம் பேர். அந்த நேரத்தில், இரண்டாவது டேங்க் வெடித்து, வேதிப் பொருள்கள் வெளியேறி இருந்தால் மயங்கிக் கிடந்த பல லட்சம் பேர் மரணமடைந்திருக்கக் கூடும். அவ்வாறு நடக்க விடாமல் தடுத்தவர் சிவராம். எனவே, பல லட்சம் இந்திய உயிர்களைக் காப்பாற்றியவர் சிவராம். எல்லையில் இருப்பவர்கள் மட்டும் உயிர் காப்பவர்கள் அல்ல என்பதற்கு, சிவராமின் பணி ஓர் உதாரணம். சிவராம் CSIR-NCL இன் இயக்குநராக இருந்து திறம்பட செயல்பட்டார்.

CSIR-NCL இயக்குநராக இருந்து பணி ஓய்வு பெற்ற பிறகு, ஐந்தாண்டு காலம் Bhatnagar Fellow ஆக இருந்தார். தற்போது, புனேயில் உள்ள Indian Institute of Science Education and Research இல் Honarary Professor ஆக இருக்கிறார். இந்தியாவின் பல முன்னணி தொழில் நிறுவனங்களின் ஆலோசகராகவும் இருக்கிறார். அவரிடம் பேசிவிட்டு வரும்போதெல்லாம், ஒரு நூலகம் என்னிடம் பேசிக்கொண்டிருந்ததுபோல உணர்வேன்.

Dr. Swaminathan Sivaram

பின் குறிப்பு 1: இந்திய அரசு சிவராமுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியிருக்கிறது.

பின் குறிப்பு 2: சிவராம் படித்த பர்டியூ பல்கலைக்கழகம் சிவராமுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அந்நிகழ்வில் சிவராமின் host நோபல் பரிசு பெற்ற நெகிஸி.

பின் குறிப்பு 3: இந்தியாவில் அதிக காப்புரிமை (Patents) வைத்திருப்பவர் சிவராம்.

பின் குறிப்பு 4: General Electric நிறுவனர்களில் ஒருவர் தாமஸ் ஆல்வா எடிசன்.

பின் குறிப்பு 5: சிவராமின் மனைவி ரமா ஒரு சிறந்த சமூக சேவகி. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனையும் ஆதரவும் வழங்குகிறார்.

முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

#GameCorner

கொரோனா அச்சம், லாக் டவுன் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.

வடிவேலு ஆர்மியா நீங்கள்…? Click and check!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.