கொரோனா நோய் தொற்றின் காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள மலர் வணிக வளாகம் செயல்படவில்லை. தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் பூக்களின் விலையை நிர்ணயிக்கும் தோவாளை மலர்ச் சந்தை செயல்படாததால் பூ விவசாயிகள், பூ கட்டுவோர், பூ வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மலர்ந்த பூக்கள் செடியிலேயே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மலர் வியாபாரம் விவசாயம் சார்ந்த தொழில் என்பதால் அதைச் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதைத் தொடர்ந்து தோவாளை மலர்ச் சந்தை செயல்பட முதல்வர் அனுமதி அளித்துள்ளதாகத் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அறிக்கை மூலம் அறிவித்துள்ளார். இதனால் மலர் விவசாயிகள், வியாரிகள் உள்ளிட்டவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து தோவாளையைச் சேர்ந்த மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், “தோவாளையில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மலர் வணிக வளாகம் கொரோனா தொற்று காரணமாகச் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது.

இதனால் பூ விவசாயிகள், பூ வியாபாரிகள், பூப்பறிப்பவர்கள், பூக்கட்டும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு சில சலுகைகளை அறிவித்திருந்தார். அதில் விவசாயப் பணிகளைத் தடைசெய்யக் கூடாது என்று அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து மலர் வியாபாரமும் விவசாயத்தைச் சார்ந்த தொழில்தான் எனவும், மலர் வியாபாரத்தைக் காப்பாற்ற வேண்டும் எனவும் தோவாளை பூ வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், பூப்பறிக்கும் தொழிலாளர்கள், பூக்கட்டும் தொழிலாளர்களும் கோரிக்கை வைத்தார்கள்.
இந்தக் கோரிக்கையைத் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அவர் இந்தக் கோரிக்கையை உடனடியாகத் தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றார். முதல்வர் இந்தக் கோரிக்கையை ஏற்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தனிமனித இடைவெளி விட்டு அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பூ வியாபாரம் செய்துகொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார்.

தோவாளை மலர்ச் சந்தை செயல்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாள்களில் மலர்ச் சந்தை செயல்படும். மேலும், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பிற பகுதிகளுக்கு பூக்களை எடுத்துச் செல்வது குறித்தும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். விரைவில் அதற்கான அனுமதி கிடைக்க வாய்பு உள்ளது” என்றார்.
#GameCorner
கொரோனா அச்சம், லாக் டவுன் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.