`கொரோனா வைரஸ்’ இதை ஒரு மருத்துவ பேரிடர் என்று அழைக்கின்றனர். உலகநாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது இந்தப் பெயர். பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளே என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் வெள்ளை உடை அணிந்த மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் முன்னின்று போராடி வருகின்றனர்.

போர் வீரனின் தியாகத்துக்கு சற்று சளைத்தது இல்லை இவர்களது பணி. இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில்தான் நல்ல மனிதர்களின் முகங்கள் வெளியுலகுக்குத் தெரிய வருகிறது. மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 95 மூதாட்டி ஒருவர் தன்னுடைய ஒருமாத பென்ஷன் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்தான் 95 வயது மூதாட்டியான Nghakliani, கொரோனாவுக்கு எதிரான போரில் தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய ஒரு மாத பென்ஷன் தொகையாக ரூ.14,500 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

Nghakliani, கணவர் Pu Lalrinliana மிசோரம் யூனியன் பிரதேசமாக இருந்தபோது 1972-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர்களுக்கு 7 குழந்தைகள் உள்ளனர்.
Pu Lalrinliana 1978-ம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். தற்போது அந்த மூதாட்டிக்கு பென்ஷன் தொகை வருகிறது. இதைத்தான் தற்போது கொரோனா நிதிக்காகக் கொடுத்துள்ளார். இவர் தையல் பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த தள்ளாத வயதில் தையல் இயந்திரத்தில் அமர்ந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்காக, தானே கைப்பட முகக் கவசங்களைத் தைத்து வழங்கியுள்ளார். மிசோரம் முதலமைச்சரை சோரம் தாங்கா அவரது செயலைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
` Nghakliani தன்னுடைய ஒருமாத பென்ஷன் மட்டும் தரவில்லை. சில மாஸ்க்குளைக் கொடுத்து யாருக்காவது தேவைப்பட்டால் கொடுங்கள் என்றார். மிசோரம் அவருக்குத் தலைவணங்குகிறது’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.