கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும் தவிப்பில் இருக்கிறார்கள். இந்நிலையில், சித்த மருத்துவத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த கபசுரக் குடிநீர் பருகினால் நல்லது எனச் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, தமிழகம் முழுவதும் மக்கள் கபசுரக் குடிநீர் பொடியைத் தேடி அலைகிறார்கள். மாவட்டங்களில், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுகளில் இது வழங்கப்பட்டாலும், ஊரடங்கு உத்தரவால் சித்த மருந்துக் கடைகளில் இதற்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், ‘கபசுரக் குடிநீர் தயாரிப்புக்கான பொருள்கள் கிடைக்கும்’ என ஆன்லைன் விளம்பரம் மூலம் திருச்சியில், அரசு அங்கீகாரமின்றி கபசுரக் குடிநீர் பாக்கெட் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட சித்த மருத்துவத் துறையினருக்கு புகார் வந்தது.

அடுத்தடுத்த விசாரணையில், திருச்சி கே.கே. நகர் இந்திரா நகரில் இயங்கிவந்த ‘ஞானன் ஆயுர்வேத சித்த மருத்துவமனை’யில் கபசுரக் குடிநீர் தயாரிக்கத் தேவையான பொடியை உரிய அனுமதியில்லாமல் தயார்செய்து விற்பனை செய்வதும், அதுகுறித்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ததும், அந்த விளம்பரங்களைப் பார்த்து ஏராளமான பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள கபசுர பாக்கெட்டுகளை வாங்கிச்செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து, திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.காமராஜ், கே.கே. நகர் இந்திரா நகரில் இயங்கிவந்த தனியார் சித்த மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தினார். சோதனையில், அந்த மருத்துவமனையில்அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்த 10 கிலோ கபசுர பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அனுமதியின்றி கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்ததற்காக தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், “கடைகளில் உள்ள அனைத்தும் கபசுரக் குடிநீர் இல்லை. அரசின் முறையான அனுமதி இல்லாமல் இதுபோன்று விற்பனை செய்யும் கபசுர பாக்கெட்டுகளை யாரும் வாங்கி அருந்த வேண்டாம்.

மேலும், விற்பனை செய்யும் நபர்களிடம் பொருள்களை வாங்கும்போது தயாரிப்புத் தேதி, காலாவதி தேதி, தயாரிப்புக்கான அனுமதி எண் போன்றவை சரியாக உள்ளதா எனச் சரிபார்த்து, அதற்கான ரசீது கேட்டுப் பெறவேண்டியது அவசியம். இதுமட்டுமல்லாமல், சித்த மருத்துவத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை மட்டும் வாங்க வேண்டும். பேரிடர் மற்றும் இடர்பாடான இந்தக் காலகட்டத்தில் பொதுமக்களிடையே விழிப்புஉணர்வு அவசியம்” என்றார்.
Also Read: `நாங்கள் சொன்னதை தமிழக அரசு கேட்டிருந்தால்?!’ -கொரோனா விவகாரத்தில் கே.என்.நேரு ஆதங்கம்