இந்திய சினிமாக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். அவற்றில் டோலிவுட்டுக்கான அடையாளம் மாஸும் அதற்காக தூவப்படும் மசாலாவும்தான். நாகேஸ்வர ராவ் முதல் நாகசைதன்யா வரை என ஒவ்வொரு தலைமுறையும் அந்தந்த காலத்தில் இருந்த சினிமா நாயகர்களைக் கொண்டாடித் தீர்ப்பது வழக்கம். ஒரு நடிகரை பிடித்துவிட்டது என்றால் அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் கொண்டாடும் தேசம் அது. அந்த நாயகர்களே அவர்கள் நடித்த படங்கள் ஃப்ளாப் என்றாலும் அதை அவர்களின் ரசிகர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அந்தளவுக்கு தங்களது திரை நாயகர்களை உச்சத்தில் அமர்த்தி அழகு பார்ப்பார்கள். திரைத்துறையில் 17 ஆண்டுகள்… பிரமாண்ட வெற்றிகள், படுதோல்விகள்… என அனைத்தையும் சந்தித்து இன்று டோலிவுட்டின் ஸ்டைலிஷ் ஸ்டாராக இருக்கும் ஸ்டைலிஷ் நாயகன் அல்லு அர்ஜுனுக்குப் பிறந்தநாள்!
2003… மெகாஸ்டார், பவர் ஸ்டார், சூப்பர் ஸ்டார் எனப் பல ஸ்டார்களின் பெயர் கொடிக்கட்டி பறந்துகொண்டிருந்த காலம். அந்தத் தருணத்தில் என்ட்ரி கொடுத்த அல்லு அர்ஜுன், ஸ்டைலிஷ் ஸ்டாராக மாறியது சாதாரண விஷயமல்ல. குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் நாயகனாக அறிமுகமானது `கங்கோத்ரி’ எனும் படத்தில்தான். ஷோபன் பாபு, என்.டி.ஆர், நாகேஸ்வர ராவ், சிரஞ்சீவி, நாகர்ஜுனா, பாலகிருஷ்ணா என டோலிவுட்டின் பெரும்பாலான நடிகர்களை இயக்கிய ராகவேந்திர ராவின் 100-வது படம் அது. படத்துக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை என்றாலும் படம் தோற்கவில்லை. அடுத்த படம், `ஆர்யா’ (`குட்டி’ படத்தின் ஒரிஜினல் வெர்ஷன்) சூப்பர் ஹிட்! இப்படத்தின் இயக்குநர் சுகுமாருக்கு முதல் படம். இப்படத்தின் மூலம் அல்லு அர்ஜுனை அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது.

பிறகு, `Bunny’ எனச் செல்லமாக அழைக்கப்பட்டவர், இன்றுவரை அவரது ரசிகர்களால் அப்படிதான் அழைக்கப்படுகிறார். `ஹேப்பி’, `தேசமுத்ரு’, `பருகு’ என வருடத்துக்கு ஒரு படம்தான் அல்லு அர்ஜுனின் டார்கெட். `தேசமுத்ரு’ படத்திலிருந்து `ஸ்டைலிஷ் ஸ்டார்’ என்ற அடைமொழியுடன் டைட்டில் கார்டு வரத் தொடங்கியது. காரணம், அசத்தலான நடனமும் ஸ்டைலான உடல் மொழியும். முன்னணி நட்சத்திரமான பிறகுதான், தனக்கான பிஸினஸை நிலைநிறுத்திக்கொள்ளவும், நம்மை நம்பி பணம் போடுபவர்கள் லாபமடையவும் யோசித்து பல கதைகள் கேட்டு அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நடிப்பார்கள். ஆனால், அல்லு அர்ஜுன் இளம் நாயகனாக இருக்கும்போதே அப்படிதான், தயாரிப்பாளர் மகன் அல்லவா?
`ஆர்யா 2’… மீண்டும் அல்லு அர்ஜுன் – சுகுமார் – தேவி ஶ்ரீ பிரசாத் கூட்டணி. `ஆர்யா’வைக் காட்டிலும் இந்தப் படம் அதிரி புதிரி ஹிட்! அல்லு அர்ஜுன் – காஜல் அகர்வால் ஜோடிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. `மை லவ் இஸ் கான்’, `எகிரே மப்புல லோனா’, `உப்பனந்திக்கி ப்ரேமகி’ என அனைத்து பாடல்களுக்குமே செம ரெஸ்பான்ஸ்! வழக்கமான அல்லு அர்ஜுன் படங்களைக் காட்டிலும் வித்தியாசமானது `வேதம்’ (`வானம்’ படத்தின் ஒரிஜினல் வெர்ஷன்). சுகுமாருடன் அல்லு அர்ஜுன் சேரும்போது நடந்த மேஜிக், த்ரிவிக்ரம் ஶ்ரீநிவாஸுடன் இணையும்போதும் நிகழ்ந்தது. இந்தக் காம்போவில் உருவான முதல் படம், `ஜுலாயி’. ஆக்ஷன் காமெடி ஜானரில் கலக்கினார், அல்லு அர்ஜுன். டோலிவுட்டில் ஹிட்டான இந்தப் படம்தான் தமிழில் பிரசாந்த் நடித்து `சாஹசம்’ என்று வெளியாகி மாபெரும் தோல்வியைத் தழுவியது.

`இதரமாய்தல்லோ’, `ரேஸூகுர்ரம்’, `S/o சத்யமூர்த்தி’, `சராய்னோடு’ என வருடா வருடம் ஒரு படம் வெளியானது. பாக்ஸ் ஆபீஸில் படத்துக்கு கலெக்ஷன் இருந்தாலும் மக்கள் என்ன விரும்புகிறார்கள், அவர்களுக்குப் பிடிக்குதா இல்லையா என்பதும்தான் அந்த நடிகருக்கான மார்க்கெட் மதிப்பை நிர்ணயிக்க வைக்கும். அந்த நடிகர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் படம் நன்றாக இருந்தால்கூட அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால் படத்துக்கு நெகட்டிவ் ஷேட் விழுந்துவிடும். அப்படியான படங்கள் பலவற்றைக் கடந்துள்ளார், அல்லு அர்ஜுன்.
`நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ படத்தின் தோல்விக்குப் பிறகு, ஒரு வருடம் முழுக்க கதைகள் மட்டுமே கேட்டு வந்தார். காரணம், அவருக்குப் படம் நல்லாயிருக்கு, படம் ஹிட் என்ற வார்த்தைகளோ தேவையில்லை. அவருக்குத் தேவைப்பட்டது `ப்ளாக்பஸ்டர்’ என்ற வார்த்தை மட்டுமே. நம்மை நம்பி தியேட்டருக்கு வரும் மக்களை என்டர்டெயின் செய்ய வேண்டும் என்பதே அவரின் எண்ணம். அந்த ஒரு வருடத்தில் மூன்று கதைகளை ஓகே செய்தார். அதில் ஒன்றுதான் சமீபமாக வெளியான `அலா வைகுந்தபுரமுலோ’. அவர் நினைத்ததைவிட `சூப்பர் ப்ளாக்பஸ்டர்’ இதில் கிடைத்தது. 200 கோடி வசூல். ‘Bunny’யாக பரிச்சயமானவர் இதில் `Bantu’வாக அசத்தினார்.

நீண்ட காலத்துக்குப் பிறகு, இப்படியொரு ப்ளாக்பஸ்டர் என்பதால் கொண்டாடித் தீர்த்தனர் அவரது ரசிகர்கள். சாதாரண கதை. ஆனால், அதை தாங்கிச் சென்று படத்தை தூக்கி நிறுத்தியது அல்லு அர்ஜுனும் தமனின் இசையும். அல்லு அர்ஜுன் திரையில் இருக்கும் ஒவ்வொரு ஃப்ரேமும் அப்படியிருக்கும். அவருக்கே உரிய அந்த நகைச்சுவை, ஸ்டைல், உடல் மொழி, நடனம் என அனைத்தும் நேர்கோட்டில் பயணித்ததுதான் அந்தக் கேரக்டரின் வெற்றிக்குக் காரணம் எனலாம். குறிப்பாக போர்டு ரூம் சீன் ஒன்றில் அவரின் ஸ்வாக்… ப்பா… அது அவரால் மட்டுமே முடியும். அல்லு அர்ஜுன்… அல்லு அர்ஜுன் அந்தே..!
இந்தப் படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் யூடியூபில் சென்சேஷனானது. குறிப்பாக, `புட்டபொம்மா’வும் அதில் இடம்பெற்ற நடனமும்.
அடுத்ததாக, சுகுமார் – அல்லு அர்ஜுன் – தேவிஶ்ரீபிரசாத் காம்போவில் உருவாகிவரும் படம், புஷ்பா. `ஆர்யா’, `ஆர்யா 2′ வெற்றியைத் தொடர்ந்து, 10 ஆண்டுகள் கழித்து மூன்றாவது முறையாக இந்த காம்போ இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எங்கேயோ எகிறியுள்ளது. இவரது பிறந்தநாளையொட்டி அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும், புஷ்பா என்ற டைட்டிலையும் இன்று வெளியிட்டிருக்கிறது படக்குழு. அதுமட்டுமின்றி படத்தில் இவர் லாரி டிரைவராக நடிப்பதால் அந்த கெட்அப்பிலேயே வெளியான இவரது ஃபர்ஸ்ட்லுக்தான் டிவிட்டரின் இன்றைய டிரெண்டிங்.

இதில்தான் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். மற்றொரு படம், இயக்குநர் வேணு ஶ்ரீராம் இயக்கத்தில் உருவாகும் `ஐகான்’.
நடனம்தான் அல்லு அர்ஜுனை மற்ற நடிகர்களிடம் இருந்து தனித்துத் தெரிய வைக்கிறது. விஜய் படங்களில் அவரின் நடனம் பேசப்படுவதால் நிறைய பாடல்கள் ஹிட்டாகி இருக்கிறது. அதுபோல, இவரின் நடனத்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ரொமான்ஸ், காமெடி, ஸ்டன்ட், நடனம் என ஆல் இன் ஆல் அழகுராஜாவாக இருக்கும் அல்லு அர்ஜுன் திரைத்துறைக்கு வந்து 17 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இத்தனை வருடங்களில் 19 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். கமர்ஷியல் என்டர்டெயினராக இருக்கவே ஆசை எனப் பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

தென்னிந்திய சினிமாக்களில் சிறப்பாக நடனமாடும் ஹீரோக்களின் பட்டியல் எடுத்தால் அதில் நிச்சயம் முதல் வரிசையில் இருப்பார், அல்லு அர்ஜுன். முறைப்படி நடனம் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் சிறுவயதில் கற்றுக்கொண்ட ஜிம்னாஸ்டிக்ஸ்தான் தற்போது நடனமாடுவதற்கும் ஸ்டன்ட் செய்வதற்கும் உறுதுணையாக இருக்கிறதாம். அல்லு அர்ஜுனின் மொபைல், கார் என அவர் பயன்படுத்தும் எண்கள் 666 என்றுதான் முடியுமாம். அந்த நம்பரில் அப்படியொரு ஆர்வம். ஷூட்டிங் இல்லை என்றால் அதிகப்படியான நேரத்தை அவர் வீட்டிலுள்ள நீச்சல் குளத்தில்தான் செலவழிப்பார்.
ஒவ்வொரு படத்துக்கும் தனக்கான ஹேர் ஸ்டைல் எப்படி இருக்க வேண்டும் என்பதில் அதிகம் மெனக்கெடும் இவரின் புதுப்படம் ஆரம்பமாக இருக்கிறது என்றால் அவரின் ஹேர் ஸ்டைலிஸ்ட்டுடன் பல மீட்டிங்குகள் நடக்குமாம். மைக்கேல் ஜாக்சன், கமல்ஹாசன், மோகன்லால் இந்த மூவரின் தீவிர ரசிகன். ஒரு தெலுங்கு நடிகருக்கு கேரளாவில் மிகுந்த செல்வாக்கு இருக்கிறது என்றால் அது இவருக்கு மட்டும்தான். கேரளாவில் இவரை `மல்லு அர்ஜுன்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள். வெளிநாடுகளில் தன்னுடைய படத்துக்கான ஷூட்டிங் நிறைவுபெற்றால் மற்றவர்களை அனுப்பிவிட்டு அந்த நாட்டில் சில நாள்கள் தங்கி ஊர் சுற்றி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். பள்ளியில் படிக்கும்போது கபடி அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார்.

அப்பா அல்லு அரவிந்த் பெரிய தயாரிப்பாளர், தாத்தா அல்லு ராமலிங்கையா புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர், தாய்மாமா சிரஞ்சீவி டோலிவுட்டின் மெகாஸ்டார்… இந்தளவுக்கான குடும்பப் பின்னணி இருந்ததுனாலதான் சினிமாவுக்கு எளிதாக வந்துவிட்டார் என்ற விமர்சனமும் உண்டு. இது போன்ற விமர்சனம் டோலிவுட்டில் இருக்கும் பல நடிகர்கள் சந்திக்கக்கூடியதும் கூட. ஆனால், நுழைவுச்சீட்டு மட்டும்தான் அவர்களால் கொடுக்கப்படும். இத்தனை வருடங்கள் மக்கள் செல்வாக்குடன் ரசிகர்கள் ஆதரவில் முன்னணி நாயகர்களாக பயணிப்பது என்பது ஒவ்வொருத்தரின் தனித்திறமையாலும் உழைப்பாலும் மட்டுமே சாத்தியம். சினிமா பின்னணியிருக்கும் பெரிய குடும்பத்திலிருந்து வந்து சோபிக்கமுடியாமல் போன பல பேரை பார்த்திருக்கிறோம். ஆக, மக்கள் கொண்டாடும் ஹீரோவாக உருவாவது சாதனை. அல்லு அர்ஜுன் அந்த ரகம்.
அப்பா அல்லு அரவிந்த் என்றால் அத்தனை மரியாதை; அத்தனை பிரியம். அப்பா தயாரிப்பில் இவர் நடிக்கும் படங்களில் இவருக்கான தற்போதைய மார்க்கெட் சம்பளம் என்னவோ அதை கொடுத்துவிடுவாராம். தொழில் வேறு; குடும்பம் வேறு என்பதில் தெளிவாக இருப்பாராம். தனக்கென நிரந்தர கேரவன் ஒன்றை 3.50 கோடிக்கு வாங்கி, அதைத் தனக்கு தகுந்தாற்போல் 3.50 கோடிக்கு வடிவமைத்திருக்கிறார், அதற்கு பெயர் `Falcon’. கூகுளில் அதிகம் தேடப்பட்ட தெலுங்கு நடிகர், அதிக ஹேஷ்டாக்குகள், 100 மில்லியன் வியூஸ்களை கடந்த முதல் தெலுங்குப் பாடல் இவருடையதுதான் என டிஜிட்டல் உலகில் அல்லு அர்ஜுனுக்கு ஏராளமான ரெக்கார்டுகள். ஆனால், அவரோ, `இந்த ரெக்கார்ட் எல்லாம் நிரந்தரம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் இது மாறும். ஆனால், ரசிகர்களின் எமோஷனும் அன்பும்தான் என்றும் நிரந்திரம்’ என்று ஒரு பேட்டியில் கூறிப்பிட்டிருக்கிறார்.

ஹைதராபாத்தில் வசித்தாலும் பிறந்து வளர்ந்த மெட்ராஸ் அவருக்கு என்றும் ஸ்பெஷல். நேரடி தமிழ் படத்தில் நடிக்க அத்தனை ஆசை. தமிழ் படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி பல வருடங்களாக கோலிவுட்டில் உலா வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால், சொந்த மண்ணில் அடிக்கும்போது பலமான அடியாக இருக்கவேண்டும் என்பதால் தான் பொறுமை காத்து வருவதாக பல இடங்களில் கூறியிருக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி என எந்த மொழியில் நடித்தாலும் அவரின் அசால்ட் ஹியூமர், அசத்தல் நடனம், அழகிய நடிப்பு ஆகியவை அல்லு அர்ஜுனை என்றும் ஸ்டைலிஷ் ஸ்டாராகவே வைத்திருக்கும்.
பிறந்தநாள் வாழ்த்துகள் `Stylish Star’ Bunny !