கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. சமூகவிலகல் மூலம் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்பதால் இந்த ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 773 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,194 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 402 பேர் இந்த நோய்த் தாக்கத்திலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 32 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.
Also Read: `ஊரடங்கை உடனடியாகத் திரும்பப் பெறும் முடிவு இல்லை?’ – அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மோடி
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலையடுத்து பல முக்கிய மருந்துகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியைத் தொடர்புகொண்டு பேசிய ட்ரம்ப், “மருந்துப் பொருள்கள் மீதான தடையை நீக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து மனிதாபிமான அடிப்படையில் பாராசிட்டமால் மற்றும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்துகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதுகுறித்து விளக்கமளித்த லாவ் அகர்வால், இப்போதைய தேவைக்கு மட்டுமல்ல எதிர்காலத்திலும் ஹைட்ராக்சிக்குளோரோயின் மருந்துகளுக்கு பற்றாக்குறை இருக்காது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது” என்றார். இந்தியாவில் இதுவரை 1,21,271 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அமலில் உள்ள 21 ஊரடங்கு தளர்த்தப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்ற குழப்பத்தில் மக்கள் இருக்கிறார்கள். அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் ஊரடங்கை உடனடியாகத் திரும்பப்பெறும் முடிவு இப்போது இல்லை எனக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.