வங்கிகளில் பலவிதமான கணக்குகள் இருந்தாலும், சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதிலும், மாதம் முழுவதும் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தில் செலவுகள் போக மீதமிருக்கும் தொகையை வங்கியில் போட்டு விட்டு வட்டியை எதிர்பார்ப்போர் ஏராளம்.

தங்கள் சேமிப்பின் மீதான அதிக வட்டி. வங்கியில் அவர்கள் வாங்கியுள்ள கடனுக்குக் குறைந்த வட்டி இவை இரண்டைதான் மக்கள் வங்கிகளிடம் எதிர்பார்க்கிறார்கள். சேமிப்பு, கடன் இரண்டுக்குமான வட்டி விகிதங்கள் ஒரு வங்கியின் நிதிக் கொள்கை மற்றும் ரிசர்வ் வங்கியின் வரைமுறைகளுக்கு உட்பட்டு விதிக்கப்படுகிறது. பெரும்பாலும் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.
Also Read: `பிறந்த குழந்தையைக்கூட கொஞ்ச முடியவில்லை…’ – கொரோனா தொற்று பாதிப்பால் கலங்கிய தஞ்சைப் பெண்
இதை உணர்ந்தவர்கள், தங்களுக்கு ஏற்ற வங்கியைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்கிறார்கள். சேமிப்புக் கணக்கில் பணத்தைப் போட்டால், நல்ல வட்டி கிடைக்கும் என்பதுதான் இன்றளவும் மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கை. அது உண்மைதான். ஆனால், வங்கிகளால், முதலீட்டாளர்களுக்கு நல்ல வட்டியை அளிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக, அனைத்துத் துறைகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் பணப் புழக்கத்தை அதிகரிக்கப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ரிசர்வ் வங்கி. இந்நிலையில், பணப் புழக்கத்தை அதிகரித்து நிதியின் நிலைத்தன்மையை உறுதி செய்ய நாட்டின் மொத்த உற்பத்தியில்(GDP) 3.5 சதவிகிதத்தை வங்கிகளுக்கு வழங்கியுள்ளது ரிசர்வ் வங்கி.

ஸ்டேட் வங்கி (State Bank) சேமிப்புக் கணக்கில் ஒரு லட்சத்திற்கு மேலாக இருப்பு வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்சமாக 3.25% வரை வட்டி வழங்கியது. நாட்டில் நிலவும் நெருக்கடியைக் கருத்தில்கொண்டு, ஸ்டேட் வங்கி தனது அடிப்படை இயங்கு கொள்கைகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. நாட்டில் நிலவும் அசாதாரணச் சூழலைக் கருத்தில் கொண்டு, ‘குறைந்தபட்ச இருப்பு’ மீதான தளர்வை நடைமுறைப்படுத்தியது ஸ்டேட் வங்கி. அது மக்களுக்குச் சற்று ஆறுதலாக அமைந்தது.
ஆனால், அந்த வங்கி கடந்த மார்ச் 11-ம் தேதி, சேமிப்புக் கணக்குகளின் மீதான வட்டி விகிதத்தை 3.25 சதவிகிதத்திலிருந்து 3.0 சதவிகிதமாகக் குறைத்தது.
இந்நிலையில், அந்த வங்கி மீண்டும் சேமிப்புக் கணக்குகளின் மீதான வட்டி விகிதத்தை 3 சதவிகிதத்திலிருந்து 2.75 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. இது, மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதம் வரும் ஏப்ரல் 15 முதல் நடைமுறைக்கு வரும்.
3 சதவிகிதத்திலிருந்து 0.25 சதவிகிதம் குறைத்து 2.75 சதவிகிதமாக வட்டி விகிதத்தை நிர்ணயித்துள்ள ஸ்டேட் வங்கி, கடன்களின் மீதான வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளது வாடிக்கையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கொரோனா தாக்கத்தை எதிர்கொள்ள ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, சமீபத்தில் வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தினை (ரெப்போ விகிதத்தினை) 0.75 சதவிகிதம் குறைத்தது. அதன் அடிப்படையில் தற்போது நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் வங்கியும் அந்த 0.75 சதவிகிதம் குறைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தற்போது மீண்டும் எம்சிஎல்ஆர் விகிதத்தில் 0.35 சதவிகிதம் குறைத்துள்ளது ஸ்டேட் வங்கி. பொதுவாக எம்சிஎல்ஆர் (mclr) விகிதத்தைப் பொறுத்தே வங்கிகளில் வழங்கப்படும் பல்வேறு கடன்களின் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும்.
Also Read: `கொரோனா தொற்றால் இறந்த தொழிலதிபர்’ – கீழக்கரைக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்டான்லி மருத்துவமனை அதிகாரி
தொடர்ந்து இரண்டாவது முறையாக, எம்சிஎல்ஆர் விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், கடன்களின் மீதான வட்டி விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனி நபர் கடன் என அனைத்துக் கடன்களின் மீதான இஎம்ஐ தொகையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வட்டி குறைப்பினால், ஒரு வருட எம்சிஎல்ஆர் விகிதமானது 7.75%ல் இருந்து 7.40% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விகிதமானது ஏப்ரல் 10 முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இதன் விளைவாகத் தகுதியான வீட்டுக் கடன் வழக்குகளில் இஎம்ஐ 30 ஆண்டு கடனில் லட்சத்திற்கு 24 ரூபாய் மலிவாகக் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஒரு மாதக் கடனில் தொடங்கி நீண்ட காலக் கடன்கள்வரை, அனைத்துக் கடன்களின் வட்டி விகிதமும் கணிசமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் வங்கி, மேற்கொண்டுள்ள வட்டி விகித மாற்றங்களைத் தொடர்ந்து மற்ற வங்கிகளும் தங்கள் சேமிப்பு மற்றும் கடன்கள்மீதான வட்டி விகிதத்தை மாற்றியமைக்க ஆலோசித்து வருகின்றன.