புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தொழுவங்காட்டில் வசித்து வந்தவர் பெரிய தம்பி (78). இவர் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துபோகவே, அதன்பின்பு தனியாகவே வசித்து வந்தார். தன் ஒரே மகளை அருகில் உள்ள கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். உடல்நலக் குறைவால் மருமகனும் இறந்துவிட்டார். கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெரிய தம்பி, திடீரென இறந்துவிட்டார். பெரிய தம்பிக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், பெரிய தம்பி இறந்த தகவலைக் கேட்டு ஓடி வந்த அவரின் மகள் மாரியம்மாளிடம் அடக்கம் செய்வதற்குக்கூட கையில் பணம் இல்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் பக்கத்து வீட்டுக்காரர்கள்கூட உதவிக்கு வெளியே வரமுடியாத நிலை. தனி ஆளாக எப்படி அப்பாவை அடக்கம் செய்யப்போகிறோம் என்று தெரியாமல் புலம்பித் தீர்த்து வந்துள்ளார்.

இதை அறிந்த இளைஞர் ஒருவர், அந்தப் பகுதியில் வசிக்கும் கிராம மக்களிடம் நடந்த விஷயத்தைக் கூறியதும் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து அவரின் இறுதிச் சடங்குக்குத் தங்களால் இயன்ற பணத்தைக் கொடுத்தனர். தொழுவங்காடு ஊராட்சிமன்றத் தலைவர் தன் பங்குக்குச் சிறிய தொகையைக் கொடுத்தார். மொத்தமாக ரூ.10,000 வரையிலும் வசூலானது. இறுதிச்சடங்குக்கு போக மீதமுள்ள பணத்தை மகள் மாரியம்மாளிடம் மற்ற காரியங்கள் செய்வதற்காகக் கொடுத்தனர். ஊராட்சிமன்றத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் கிராமத்தைச் சேர்ந்த சிலர் மட்டுமே பங்கேற்று இறுதிச்சடங்கை முடித்து வைத்தனர். கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஏழைக் குடும்பத்தின் இறுதிச்சடங்குக்கு உதவிய நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்தது.
இதுபற்றி, தொழுவங்காட்டைச் சேர்ந்த குணசேகரனிடம் கேட்டபோது, “இறந்துபோன பெரிய தம்பிக்கு சொந்த ஊரு மதுரை. பிழைப்பு தேடிதான் எங்க ஊருக்கு வந்திருக்காங்க. அவங்களும் ரெண்டு தலைமுறையாக இங்க இருக்காங்க. மாடு மேய்க்கும் தொழில் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. யாருக்கா இருந்தாலும், இந்த நேரத்தில மரணம் வரக்கூடாது. பாவம் நல்லா வாழ்ந்த மனுஷன். அவர் இருக்கும் வரைக்கும் யாருக்கும் தொல்லை கொடுக்கலை. பாவம் அவங்க பொண்ணு என்ன செய்யுறதுன்னு கலங்கி நின்னப்ப, கஷ்டமாகப் போச்சு. ரொம்ப நல்ல மனுஷங்கிறதால, இறுதிச்சடங்குக்குப் பக்கத்துல உள்ள வீட்டுக்காரங்கள் எல்லாரும் கேட்காமலேயே பணத்தைக் கொடுத்தாங்க.

இந்த நேரத்தில இறந்ததால, பணம் மட்டும்தான் கொடுக்க முடிஞ்சுச்சு. ஆனா, இறுதிச்சடங்கில பங்கேற்க முடியலைங்கிற வருத்தம் மட்டும் இருக்கு. அடுத்து சில சடங்கு எல்லாத்தையும் முடிக்கணும்ல அதனால, குழிவெட்டுனது, வண்டி வாடகை போக மீதிப் பணத்தை அவங்க மகள்கிட்ட கொடுத்திட்டோம்” என்றார்.
இதுபற்றி மாரியம்மாளிடம் கேட்டபோது, “எப்படி அடக்கம் பண்ண போறோம்னு தவிச்சிக்கிட்டு இருந்தேன். இப்போ நல்லபடியா அடக்கம் பண்ணிட்டோம். இறுதிச்சடங்குக்கு உதவியவர்களை என் காலம் உள்ள வரைக்கும் என்னைக்கும் மறக்கமாட்டேன்” என்றார் உருக்கத்துடன்.