பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
விஞ்ஞான உலகின் ஒட்டுமொத்த கவனமும் கொரோனாவுக்கான தீர்வைக் கண்டுபிடிப்பதில் குவிந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் சூழலில், விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் நேரத்துடன் போட்டிப்போட்டுக்கொண்டு இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஹைட்ராக்சிக்ளோரோகுயின் முதல் எய்ட்ஸ் நோய் சிகிச்சையில் உபயோகிக்கப்படும் சில மருந்துகள் வரை உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சி முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இத்தனை முயற்சிகள் நடந்தும், ஒர் ஒட்டுமொத்த தீர்வு கிடைக்காததின் முக்கியமான காரணம் கொரோனாவினால் தீவிரமாகப் பாதிக்கப்படுபவர்களின் உடல்நிலை. ஆராய்ச்சி நிலையிலிருக்கும் மருந்துகளெல்லாம் மிகத் தீவிரமான பின்விளைவுகளைக் கொண்டவை என்பதும், அந்தப் பின்விளைவுகளைக் கோவிட் 19 வைரஸின் தாக்கம் தீவிரமாகும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களால் தாங்க இயலாது என்பதும் மருத்துவ உலகம் ஒருமித்த முடிவை எடுப்பதற்குத் தடைகளாய் விளங்குகின்றன.
வயோதிகத்தாலும், முதுமை காரணமான நோய்களாலும் இதயம் மற்றும் நுரையீரல் பலவீனமான முதியவர்களுக்கு வென்டிலேட்டர் என்றழைக்கப்படும் செயற்கை சுவாசக்கருவியின் மூலம் சிகிச்சை அளிப்பதும் சுலபமல்ல. அக்கருவி சுவாசக்குழாயுடன் இணைக்கப்படும்போது ஏற்படும் சிரமங்களையும், செயற்கை சுவாசத்துடன் வாரக்கணக்கில் போராடும் வலி வேதனைகளையும் உடல் திடகாத்திரம் கொண்ட ஆரோக்கியமானவர்களாலேயே தாங்க முடியாது!
இவற்றுக்கெல்லாம் தீர்வு காணும் முயற்சிகளாக இரண்டு மாற்றுச் சிகிச்சை முறைகள் பிரான்ஸில் ஆராயப்பட்டு வருகின்றன.
நம்முடலில் வைரஸ் கிருமிகள் பரவும்போது அதை எதிர்த்துப் போராடும் நமது நோய்த்தடுப்பாற்றல் மண்டலமானது, ஆங்கிலத்தில் ஆன்டிபாடி என்றழைக்கப்படும் பிறபொருளெதிரி புரதத்தை உற்பத்தி செய்யும். இப்புரதமானது கிருமியானால் உடலணுக்களில் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து, வீரியமிழக்கச் செய்துவிடும். இந்தச் செயல்பாடு வெற்றிகரமாக நிகழ்ந்து கிருமியின் தாக்கத்திலிருந்து மீண்டுவிட்டால் உடலின் நோய்த்தடுப்பாற்றல் மண்டலம் அக்கிருமிக்கு எதிராகப் பலப்படுத்தப்பட்டுவிடும்! நோய்த்தடுப்பூசிகள் இந்த முறையில் தான் பலனளிக்கின்றன.

ஆன்டிபாடி எனப்படும் பிறபொருளெதிரி புரதம் அதிகமிருக்கும் ரத்தத்தின் பிளாஸ்மாவைக் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களிடம் பெற்று, அதை நோயுற்றவர்களுக்குச் செலுத்துவதின் மூலம் அவர்களின் நோய்த்தடுப்பாற்றல் மண்டலத்தைப் பலப்படுத்தி, கிருமியை வலுவிழக்கச் செய்யலாம் என நம்பப்படும் ஒரு சிகிச்சை முயற்சிக்குக் கொரோனா பிளாஸ்மா எனப் பெயரிடப்பட்டுள்ளது!
கொரோனா தாக்கத்திலிருந்து முழுவதுமாகக் குணமடைந்து, இரண்டு வாரங்களைக் கடந்தவர்களின் ரத்தத்தின் கூறுகளான ரத்தத் தட்டுக்கள், வெள்ளை மற்றும் சிவப்பணுக்களைப் பிரித்த பிறகு கிடைக்கும் பிளாஸ்மா எனப்படும் ரத்த நீர் தனியாகச் சேமிக்கப்படும். சேமிக்கப்பட்ட பிளாஸ்மா, மீண்டும் ஒருமுறை கொரோனா கிருமி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, கொரோனா தாக்கம் முற்றக்கூடிய அபாயத்துடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்கள் உடலில் செலுத்தப்படும்.
பரிசோதனை முயற்சியாகப் பிளாஸ்மா செலுத்தப்பட்டவர்களின் முன்னேற்றம் வேறு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் உடல் நிலையுடன் ஒப்பிடப்படும். சோதனையின் முடிவைப் பொறுத்து சிகிச்சை முறை அங்கீகரிக்கப்படலாம்.

ரத்த தானத்தைப்போல பிளாஸ்மா தானமும் வேறுசில நோய்க்கூறுகளுக்கான சிகிச்சை முறைகளில் வழக்கில் இருக்கும் ஒன்றுதான். கொரோனாவுக்கு முன்னர் நவீன உலகைப் பயமுறுத்திய சார்ஸ், ஹெச்1என்1 மற்றும் எபோலா தொற்றின் போதும் பிளாஸ்மா சிகிச்சை சோதிக்கப்பட்டது. சார்ஸ் மற்றும் ஹெச்1என்1 வைரஸுகளுக்கு எதிராகச் சோதனை அளவில் பலனளித்ததாக நம்பப்படும் இந்தச் சிகிச்சை முறை எபோலாவிடம் எடுபடவில்லை.
மிருகத்திடமிருந்து தொற்றிய கொரோனாவுக்கு ஒரு புழுவின் மூலம் தீர்வு காண முயற்சிக்கும் ஆராய்ச்சியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அட்லாண்டிக் மற்றும் பால்டிக் கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் ஒருவகை மண்புழு அரெனிகோலா மரினா. அப்பிரதேசங்களின் மீனவர்களால் கடல் புழு என்றழைக்கப்படும் இப்புழு ஏற்கெனவே மருத்துவத்துறைக்குப் பரிச்சயமான ஒன்றுதான்!
மனித ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அளவைவிட 250 மடங்கு சிறிதான இப்புழுவின் சிவப்பணுக்களினால் மனித உடலின் சிவப்பணுக்களைவிட நாற்பது மடங்கு அதிகமான ஆக்சிஜனை கடத்த முடியும். உறுப்பு தானத்தின் மூலம் பெறப்படும் மனித உடலுறுப்புகள் வேறொருவருக்குப் பொருத்தப்படும்வரை செயலிழக்காமல் பாதுகாக்கப்பட இந்தச் சிவப்பணுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

செயற்கை சுவாசக்கருவிக்கு உடல் ஒத்துழைக்காத சூழலில் இருப்பவர்களுக்கு அரெனிகோலா மரினா மண்புழுவின் சிவப்பணுக்களை ஊசி மருந்தின் வடிவில் செலுத்தி, உடலின் ஆக்சிஜன் சுழற்சியை அதிகரிக்கச் செய்யும் சிகிச்சையும் பரிசோதனை அளவில் நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சிவப்பணுக்கள் மனிதனின் அனைத்து ரத்த வகைகளுக்கும் பொதுவானது என்பது கூடுதல் அனுகூலம்!
உலகத்தில் எந்தப் பிரச்னை எழுந்தாலும் “இந்தா பிடி” என உடனடி தீர்வை நீட்ட முயற்சிக்கும் பெரியண்ணன் அமெரிக்காவே, “யாராச்சும் சீக்கிரமா நல்ல சேதி சொல்லுங்கப்பா ” எனப் புலம்பும் இந்தச் சூழலில், கொரோனாவுக்கு எதிரான மருத்துவ ஆயுதம் மிகச் சீக்கிரம் கைகூடும் என நம்புவோம் !
–காரை அக்பர்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.