கொரோனாவால் இந்தியா உட்பட மொத்த உலகமும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் என்றால் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வைரஸை விடப் பல மடங்கு பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் சர்வதேச அளவில் பல பில்லியன் தொழிலாளர்கள் வேலையிழந்து அடுத்த வேளை உணவு இல்லாமல் பெரும் சிரமமடைந்துள்ளனர்.

இப்படி வேலையிழந்தவர்களுக்கு அதே துறையில் உள்ள தொழிலதிபர்கள், பணக்காரர்கள், பிரபலங்கள் போன்றவர்கள் அதிகளவில் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து வீடுகளில் முடங்கியுள்ள பெயின்டர்களுக்கு உதவும் வகையில் நிப்பான் பெயின்ட் நிறுவனம் ஒரு சிறந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Also Read: `சிரமத்தைக் கடந்து உதவி செய்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது!” – கொரோனா பாதிப்பில் மிளிர்ந்த உள்ளங்கள்
இது தொடர்பாக அந்நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பரவலை உலகளாவிய தொற்றுநோய் பேரழிவாக அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. இந்தப் பேரிடர், பெயின்டர்கள் உட்பட தினசரி கூலித் தொழிலாளர்களின் வாழ்வில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் பெயின்டர்களுக்கு உதவும் வகையில் நிப்பான் பெயின்ட் நிறுவனம், தமிழகத்தில் இருக்கும் 1000-க்கும் மேற்பட்ட பெயின்டர்களுக்குத் தனது தனித்துவமான அமுத சுரபி கார்டின் வழியாக நிதியுதவி வழங்கியுள்ளது.

இந்த கார்டுகளைப் பயன்படுத்தி பெயின்டர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்றவற்றில் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். வேலையிழந்து தவிக்கும் பெயின்டர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கிக்கொள்ள இது உதவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“நிப்பான் குடும்பத்தின் அங்கத்தினராக இருக்கும் பெயின்டர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவதில் எங்கள் நிறுவனம் எப்போதும் முன்னணியில் உள்ளது. கோவிட் – 19 உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் வேளையில் பெரும்பாலும் தினசரி வருமானத்தையே நம்பியிருக்கும் பெயின்டர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இன்னல்களை இயன்ற அளவு குறைக்க நாங்கள் உறுதி எடுத்துள்ளோம். தற்போதைய லாக்டவுன் நேரத்தில் தொழிலாளர்களின் குடும்பத் தேவையைச் சமாளிக்கவும் இந்தப் பேரிடரை ஒன்றாக இணைந்து கடக்கவும் இது உதவும் என நம்புகிறோம்” என்று நிப்பான் பெயின்ட் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மகேஷ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.