தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகிலுள்ள பெரியசெல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட். தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலைபார்த்துவந்தார். இவரது மனைவி ஜான்சி. இவர்களின் இரண்டு மகள்களும் திருமணமாகி தூத்துக்குடியிலும், புதுச்சேரியிலும் வசித்துவருகிறார்கள். இங்குள்ள வீட்டில் வின்சென்ட்டும் ஜான்சியும் வசித்து வருகின்றனர். ஜான்சிராணி ஏலச்சீட்டு நடத்திவருகிறார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் இருவரும் வீட்டிலேயே முடங்கி இருந்த நிலையில், கடந்த 3-ம் தேதி வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு 93 பவுன் தங்கநகைகளும், ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணமும் திருடப்பட்டதாக வின்சென்ட் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீஸாரின் விசாரணையில் மனைவியே நகைகளைப் பதுக்கி வைத்துவிட்டு நகைகள் திருடு போனதாக நாடகமாடியது தெரியவந்தது.
போலீஸாரின் விசாரணையில், “என் கணவர் ரொம்ப சிக்கனமானவர். சேமிக்கும் பணத்தை நகைகளாக வாங்கி சேமித்து வைத்துவிடுவார். நான் நடத்திவந்த ஏலச்சீட்டில், ஏலத்தொகை கட்டாமல் நிறைய பேர் ஏமாத்திட்டாங்க. இதனால, 10 லட்சம் ரூபாய் வரைக்கும் கடன் ஆயிட்டேன். அதுக்காக மாசம் வட்டி மட்டும் 35 ஆயிரம் ரூபாய் கட்டிட்டுவர்றேன். இந்தப் பிரச்னை என் கணவருக்குத் தெரிஞ்சும், வட்டிக்காக 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்தார். ஒவ்வொரு மாசமும் வட்டியைக் கட்ட கணவருக்குத் தெரியாம கூடுதலா பணத்தை வெளியில் கடனா வாங்கி கட்டிட்டு வந்தேன்.

அதனால கடன் தொகையும் ஏறிடுச்சு. கடன் கொடுத்தவங்களும் கடன் தொகையைக் கேட்டாங்க. இதனால, ரொம்ப கடன் நெருக்கடியில இருந்தேன். இந்த ஊரடங்கு உத்தரவை நல்ல வாய்ப்பா பயன்படுத்தி வேற ஒரு நம்பர்ல இருந்து கணவருக்குப் போன் செஞ்சு, “பேங்க்ல பாதுகாப்பு குறைபாடு இருப்பதால், லாக்கரில் உள்ள உங்களோட நகைகளுக்குப் பாதுகாப்பில்லை. நகைகளை லாக்கரில் இருந்து எடுத்துட்டுப் போங்க”ன்னு குரலை மாத்திப் பேசினேன்.
கணவரும் அதை அப்படியே நம்பி, அடுத்த நாளே லாக்கரில் உள்ள 93 பவுன் நகைகளை மீட்டுவந்தார். இதை எப்படியாவது திருடி விற்று கடனை அடைச்சுடலாம்னு முடிவெடுத்தேன். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப கபச்சூரண கசாயம் குடிக்க வேண்டும் எனச் சொல்லி, வீட்டுல கசாயம் போட்டேன். அதுல தூக்கமாத்திரையைக் கலந்து கொடுத்தேன். அதைக் குடித்த கணவர் நன்றாகத் தூங்கிவிட்டார். பீரோவைத் திறந்து நகைகளை எடுத்து வீட்டுக்கு எதிரேயுள்ள காலி இடத்தில் துணிப்பைக்குள் வச்சு புதைச்சுட்டேன்.

வீட்டுக்குள் வந்து அறையை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு, பீரோவில் இருந்த துணிகளைக் கலைத்துப் போட்டுவிட்டு, வீட்டுச் சாவியை பீரோவுக்குப் பின்பக்கம் தூக்கி வீசினேன்” என்றார். இதையடுத்து ஜான்சியை போலீஸார் கைதுசெய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மனைவியின் இந்த மாஸ்டர் பிளானை நினைத்தும், இந்தச் சம்பவத்தால் அவமானம் தாங்க முடியாமலும் மனமுடைந்த நிலையிலேயே இருந்தாராம் வின்சென்ட்.
இந்நிலையில் வீட்டின் முன்பக்க அறையில் இன்று அதிகாலையில் கயிற்றில் தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டார். “அந்த மனுஷன் சிக்கனவாதி என்றாலும் நல்லவர். எந்த விஷயத்திலும் சரியா இருக்கணும்னு நினைப்பார். வேலைக்குப் போகும்போதும், கடைக்குப் போகும்போதும்தான் அவரை வெளியில பார்க்க முடியும். அவரோ மனைவியே நகைகளை மறைத்துவைத்துவிட்டு திருடு போனதாக நாடகமாடியதை அவரால தாங்கிக்க முடியல.

அந்தச் சம்பவத்துல இருந்தே கடைக்குப் போகக்கூட வெளியில வரல. வீட்டுக்குள்ளயே முடங்கிக்கிடந்தார்” என்றனர் அப்பகுதியினர். மனைவியின் கொள்ளை நாடகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், மன உளைச்சலில் கணவர் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.