90’ஸ் கிட்ஸ்களின் மோஸ்ட் வான்டட் காமெடி ஷோ என்றால் அது லொள்ளு சபாதான். குவாரன்டீன் நாள்களில் எந்த நிகழ்ச்சியை ரீ டெலிகாஸ்ட் செய்யலாம் எனக் கேட்டபோது, அன்னபோஸ்ட்டாக ஜெயித்தது லொள்ளு சபா. 2கே கிட் என்பதால், லொள்ளுசபா முதன் முதலாக ஒளிபரப்பப்பட்ட அந்த நாள்களில் பென் டென், போக்கிமேன் சூழ் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்ததால், அப்போது அதைப் பார்ப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை. இருந்தாலும் இணையத்தில் லொள்ளு சபாவுக்கு கொடுக்கப்படும் பில்டப்பைப் பார்த்துவிட்டு, ஒன்றிரண்டு எபிசோடுகளையும் சில க்ளிப்களையும் மட்டும் யூடியூபில் எப்போதாவது பார்த்திருக்கிறேன். யூடியூபில் அனைத்து எபிசோடுகளுமே அப்லோட் செய்யப்பட்டிருந்தாலும், ஏனோ அதில் பார்ப்பதற்கு ஆர்வம் இல்லை.

சில நிகழ்ச்சிகள் அப்படித்தான், டி.வி-யில் விளம்பரங்களோடு சேர்த்து பார்த்தால்தான் திருப்தியாக இருக்கும். ஆனால், விஜய் டி.வி ஆஃபீசில் லொள்ளு சபா கேசட்டை எதோ பழைய பரண் மீது பத்திரமாக வைத்துவிட்டதால், மீண்டும் டி.வி-யில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இந்த முறை குவாரன்டீன் நாள்களில் 90’ஸ் கிட்ஸ்களின் ஏகோபித்த ஆதரவு மற்றும் எதிர்பார்ப்பால் லொள்ளு சபா கேசட்டை தூசுதட்டி எடுத்து மீண்டும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது விஜய் டி.வி. இந்த முறை மிஸ் செய்துவிடக்கூடாது என்பதால், காலை 7 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து, டிஃபால்டாகச் செய்யவேண்டிய வேலைகளை முடித்துவிட்டு, சரியாக 7.30-க்கு டி.வி-க்கு முன்பாக ஆஜராகிவிடுகிறேன்.

புதுப்பேட்டை

முதல் நாள், தனுஷின் `புதுப்பேட்டை’ படத்தை புது சேட்டையாகவும் அஜித்தின் `வரலாறு’ படத்தை தகராறாகவும் மாறிய இரண்டு ஸ்பூஃப் எபிசோடுகள் ஒளிபரப்பாகின. அவற்றில், முதலில் புதுசேட்டை பயங்கர சேட்டையாக இருந்தது. தகராறு கொஞ்சம் சுமாராக இருந்தாலும், சுவாமிநாதன் பின்னி பெடலெடுத்திருந்தார். எந்த வரையறையும் லாஜிக்கும் இல்லாமல் எல்லோரையும் சகட்டுமேனிக்கு கலாய்த்திருந்தனர். ஸ்பூஃப் நிகழ்ச்சிகள் ஸ்பூஃப் படங்கள் என்றாலே அடுத்து யாரை வெச்சு செய்யப்போகிறார்கள் என்ற கியூரியாசிட்டி எப்போதும் இருக்கும். அந்த கியூரியாசிட்டியோடு இரண்டாவது நாளும் ஆர்வத்தோடு டி.வி முன் அட்டென்டென்ஸ் போட்டேன்.

நேற்று, விஜய்யின் `போக்கிரி’ பேக்கிரியாக மாறியிருந்தது. பேக்கிரிக்கு கீழ் 100% ஒண்ணும் இல்ல என்ற சப்டைட்டிலே ஆஹா… இன்னைக்கு ஏதோ பெருசா இருக்கு என்பதை உணர்த்திவிட்டது. அந்த எண்ணத்தை உண்மையாக்கும் பொருட்டே விஜய்யின் இன்ட்ரோவிலிருந்து இன்ச் இன்ச்சாகத் தொடங்கி, `போக்கிரி’ ஸாரி… பேக்கிரி படத்தில் அத்தனையையும் சல்லி சல்லியாக நொறுக்கிவிட்டார்கள். `யார் அடிச்சா பொரி கலங்கி பூமி அதிருதோ அவன்தான் தமிழ்… நான்தான் தமிழ்’ இதெல்லாம் விஜய் ரசிகர்கள் சில்லறையைச் செதறவிட்ட மாஸ் சீன். அதை ஏதோ பப்ளிக் எக்ஸாம் எழுதும் பத்தாம் க்ளாஸ் பையன் கடைசி நேரத்தில் டெஸ்ட் ஹாலுக்கு வெளியே நின்று நெஞ்சிலடித்துப் படிப்பதுபோல் செய்ததெல்லாம் ஏலியன் லெவல்.

ஸ்கீரினில் பேக்கிரி ஓடிக்கொண்டிருக்க, தியேட்டரில் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்கள் கமென்ட் கொடுக்கும்படி அமைக்கப்பட்டிருந்த காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படி இருந்தாலும் அதெல்லாம் போக்கிரி படத்தின் ஸ்ஃபூபாக இல்லாமல், விஜய்யையும் விஜய்யின் அந்த பீரியட் படங்களையும் ரவுண்டு கட்டி கலாய்க்கும் வகையில்தான் இருந்தது. விஜய் ஒரே மாதிரி படங்களில் நடிக்கிறார் என அந்தக் காலத்தில் விஜய்யை கலாய்த்து எஸ்எம்எஸ்-களிலும் எம்எம்எஸ்-களிலும் பறந்த ஜோக்குகளுக்கு இந்த ஸ்பூஃப்தான் முதற்காரணமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். அந்த அளவுக்கு எந்த எல்லையும் வகுத்துக்கொள்ளாமல், சகட்டுமேனிக்கு கவுன்ட்டர்களை அள்ளிவீசி அல்வா கிண்டியிருந்தது இந்த பேக்கரி. எல்லாமே டயலாக் காமெடிகளாக இருப்பதால், ரைட்டிங் டீம் கூடுதல் சிரத்தையோடு பணியாற்றி, எல்லா டயலாக்குகளையும் ஒவ்வொருத்தரின் மேனரிசத்திற்கு ஏற்றவாறு செதுக்கியிருக்கிறார்கள்.

விஜய்

இப்படியொரு உச்சபட்ச கலாய்ப்பு இந்த யூடியூப் காலத்தில்கூட வந்ததில்லையே என்று கொஞ்சம் இந்த நிகழ்ச்சியின் எஸ்டிடியை புரட்டிப்பார்த்த பிறகுதான் தெரிந்தது, இவர்களின் இந்த பேக்கரி அப்போதே செம வைரல் என்று.

விஜய்யும், எஸ்.ஏ.சி-யும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, லொள்ளுசபா டீமை வலைவீசித் தேடியதாகவும், இந்த டீமின் மீது வழக்கு பதியப்பட்டதாகவும், அடுத்த எபிசோடில் விஜய்-க்கு வருத்தம் தெரிவித்து கார்டு போட்டதாகவும் பல சூடான தகவல்களை அள்ளிவீசினர் வெறித்தனமான லொள்ளு சபா ரசிகர்கள்.

வரலாறை மாற்றி தகராறு நடத்திய எபிசோடில், பெண்கள் பற்றியும் தனிப்பட்ட முறையில் அஜித் பற்றிய சில உருவகேலிகளையும் எந்தவித வரைமுறையுமின்றி பேசியிருப்பார்கள். அதெல்லாம் நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை.

இதேபோன்றதொரு நிகழ்ச்சியை இப்போது நடத்தியிருந்தால், சோஷியல் மீடியாவில் நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் மூன்றாம் உலகப்போரே மூண்டிருக்கும்.

இப்படியெல்லாம் நாம் கருத்தாகப் பேசினால், `போங்க தம்பி அங்கிட்டு’ எனக் கூறி, ̀நாயகன்’, ̀தேவர் மகன்’, `ஆறிலிருந்து அறுபது வரை’ என லொள்ளு சபா அரங்கேற்றிய க்ளாசிக் காமெடிகளையெல்லாம் பார்த்துவிடுமாறு கட்டளையிடுகின்றனர் லொள்ளு சபாவின் வெறித்தனமான ரசிகர்கள்.

கன்டென்ட் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, இதில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லாருமே காமெடிதான் செய்தாலும் தங்களுக்கென ஒரு தனி பாணியை வைத்துக்கொண்டு கலக்கியுள்ளனர். இன்றைக்கும் `டேம்மிட்’ என்ற ஒரு வசனம் சுவாமிநாதனையும், அந்த முறுக்குப் பிழியும் மேனரிசம் மனோகரையும் ஞாபகப்படுத்திவிடுகிறது.

முதலில் ஹீரோ கேரக்டர் செய்த சந்தானம், திறமைக்கேற்ற உயரத்தை அடைந்துவிட்டார். ஆனால், அதன்பின்னர் ஹீரோவாக நடித்த ஜீவா, எல்லா நடிகர்களின் மேனரிசங்களையும் ஸ்லாங்கையும் கனகச்சிதமாகச் செய்வது வியப்பாக இருந்தது.

பேக்கிரி எபிசோடுக்குப் பிறகு, ஜீவாவை விஜய்யே அழைத்து `குருவி’ படத்தின் ஒரு காமெடி காட்சியில் நடிக்கவைத்திருப்பார்.

லொள்ளு சபா ஜீவா ஜாலி பேட்டி

சம்பந்தப்பட்டவர்களே இந்த கலாய்களையெல்லாம் சைலன்ட் மூடில் என்ஜாய் பண்ணுவதால், இந்த எபிசோடுகளை 15 வருடம் கழித்து மீண்டும் பார்த்துவிட்டு அஜித்-விஜய் ரசிகர்கள் டென்ஷன் ஆகாமல் சிரித்துவிட்டுச் செல்லலாம்.

`அடிக்கடி அடிக்கடி மறுபடி வம்பு பண்ணுவோம்…. ஆக்சுவலா நாங்க ரொம்ப லொள்ளு பண்ணுவோம்…’ என்ற லொள்ளு சபாவின் டைட்டில் சாங்கிற்கு ஏற்றவாறு இந்த டீமுக்கு ரொம்ப லொள்ளுதாங்ண்ண்ணா!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.