கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்தியப் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. மக்களும், தொழில் நிறுவனங்களும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கின்றன. இவற்றைச் சரி செய்ய மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது பொருளாதார நிபுணர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
இதுகுறித்து, நிதித் துறை முன்னாள் செயலாளரான சுபாஷ் சந்திர கார்க், “மத்திய அரசு தனது உள்நாட்டு உற்பத்தியில் 2 முதல் 2.5 சதவிகிதம் அல்லது 4 முதல் 5 லட்சம் கோடிவரை கடன் வாங்க வேண்டும். இதை வைத்துக் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்துறைகளை மீட்க முயற்சி செய்யவேண்டும். இந்திய அரசு, சந்தையிலிருந்து கடன் வாங்காமல் நேரடியாக ரிசர்வ் வங்கியிடமிருந்தே கடன் பெறலாம். இதை நடைமுறையில் கொண்டுவர நிதிப் பொறுப்பு மற்றும் நிதிநிலை மேலாண்மைச் சட்டத்தை(FRBM) அமல்படுத்த வேண்டும்.
Also Read: `36 மணிநேரத்தில் ரூ.3.61 லட்சம் நிதி; இலக்கு ரூ.1 கோடி’ -கொரோனா தடுப்பில் அசத்தும் எல்ஐசி ஊழியர்கள்
மேலும், நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீடு தொகையான 30,000 கோடியைப் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். இதோடு மத்திய வரியிலிருந்து 56,000 கோடி ரூபாயை மாநிலங்களுக்குத் தவணையாக உரிய தேதியில் (ஏப்ரல் 15) அளிக்க வேண்டும். சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு ஊரடங்கால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய 2 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்”எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிதி ஆண்டில் மத்திய அரசு, 7.8 லட்சம் கோடி ரூபாயைச் சந்தையிலிருந்து கடனாக வாங்க உள்ளது. இதில் 4.88 லட்சம் கோடியை நிதி ஆண்டின் முதல் பாதியிலேயே வாங்க உள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலைச் சமாளிக்க அசாதாரணமான பொருளாதார நடவடிக்கைகள் அவசியம் தேவை. இந்தியாவில் உள்ள சிறு, குறு தொழில்களுக்கு அரசின் உதவி கிடைக்கவில்லை என்றால் மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால், இனிவரும் நாள்களில் பொருளாதார ஊரடங்கை கொரோனாவால் அதிகம் பாதிக்காத பகுதிகளில் தளர்த்த வேண்டும். மேலும் பொருளாதாரச் செயல்பாடுகளால் நோய்த் தொற்று ஏற்படாத வகையில் அதீதக் கவனத்தோடு செயல்பட வேண்டும்.
ஊரடங்கால் சுரங்கத் துறை, கட்டடத் துறை, உற்பத்தி மற்றும் சேவைத் துறை ஆகியவற்றில் வேலையிழப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதனால், பத்துக் கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தையாவது மூன்று மாதங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டியது அவசியம். வங்கிகளைப் பொறுத்தவரைப் பணப்புழக்கத்திற்காக ரிசர்வ் வங்கியிடமிருந்து 5 லட்சம் கோடி ரூபாயைப் பெற்றுள்ளனர். ஆனால் இவற்றை வங்கிகள் தொழில்துறைக்குக் கடனாக வழங்கப் பயன்படுத்தாது.
Also Read: பணப்புழக்கத்தை அதிகரிக்க, அரசாங்கப் பத்திரங்களை வாங்க முடிவு! – ரிசர்வ் வங்கி அதிரடி
ஒரு வேளை மத்திய அரசு, ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கவில்லை எனில், இதை வங்கிகள் இந்திய அரசாங்கத்திலும், மாநில அரசு பத்திரங்களிலும் முதலீடு செய்யப் பயன்படுத்தலாம். தொழில் துறையில் கடன் ஓட்டத்தைச் சரி செய்ய ரிசர்வ் வங்கி கார்ப்பரேட் பத்திரங்களிலும், அடமானம் வைத்துள்ள சொத்துகளிலும் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும் என்பதே பொருளாதார அறிஞர்களின் கோரிக்கையாக உள்ளது.