இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஓர் ஆய்வில், கொரோனா தொற்று உள்ள ஒரு நபர், 30 நாள்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை என்றால் அவர் 406 நபர்களுக்குக் கொரோனா தொற்றைப் பரப்பிவிடுவார் என்று தகவலை வெளியிட்டுள்ளது.
Also Read: `பிறந்த குழந்தையைக்கூட கொஞ்ச முடியவில்லை…’ – கொரோனா தொற்று பாதிப்பால் கலங்கிய தஞ்சைப் பெண்
சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி லாவ் அகர்வால் இதுகுறித்துப் பேசியதிலிருந்து… “நோய் பரவுதலைத் தவிர்க்க, தனி மனித இடைவெளி இன்றியமையாதது. நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா தொற்று உள்ள ஒரு நபர், சுய தனிமைப்படுத்ததலைப் பின்பற்றாவிட்டால் அவர் 406 நபர்களுக்கு அந்த நோயைப் பரப்பிவிடுவார்.

எந்தவொரு நோய் பாதிப்புமே, ஆர் நாட் எனப்படும் ஓர் அளவுகோலை வைத்துத்தான் அதன் பரவும்தன்மை கணக்கிடப்படும். அந்த வகையில், கோவிட் – 19 கொரோனா வைரஸின் ஆர்.நாட் அளவு 1.5 முதல் 4 வரை இருக்கிறது. அதாவது R0 மதிப்பென்பது 2.5 என எடுத்துக்கொண்டால், கொரோனா தொற்று கொண்ட ஒரு நபர் 30 நாள்களில் 406 நபர்களுக்குத் தொற்றைப் பரப்புவார்.
சிறந்த தடுப்பு நடவடிக்கைகளின் மூலம், நோய்த்தொற்றின் வீரியத்தை ஒரே காலகட்டத்தில் ஒரு நோயாளிக்குச் சராசரியாக இரண்டரை நபர்களாகக் குறைக்க முடியும் .
அரசாங்கம் மூன்று நிலைகளில் கொரோனவை எதிர்கொள்கிறது.
1.லேசான அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்குப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
2. மிதமானஅறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு, முழு மருத்துவமனை அல்லது மருத்துவமனையில் தனி நுழைவு / வெளியேறும் வசதி கொண்ட தனித் தொகுதி அளிக்கப்படும். ஒவ்வொரு படுக்கையிலும் ஆக்சிஜன் வசதி செய்திருக்க வேண்டும்.

3. தீவிர அறிகுறிகள் கொண்ட நபர்களுக்கும், வயது முதிர்ந்த நோயாளிகளுக்கும், இரண்டாம் நிலையில் குறிப்பிட்ட வசதிகள் செய்து தரப்படும். அவர்களுக்கும் தனி ஆக்சிஜன் வசதியுடன், வென்டிலேட்டரும் ஐசியூ வசதியும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால், தனிமைப்படுத்துதலும் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் மட்டுமே நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும். அதனால், மக்கள் அவற்றைப் பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அவர் பேசியிருக்கிறார்.