உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பிடியிலிருந்து மீள முடியாமல் சிக்கித் தவித்துவரும் இந்தச் சூழலில், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்று இந்திர ராணுவ வீரர்கள் ஐந்து பேர் வீர மரணமடைந்துள்ளனர். அவர்களின் புகைப்படத்தை இந்திய ராணுவம் இன்று வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் அதிக பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தீவிரவாதிகள், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். தீவிரவாதிகளின் கால் தடத்தை வைத்து தீவிரவாதிகளின் ஊடுருவலை உறுதிசெய்த இந்திய ராணுவம், ட்ரோன் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணியை மேற்கொள்ளும் `ரந்தோரி பீஹக்’ என்ற ஆபரேஷனைத் திட்டமிட்டது.
சிறப்பு ராணுவப்படையைச் சேர்ந்த சுபேதர் சஞ்சீவ் குமார், பால கிருஷ்ணன், அமித் குமார், சத்ரபால் சிங், தேவேந்திர சிங் ஆகிய வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் காஷ்மீரின் குப்வாரா பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி வருகிறது. கடும்பனி நிறைந்த இடத்தில் ஹெலிகாப்டரை நிறுத்தி, முழங்கால் வரையிலான பனியில் இறங்குவது போன்று எடுத்துக்கொண்ட அந்தப் படம்தான் அவர்கள் வாழ்வின் கடைசி புகைப்படமும்கூட.

ஹெலிகாப்டரிலிருந்து இறங்கி, அங்கிருந்த ஒரு பனிப்பாறையில் நின்று தேடுதல் பனியைத் தொடங்கியுள்ளனர். ஆனால், திடீரென்று பனிப்பறை உடைந்து, இரண்டு ராணுவ வீரர்கள் அருகில் இருந்த ஏரியில் விழுந்திருக்கிறார்கள். ஆனால், அங்கு தீவிரவாதிகள் மறைந்திருந்திருகிறார்கள்.
மற்ற ராணுவ வீரர்கள் ஏரிக்குச் சென்று ராணுவ வீரர்களைக் காப்பாற்ற முற்பட்டபோது, தீவிரவாதிகள் திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாகிச்சூட்டில் இறுதிவரை போராடிய இந்திய வீரர்கள் தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்தி தங்கள் உயிரையும் தியாகம் செய்துள்ளனர்.
இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரி ராஜு,“வீரர்கள் ஏப்ரல் 5-ம் தேதி எங்களைத் தொடர்புகொண்டு, அதிக பனிமூட்டம் நிறைந்த குப்வாரா பகுதியில் ஹெலிகாப்டரில் பறக்க அனுமதி கேட்டனர். ஆபத்தான பகுதி என்றாலும் தீவிரவாதிகளின் ஊடுருவலைக் கண்டறிய வேண்டும் என்பதால் அனுமதி கொடுக்கப்பட்டது. தீவிரவாதிகள் இருந்த இடத்துக்கு அருகே இவர்கள் விழுந்ததால், என்ன நடக்கிறது என்பதை சிந்திக்கும் முன்பே தீவிரவாதிகள் தாக்கத்தொடங்கியுள்ளனர். கடுமையான போராட்டத்தில் ஐந்து தீவிரவாதிகளையும் நம் ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதிக காயங்களுடன் மீட்கப்பட்ட மற்றொரு வீரரும் மருத்துவமனையில் உயிரிழந்தார். நாட்டுக்காக, தன்னை அர்ப்பணித்த வீரர்களின் உடல் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.
#WATCH An Indian Army Special Forces soldier who took part in Op Rangdouri Behak in Keran sector on the Line of Control explains how JCO Subedar Sanjeev Kumar and his team eliminated the terrorists in close quarter combat after they were face to face there (Source: Indian Army) pic.twitter.com/6UxaPPMXBk
— ANI (@ANI) April 6, 2020