“கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. நிலைமை கட்டுக்குள் கொண்டு வர உலக நாடுகள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் டெல்டாவையும் விட்டு வைக்கவில்லை. திருச்சியில் 30 பேருக்கும், தஞ்சையில் 3 பேருக்கும், அரியலூரில் ஒருவர் எனக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 129 ஆக உயர்ந்துள்ளது.

அத்தோடு 22,251 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வரும் சம்பவம் டெல்டா மக்களை நிலைகுலைய வைத்திருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரை மையமாகக் கொண்டு உருவான கொரோனா வைரஸ், உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி கடும் உயிர்ச் சேதத்தை உருவாக்கியதோடு, மனித இனத்துக்கே பெரும் சவாலாக அமைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில், படிப்படியாகக் குறைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். ஆனால் இத்தாலி, அமெரிக்காவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் 1 லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் என்று அந்த நாட்டுப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உயிரிழப்பு 133 ஆக அதிகரித்துள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,858 உயர்ந்துள்ளது. பலர் சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில், வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் கடந்த 1ம் தேதி 10 பேருக்கும், 2ம்தேதி 75 பேருக்கும், 3ம் தேதி 102 பேருக்கும், 4ம் தேதி 74 பேருக்கும், 5ம்தேதி 86 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மட்டும் 50 பேருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 48 பேர் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள்.

டெல்டா மாவட்டங்களில் கொரோனாவால் பாதித்தவர்கள் மற்றும் வார்டுகளில், அனுமதிக்கப்படுவோர் தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டையில் கொரோனா அறிகுறியுடன் வந்த 11 பேரில் 10 பேருக்குக் கொரோனா இல்லை என முடிவு வந்ததால் அவர்கள் வீடு திரும்பினர். தற்போது ஒருவர் மட்டும் உள்ளார். அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தஞ்சையில் நேற்றுமுன்தினம் மேலும் 3 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 8 ஆனது. திருச்சியில் 30 பேர், திருவாரூரில் 12 பேர், நாகையில் 11 பேர், கரூரில் 66 பேர், அரியலூரில் ஒருவர், பெரம்பலூரில் ஒருவர் என 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு 129 ஆக உயர்ந்துள்ளது.

கரூரில் சிகிச்சை பெற்று வரும் 66 பேரில் 43 பேர் வெளி மாவட்டத்தினர். கொரோனா வைரஸ் அறிகுறியுடன் தஞ்சையில் 123 பேர், அரியலூரில் 41 பேர், பெரம்பலூரில் 18 பேர், புதுக்கோட்டையில் ஒருவர், திருச்சியில் 46 பேர் என மொத்தம் 229 பேர் அந்தந்த அரசு மருத்துவமனை சிறப்பு வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை என 22,251 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.