“முதல் மற்றும் இரண்டாம் ட்ரைமெஸ்டர்களில் இருக்கிற கர்ப்பிணிகள் முதல் எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நடக்கலாம் என்கிற நிலையில் இருக்கிற கர்ப்பிணிகள் வரை பலருக்கும் ஊட்டச்சத்துத் தொடர்பான அறிவுரைகள் வழங்கி வருகிறேன். அவர்களில் பலரும் தற்போது ஸ்கேன் எடுக்க வெளியே செல்வதற்கும் பயப்படுகிறார்கள்.

சிலர் ‘எனக்கு கொரோனா வந்தால் வயிற்றில் இருக்கும் என் குழந்தைக்கும் வந்து விடுமா’ என்று கேட்கிறார்கள். கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள் குழந்தையின் பால் பாட்டில் வழியாகக் கொரோனா வைரஸ் தொற்று வருமா என்றெல்லாம் அச்சத்துடன் கேட்கிறார்கள். இவர்களைப் போலவே பயந்துகொண்டிருக்கிற கர்ப்பிணிகளுக்கு சில ஆலோசனைகளைப் பகிர விரும்புகிறேன்” என்கிறார் ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ்,
சந்தோஷமான விஷயங்களை மட்டும் யோசித்துக் கொண்டிருங்கள்

கர்ப்பமாக இருப்பது வாழ்க்கையின் சந்தோஷமான நேரம். இதைக் கொரோனா பயத்தால் தவறவிடாதீர்கள். கொரோனா தொடர்பாக எல்லா தகவல்களையும் படித்தால் மனதில் படபடப்பு வந்துவிடும். இது வயிற்றில் இருக்கிற குழந்தைக்கு நல்லதல்ல. பிறக்கப் போகிற குழந்தை தொடர்பான சந்தோஷமான விஷயங்களை மட்டும் இப்போது யோசித்துக்கொண்டிருங்கள்.
ரெகுலர் செக்கப்புக்கு கட்டாயம் செல்லுங்கள்

ரெகுலர் செக்கப்புக்காக மருத்துவமனைக்குப் போனால் கொரோனா தொற்று வந்துவிடுமோ என்று பயப்படுகிற கர்ப்பிணிகளுக்கு ஒரு விஷயம். தற்போது, பிளட் டெஸ்ட் செய்ய வேண்டுமென்றால் மருத்துவப் பணியாளர்களே வீடு தேடி வந்து ரத்தம் எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். ரெகுலர் செக்கப்புக்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றால், உங்கள் மருத்துவரிடம் `அவசியம் வர வேண்டுமா’ என கன்ஃபார்ம் செய்துகொண்டு செல்லுங்கள். ஒரு வேளை உங்கள் மருத்துவர் `ஸ்கேன் செய்து சிசுவின் பொஷிஷனைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று’ உங்களை மருத்துவமனைக்கு அழைத்தால் பயப்படாமல்முகக்கவசம், கையுறை என்று பாதுகாப்பாகச் செல்லுங்கள். வீட்டுக்கு வந்தவுடன் தலை முதல் கால்வரை சுத்தமாகக் குளித்து விடுங்கள்.
வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களைத்தான் கொரோனா தாக்குகிறது என்கிறார்கள். உங்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின்படி வைட்டமின் பி, வைட்டமின் சி, மல்டி வைட்டமின் மாத்திரைகள், ஸின்க், ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருள்களையும் தவிர்க்கலாம்

இந்த நேரத்தில் அசைவ உணவுகளையும் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருள்களையும் தவிர்த்துவிட்டு நம் மண்ணில் விளைகிற உணவுப்பொருள்களைச் சாப்பிடுவது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள்

துளசி கொதிக்க வைத்த தண்ணீர், கீரைகள், புரொக்கோலி வெண்டைக்காய், தக்காளி, புடலங்காய் சீஸனல் பழங்கள், நட்ஸ் என்று சத்தாகச் சாப்பிடுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நீர்ச்சத்து குறையவே கூடாது

நிறைய தண்ணீர் குடியுங்கள். இந்த நேரத்தில் உடலில் நீர்ச்சத்து குறையவே கூடாது.
மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர வீட்டுக்குள்ளேயே இருங்கள்

பக்கத்தில் இருக்கிற கோயில், அடுத்த தெருவில் இருக்கிற தோழியின் வீடு, கல்யாணம் என்று எங்கும் வெளியே செல்லாதீர்கள். மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர வீட்டுக்குள்ளேயே இருங்கள்.
புரதச்சத்து பானம்

நோய் எதிர்ப்புத் திறனுக்கு மிகவும் அவசியமானது புரதச்சத்து நீங்கள் என்ன மாதிரியான புரதச்சத்து பானம் எடுத்துக் கொள்ளலாம் என்று உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.
Also Read: `சித்த மருத்துவம் பரிந்துரைத்த கபசுரக் குடிநீர்!’ – விளக்கும் மருத்துவர் கு.சிவராமன்
குழந்தைக்குப் பாலூட்டுவதற்கு முன்பு…

குழந்தைக்குப் பாலூட்டுவதற்கு முன்பு கைகளை ஆர்கானிக் சானிட்டைசரால் சுத்தம் செய்துகொள்ளுங்கள். உங்கள் செல்போன்களை ஒரு நாளைக்கு இரண்டுமுறை சானிட்டைசரால் துடையுங்கள்.
Also Read: மோடிக்கு கருமிளகு… எடப்பாடிக்கு கபசுரக் குடிநீர்! – பிரதமர், முதல்வரின் புதிய மெனு!
குழந்தைக்குப் பாலூட்டுகிற பாட்டில் மற்றும் கிண்ணங்களை…

குழந்தைக்குப் பாலூட்டுகிற பாட்டில் மற்றும் கிண்ணங்களை வெந்நீரால் நன்கு கழுவி உலர வைத்துப் பயன்படுத்தினாலே எந்த நோய்த் தொற்றும் வராது.