தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வெகு தீவிரமாக இயங்கி வருகிறார்கள். பேராவூரணி அருகே ஒரு ஊராட்சி மன்றத் தலைவர், பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் கால்நடைகளின் நலன் காக்கவும் தடுப்பூசி உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்து மக்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

பேராவூரணி அருகேயுள்ள முடச்சிக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரவர்த்தி. 1,100க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட இந்த ஊராட்சியில் சுமார் 3,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மிகவும் திட்டமிட்டுச் சிறப்பாகச் செய்து வருகிறார்.
கொரோனா பரவுவதை தடுப்பதற்காக மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்தது. அதற்கு முன்பே, மைக்செட் கட்டி கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, மினி டோர் ஆட்டோவில் பெரிய தண்ணீர் டேங்கை வைத்து கிருமி நாசினி நிரப்பி ஊர் முழுக்கத் தெளிக்கச் செய்தார்.
சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி, நோயெதிர்ப்புக் கஷாயம் தயாரித்து தெருத்தெருவாகக் கொண்டுசென்று மக்களுக்கு வழங்கினார்.

ஊரில் இருந்த இறைச்சிக் கடைகள் அனைத்தையும் மூடச் செய்தார். மீறி கடைகளைத் திறந்தால் தண்ணீர் இணைப்பை கட் செய்வதுடன், ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒத்துழைப்பும் கொடுக்க மாட்டோம் என்றும் அறிவித்தார்.
மொத்தமுள்ள ஒன்பது வார்டுகளுக்கும் தனித் தனியாக வாட்ஸ் அப் குரூப்கள் உருவாக்கி அதில் இளைஞர்களை இணைத்து 24 மணி நேரமும் கண்காணிக்கச் செய்தார்.

ஊராட்சியைத் தனிமைப்படுத்தியதோடு, சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி ஒருவழி சாலையாக மாற்றி, வெளியூர் ஆட்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளார்.
வெளிமாநிலத்தைச் சேர்ந்த 20 பேர் இந்தப் பகுதியில் தத்தளிக்க, அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்துள்ளார்.
இந்த நிலையில் பெரியவர் ஒருவர், “தம்பி நம்ம ஊர்ல 200க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் இருக்கு. அதுக்கெல்லாம் கோமாரி தடுப்பூசி போடும் காலம் இது. அதைச் செஞ்சா கால்நடைகளை எந்த நோயும் தாக்காமல் காக்கலாம் என்று சொல்ல கால்நடை மருத்துவரைத் தொடர்புகொண்டு உடனே தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்தார்.

வார்டு வாரியாக எந்தச் சிக்கலும் இல்லாமல் கால்நடை மருத்துவர் சென்று தடுப்பூசி போட்டார்.
இதுபற்றி சக்கரவர்த்தியிடம் பேசினோம். “கொரோனாவை முறியடிக்க தொடக்கத்திலிருந்தே, `செயலால் ஒன்று கூடுவோம் உடலால் தனித்திருப்போம்’ என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். மக்கள் தொடங்கி அவர்களின் வாழ்வாதாரமான கால்நடைகள் மற்றும் விவசாயத்தையும் காக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எல்லோரையும் ஒருங்கிணைத்து எடுத்துள்ளேன்” என்றார்.