பேராவூரணி பகுதியில் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் மாதம்தோறும் சிகிச்சைக்கு வரும் வயதானவர்கள் பாதிக்காத வகையில் அவர்களின் வீட்டுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவினரை பொதுமக்கள் பலரும் நெகிழ்ச்சியோடு பாராட்டி வருகின்றனர்.

பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் குறிச்சி, காலகம், பின்னவாசல் ஆகிய சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு தினமும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் வயதான பெண்கள் மற்றும் ஆண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாதம்தோறும் ரெகுலராக வந்து ரத்தம் அழுத்தம், சர்க்கரை மற்றும் இதய நோய் போன்றவற்றுக்கு சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகள் வாங்கிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல், முதியோர்கள், நோயாளிகள் கடந்த 15 தினங்களாகக் கடுமையாக அவதிப்பட்டு வந்தது பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலரான டாக்டர் சௌந்தர்ராஜன் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து செளந்தர்ராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மாதம்தோறும் சிகிச்சை பெற்று வந்தவர்களின் பட்டியலை எடுத்து அவர்களின் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தர்ராஜனிடம் பேசினோம். “பேராவூரணி வட்டாரத்தில் 1,127 ரத்தக்கொதிப்பு, சர்க்கரை, இதய நோய் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ஒரு முறை உடலில் ரத்தம், சர்க்கரை உள்ளிட்டவையின் அளவை அவசியம் சோதனை செய்வதுடன் அதற்கேற்றாற்போல் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் ஊரடங்கால் அவர்கள் பாதிக்கப்படக் கூடாது என எண்ணி இரண்டு சக்கர வாகனம் மூலம் இ.சி.ஜி, மெஷின், சர்க்கரை அளவு பரிசோதனை இயந்திரங்கள் மற்றும் தேவையான மாத்திரைகளை எடுத்துக்கொண்டு அவர்களுடைய வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்து சிகிச்சையளித்து வருகிறோம். அத்துடன் அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் கொடுத்து வருகிறோம்.

இதனால் உதவிக்கு ஆள் இல்லாத முதியவர்கள் தொடங்கி பலரும் பயனடைந்து வருகின்றனர். வயதான பெண்மணி ஒருவர், `நேராக வந்தாலே சரியா கவனிக்காத டாக்டர்களுக்கு மத்தியில் வீடு தேடி வந்து எங்களைப் பெத்த புள்ளயாட்டம் கவனிக்குறீங்களே! நீங்க நல்லா இருக்கணும்’ என நெகிழ்ச்சியோடு பாராட்டினார். அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் வீட்டுக்கே சென்று மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். இம்மாதத்தில், குழந்தை பிறக்கும் நிலையில் உள்ள கர்ப்பிணிப் பெண்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்றார்.