கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் தீவிரம்காட்டி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். தற்போதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,759 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆகவும் உள்ளது.

வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறார்கள். குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெய்ன், அமெரிக்கா ஆகிய நாடுகளும், இந்தியாவில் டெல்லி போன்ற பகுதிகளிலிருந்து திரும்பியவர்கள், 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் டெல்லியிலிருந்து கேரளா திரும்பிய 19 வயது மாணவி ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி என்னவென்றால், அந்த மாணவி தனிமைப்பட்டிருந்த நாள்களில் அவருக்கு எந்த வைரஸ் அறிகுறியும் தென்படவில்லை. ஆனால், வைரஸ் தொற்று இருப்பது மட்டும் உறுதியாகியுள்ளது. இந்த விவகாரம் கேரளா உட்பட மொத்த இந்திய மருத்துவர்களையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.

வைரஸ் உறுதியான அந்த மாணவி, மார்ச் 15-ம் தேதி, நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து மங்கலா லட்சதீப் எக்ஸ்பிரஸில் பயணித்து, மார்ச் 17-ம் தேதி, எர்ணாகுளம் ரயில் நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து உள்ளூர் ரயில் மூலம் ஆலப்புழா வந்து அங்கிருந்து அரசுப் பேருந்தில் பயணித்து பத்தனம்திட்டாவின் பண்டலம் வந்தடைந்துள்ளார். அந்த மாணவி டெல்லியிலிருந்து வந்ததால், கேரள அரசின் அறிவுறுத்தல்படி 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இது முடிந்ததும், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி இவருக்கு நடந்த கொரோனா சோதனையில், வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
Also Read: கொரோனா எதிர்ப்பில் கேரளா செய்ததும், தமிழகம் செய்ய வேண்டியதும்… விரிவான அலசல்!
`டெல்லியிலிருந்து கேரளா வந்த மாணவி, தப்லிக் ஜமாத் மாநாடு நடைபெற்ற நிஜாமுதீனிலிருந்து வந்துள்ளார். எனவே, அவரை தனிமைப்படுத்தி வைரஸ் சோதனை செய்ய முடிவெடுத்தோம். அப்படி நடந்த சோதனையில்தான் அவருக்கு வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது’ என கேரளாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைரஸ் தொற்று உறுதியான பிறகு, அந்த மாணவி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. அந்த மாணவிக்கு எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மாணவி பயணித்த அதே மார்ச் 17-ம் தேதி, பலர் மாநாடு முடித்து பல மாநிலங்களுக்குப் பயணித்துள்ளனர் என்ற தகவல் மட்டும் கிடைத்துள்ளது. அறிகுறியே இல்லாமல் வைரஸ் உறுதியாகியுள்ள மாணவியின் உடல்நிலை பற்றி ஆய்வுசெய்ய ஒரு மருத்துவ ஆராய்ச்சிக் குழுவை நியமித்துள்ளது கேரள அரசு. மாணவியின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், வளைகுடா நாட்டிலிருந்து கேரளா வந்த மற்றொருவருக்கும் அறிகுறி இல்லாமல் வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.