மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் (Hydroxychloroquine) என்னும் மருந்து கொரோனா வைரஸ் நோய்யை எதிர்ப்பதில் கேம் சேஞ்சராக இருக்கும் என அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் தெரிவித்தது. மேலும் உலக நாடுகளிடம், கொரோனாவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கலாம் என தெரிவித்தது. இதைத் தொடர்ந்து உலக நாடுகளில் இந்த மருந்துக்கு கடும் டிமாண்ட் ஏற்பட்டது. உலக அளவில் இந்த மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியா, கொரோனா பரவல், அதனால் ஏற்படும் உள்நாட்டுத் தேவை ஆகியவற்றை மனதில் வைத்து ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக அழைத்து, ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கி அமெரிக்காவுக்கு மருந்துகள் தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், “மோடியிடம் பேசுகையில் எங்கள் பொருள்கள் வெளி வருவதற்கு அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்தேன். அவர் மருந்துப் பொருள்கள் வெளி வருவதற்கு உதவவில்லை என்றால், ஒன்றும் பிரச்னை இல்லை.. ஆனால்… ஒரு பதிலடி இருக்கலாம்” என்று எச்சரிக்கும் விதமாக பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியது. எனினும் அவர், தான் பிரதமரிடம் பேசிய பிறகு இந்தியா அது குறித்து தீவிரமாக பரிசீலிப்பதாகவும் ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
Also Read: `மோடியிடம் கேட்டிருக்கிறேன்; அனுமதி கிடைக்காவிட்டால்.. பதிலடி?!’ -மருந்து விவகாரத்தில் ட்ரம்ப்
இந்த நிலையில், இந்தியா அண்டை நாடுகளுக்கும் கொரோனாவால் அதிகம் பதிப்படைந்த நாடுகளுக்கும் மருந்துகள் வழங்க முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை, “கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்றை மனதில் கொண்டு, நமது நாட்டின் திறனை சார்ந்து இருக்கும் சில அண்டை நாடுகளுக்கு பாராசிட்டாமல் மற்றும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் ஆகிய மருந்துகளை மனிதாபிமான அடிப்படையில் வழங்க முடிவு செய்துள்ளோம்.

மேலும், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகளுக்கும் இந்த மருந்துகளை வழங்க முடிவு செய்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விஷயத்தில் தேவையில்லாத யூகங்கள் வேண்டாம் என்றும் இதை அரசியலாக்கும் முயற்சிகள் தேவையற்றது எனவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவு அண்டை நாடுகளுக்கும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க போன்ற நாடுகளுக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. எனினும் இந்தியாவில் இந்த வகை மருந்துகள் கையிருப்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பரவி வரும் சூழலில் நாட்டில் போதுமான அளவில் மருந்துகள் கையிருப்பு இருக்கிறதா என்பதை அரசு மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் வரத் தொடங்கியுள்ளன.