சீனா, இத்தாலியைத் தொடர்ந்து அமெரிக்காவில் தாண்டவம் ஆடுகிறது கொரோனா வைரஸ். தினமும் 25,000-க்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பலி எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்து வருகிறது. `இனி வரும் இரண்டு வாரங்கள் அதிக வலி நிரம்பியதாக இருக்கும்’ என ட்ரம்ப் கடந்த வார இறுதியில் தெரிவித்திருந்தார். தற்போதுவரை அமெரிக்காவில் 3,67,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,876 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா

ஆரம்பத்தில் அமெரிக்கா கொரோனா வைரஸை மிக எளிதாக எடுத்துக்கொண்டாலும் தற்போது நோய் தடுப்பு விஷயத்தில் தீவிரம் காட்டுகிறது. அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா கொரோனா வைரஸ் தடுப்புக் குழுவுடன் தினமும் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார். அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாகவும் எதிர்கொள்ள இருக்கும் சவால் தொடர்பாகவும் அவர் தினமும் பேசுகிறார்.

Also Read: `மருந்து விஷயத்தில் பின்தங்கியுள்ளோம்.. கொரோனா வைரஸ் செம ஸ்மார்ட்!’ – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

கடந்த மார்ச் மாதத்தில், மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ரோக்ளோரோக்யூன் (Hydroxychloroquine) என்னும் மருந்து கொரோனா வைரஸ் நோயை எதிர்ப்பதில் `கேம் சேஞ்சராக’ இருக்கும் என அமெரிக்கா தெரிவித்தது. மேலும், உலக நாடுகளிடம், கொரோனாவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கலாம் என தெரிவித்தது. இதைத் தொடர்ந்து உலக நாடுகளில் இந்த மருந்துக்கு கடும் டிமாண்ட் ஏற்பட்டது. உலக அளவில் இந்த மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியா, கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்த மருந்து ஏற்றுமதிக்குத் தடை விதித்தது.

கொரோனா மருந்து

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியப் பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார். இந்த உரையாடலின்போது இருநாடுகளில் நிலவும் கொரோனா நிலவரம் குறித்தும் இருவரும் விவாதித்தனர். மேலும், ட்ரம்ப் மோடியிடம், “இந்தியா ஹைட்ரோக்ளோரோக்யூன் மருந்துக்கு விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடைக்கு விலக்கு அளித்து அமெரிக்காவுக்கு தர வேண்டும்” என கோரிக்கை வைத்தார். பரிசீலித்து உரிய முடிவெடுப்பதாக மோடி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மோடியிடம் வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாகப் பேசினார். அப்போது அவர்“ஹைட்ரோக்ளோரோக்யூன் மருந்து ஏற்றுமதிக்குத் தடை என்பது அவரது முடிவா என்பது தெரியவில்லை. அவர் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளார்.

ட்ரம்ப்

நேற்று அவரிடம் பேசினேன். அது ஒரு நல்ல உரையாடலாக அமைந்தது. அது நிலைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவர் அதை அமெரிக்காவுக்காக செய்தால் நான் ஆச்சர்யபட மாட்டேன். காரணம் இந்தியா அமெரிக்கா இடையே நல்ல உறவு இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து ட்ரம்ப், “மோடியிடம் பேசுகையில் எங்கள் பொருள்கள் வெளிவருவதற்கு அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்தேன். அவர் மருந்துப் பொருள்கள் வெளி வருவதற்கு உதவவில்லை என்றால், ஒன்றும் பிரச்னை இல்லை.. ஆனால்… ஒரு பதிலடி இருக்கலாம்” என்றார். எனினும் அவர், தான் பிரதமரிடம் பேசிய பிறகு இந்தியா அது குறித்து தீவிரமாக பரிசீலிப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

மோடி – ட்ரம்ப்

கொரோனா விவகாரத்தில் ட்ரம்ப் பேசியுள்ளது உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும், ஹைட்ரோக்ளோரோக்யூன் என்னும் மருந்து கொரோனாவுக்கு தீர்வு என்பது கிடையாது. அதற்கு அறிவியல்பூர்வமான ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை. எனினும் தற்போது இது கொரோனாவுக்கு எதிராக சற்று சிறப்பாக செயல்படுகிறது என கூறப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.