பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

எது உண்மையான தானம் என்பது குறித்து ஒரு புராணக்கதை வழங்கப்படுகிறது.

ஒருநாள் பாண்டவர்கள் ஐவரும் கிருஷ்ணரிடம் சென்று “நாங்களும் பிறருக்கு தானம் செய்கிறோம். கர்ணனும் தானம் செய்கிறான். ஆனால் கர்ணனை மட்டும் கொடைவள்ளல் என உலகம் கொண்டாடுகிறதே! ஏன் அப்படி? அப்படியானால் நாங்கள் கொடுப்பது கொடை இல்லையா?” என்று கேட்டார்கள்.

அவர்களைப் பார்த்து கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே, “இதற்கு நான் பதில் கூறுவதை விட யார் கொடுப்பது கொடை என்பதை நாம் நேரடியாக சோதித்துப் பார்ப்பதே சிறந்தது” என்றார்.

Representational Image

சோதனை ஆரம்பித்தது. கிருஷ்ணர் தன்னுடைய சக்தியால் ஒரு தங்க மலையையும், ஒரு வெள்ளி மலையையும் உருவாக்கினார். பாண்டவர்களைப் பார்த்து “இந்த இரு மலைகளையும் இன்று மாலை பொழுது சாய்வதற்குள் நீங்கள் தானம் அளித்துவிட வேண்டும்” என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

பாண்டவர்களும் மலையை வெட்டி எடுப்பதற்குத் தேவையான கடப்பாரை, மண்வெட்டி, சட்டி போன்ற உபகரணங்களை எடுத்து வந்து தங்க மலையையும், வெள்ளி மலையையும் வெட்டி வெட்டி அந்த வழியாக வருவோர் போவோர் அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தனர்.

காலையில் இருந்து இவ்வாறு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தும் மலைகள் தீர்ந்தபாடில்லை. இவர்கள் வெட்டிக் கொடுக்கக் கொடுக்க மலைகள் வளர்ந்து கொண்டே இருப்பது போல் இருந்தது.

சோர்ந்துபோயினர். பொழுது சாயும் நேரம் வந்துவிட்டது.

கிருஷ்ணர் சிரித்தபடி அங்கு வந்தார்.

“என்ன கொடை அளிப்பது இன்னும் தீரவில்லை போலிருக்கிறது?” என்றார்.

பாண்டவர்கள் கிருஷ்ணரிடம் “எங்களால் இந்த மலைகளை தானமாக கொடுத்து தீர்க்க முடியவில்லை” என்று தமது தோல்வியை ஒப்புக் கொண்டனர்.

Representational Image

“நீங்கள் கர்ணனுக்கும் இதே போன்று போட்டி வையுங்கள். அவன் என்ன செய்கிறான் என்று பார்க்கலாம். எங்கள் ஐவராலேயே முடியவில்லை. அவன் ஒருவனால் எப்படி மலைகளை தானம் அளித்துவிட முடியும்?” என்று கூறியபடி ஐவரும் சோர்வுடன் அமர்ந்து விட்டனர்.

உடனே கிருஷ்ணர் கர்ணனை அழைத்தார்.

அவனிடமும் போட்டி குறித்து கூறப்பட்டது.

“நாளை உனக்கும் இதுபோன்றே இரண்டு மலைகள் கொடுக்கப்படும். அதனை நாளை பொழுது சாய்வதற்குள் நீ தானம் செய்தாக வேண்டும்.”என்றார் கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே.

“நாளை வரை எதற்கு கிருஷ்ணா? இப்போதே தானம் செய்கிறேன்” என்றபடி அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்த இரண்டு வழிப்போக்கர்களை கர்ணன் அழைத்தான்.

அவர்களிடம் “இந்தத் தங்கமலையை நீ வைத்துக்கொள். இந்த வெள்ளிமலையை நீ வைத்துக்கொள். அவ்வளவுதான்! மலைகளை தானம் அளித்துவிட்டேன் கிருஷ்ணா!” என்றபடி சென்றான் கர்ணன்.

கிருஷ்ணர் பாண்டவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார். தானம் அளிக்கும் விஷயத்தில் தாங்கள் தோற்றுப்போனதை பாண்டவர்கள் ஒப்புக்கொண்டனர். தானம் அளிப்பதற்கு செல்வத்தை விட மனம்தான் முக்கியம் என்பதை உணர்ந்துகொண்டனர். கர்ணனே உண்மையான கொடைவள்ளல் என்பதை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர்!

ஆம்! பணத்தைவிட மனம்தான் பிறருக்குக் கொடுப்பதற்கான ஆதார சக்தியாக இருக்கிறது. இன்றைய லாக்டவுன் சூழலில் இந்தப் பரந்த உலகில் வாழக்கூடிய எத்தனையோ பேர் உணவின்றிப் போதுமான அடிப்படை வசதிகள் இன்றித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Representational Image

அவர்கள் அனைவருக்குமே நாம் உதவுவது என்பது இயலாத காரியம். ஆனால் நம்முடைய அறிமுக வட்டாரத்தில் நம்முடைய நண்பர்கள், உறவினர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் போன்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை நாம் மனமுவந்து செய்வது இன்றைய சூழலின் அடிப்படை அறமாகும்.

நம்மை நம்பி வியாபாரம் மற்றும் தொழில்கள் செய்து கொண்டிருந்தவர்களும், நமக்கு உதவியாளர்களாக இருந்தவர்களும், இல்லாதோரும், இயலாதோரும் இந்த லாக்டவுன் சூழலை எதிர்கொள்வது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

நாம் உதவ முன்வந்தாலும், அடிப்படைத் தேவைகள் எனும்போது நமது நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்கள் நம்மிடம் வாங்குவதற்கு கூச்சப்பட்டும், சங்கடப்பட்டும் கேட்காமலேயே இருக்கலாம். அதுதான் மனித இயல்பும் கூட. அத்தகைய சூழலில் அவர்களின் உண்மையான நிலையை அறிந்து அவர்களுக்கு நாம் உதவுவது அவசியமான ஒன்று.

உதவி எனும்போது இப்போது உணவாகவோ, பொருளாகவோ எதையுமே கொடுக்க முடிவதில்லை எனில் எவ்வாறு உதவுவது?

Representational Image

பணத்தைவிட உணவுதான் முக்கியம் என்ற நிலையை நோக்கி மனித சமூகம் தற்போது நகர்ந்துகொண்டே போனாலும்,

இப்போதும் பணத்திற்குச் சிறிது மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. நமக்கு நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்களின் தேவையை அறிந்து அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ஆன்லைன் மூலமாகப் பணத்தைப் பரிமாற்றம் செய்வது இன்றைய அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உறுதுணையாக அமையும்.

நாம் அவர்களின் வங்கி விவரங்களைக் கேட்கும்போது, தற்போதைக்குத் தேவையில்லை என்றோ அல்லது தேவைப்படும்போது பெற்றுக்கொள்கிறேன் என்றோ நமது உதவிகளைப் பிறர் மறுப்பதற்கு வாய்ப்புள்ளது. இந்த மறுப்பு “சாதாரண நாள்களில் நமது வீட்டிற்கு வந்த விருந்தாளிகளிடம் நாம் உணவு உண்ணுமாறு கூறும்போது, அவர்கள் வேண்டாம் என மறுப்பதற்கு இணையானது.”

நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் “இப்போதுதான் சாப்பிட்டேன்,

எதுவும் வேண்டாம்” என்றால் நாம் அப்படியே விட்டுவிட மாட்டோம் தானே. அவர்களை உணவு உண்ணுமாறு வற்புறுத்துவதே தமிழர்களின் விருந்தோம்பல் மரபு.

Representational Image

அது போன்றே சாதாரண நாள்களில் சமூகத்தில் மரியாதையுடன் வாழ்ந்தோர், தற்போது தேவைகள் இருப்பினும் உதவிகளை வேண்டாம் என மறுப்பர்.

அவர்களின் நிலை அறிந்து அவர்களை வற்புறுத்தி உதவிகளுக்கு இணங்க வைப்பது நமது கடமை ஆகும்.

இணையதளம் மூலமான பண உதவியுடன், அவர்களுடைய மொபைல் போனுக்கு ரீசார்ஜ் செய்வது,

கடன்களுக்கான இ.எம்.ஐ குறித்த புரிதல் இல்லாதவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது போன்றவையும் தற்போதைய சூழலில் ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படையான கடமை ஆகும்.

நம் கண்முன்னே கஷ்டத்தில் ஆழ்ந்திருக்கும் வங்கிக் கணக்கு இல்லாதோர்க்குப் பணமாகவே உதவுதலும் அவசியம்.

ஆடை நழுவும் போது அனிச்சையாய் நமது கைகள் அதைச் சென்று பிடிப்பது போ, நாம் இத்தகைய செயல்களை,

மனமுவந்து அனிச்சையாய் செய்ய வேண்டும்.

ஒப்புரவு, ஈகை எனும் இரு சொற்கள் திருக்குறளில் கையாளப்பட்டிருக்கும்.

இவ்விரண்டின் பொருள் ஒன்று போலத் தோன்றினாலும் இரண்டுக்குமிடையே சற்று வேறுபாடு உள்ளது.

உலக ஒழுக்கத்தை அறிந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வது ஒப்புரவு.

தேவைப்படுவோர்க்கு அவர் தேவையை அறிந்து, பதில் உதவி எதிர்பாராது கொடுப்பது ஈகை.

Representational Image

நாம் இத்தனை நாள்களாக பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்ந்துகொண்டிருந்தோம். ஆனால் இப்போது நாம் ஒன்று கொடுத்தால் பிறர் ஒன்று கொடுப்பார்கள் எனும் ஒப்புரவை விட, தேவையுடையோருக்கு அவர்களின் தேவை அறிந்து கொடுக்கும் ஈகை அவசியமாகிறது.

பிறருக்கு உதவுவதால் அவர்களுக்கு மட்டுமே பயன் ஏற்படுவதில்லை. நமக்கும் அதனால் பயனே. ஒப்புரவினால் இம்மைப் பயன். ஈகையால் மறுமைப் பயன் என்று விளக்கம் கூறுவர்.

ஆனால் மறுமையில் பயன் என்பதைவிட, நாம் ஒருவருக்குக் கொடுக்கும் போது ஏற்படக்கூடிய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அந்த மகிழ்ச்சியை ஒவ்வொரு மனிதனும் உணர ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைவது (Joy of giving) என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

நமது அறிமுக வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மால் இயன்றதைச் செய்வோம்! கொடுப்பதால் உண்டாகும் மகிழ்ச்சியை அனுபவிக்கத் தொடங்குவோம்!

இத்தனை நாள்களாய் நாம் மகிழ்வுடன் வாழ ஏதேனும் ஒருவிதத்தில் உறுதுணையாக இருந்த இந்த மனித சமூகத்திற்கு இன்று நாம் திரும்ப அளிப்பது சொற்ப அளவிலானதுதான். எனினும் இன்றைய சூழலில் இது பெரும் உதவி என்பது மட்டுமல்லாது, இது சமூகத்திற்கு மனிதன் அவசியம் செய்ய வேண்டிய செஞ்சோற்றுக் கடன்!

அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.