அணியின் ஓப்பனராக, கேப்டனாக… கௌதம் கம்பீர். கேப்டனாக கம்பீரின் செயல்பாடுகள் பற்றி அதிகமாக விளக்கத் தேவையில்லை. ஸ்லோவான ஈடன் ஆடுகளத்துக்கு ஏற்றவாரு ஸ்பின்னர்களைப் பயன்படுத்தியது, சுனில் நரேனை ஓப்பனராகப் பயன்படுத்தியது போன்ற சில விஷயங்கள் நிச்சயம் அவரைத் தனித்துக்காட்டும். பேட்ஸ்மேனாகவும் அவரது பங்களிப்பு அசாத்தியமானது. சீசனுக்கு சீசன் 4,5 அரை சதங்கள் அடித்திருக்கிறார். தொடர்ந்து 4 போட்டிகளிலும் டக் அவுட் ஆனாலும், அசராமல் கம்பேக் கொடுக்கக்கூடிய கம்பீர், நிச்சயம் நைட்ரைடர்ஸின் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேன்.
Also Read: ரோஹித், சச்சின், ராயுடு… யார் யாருக்கு என்ன பொசிஷன்?! – மும்பை இந்தியன்ஸ் ஆல் டைம் 11
கம்பீரோடு சக ஓப்பனராக ராபின் உத்தப்பா. கொல்கத்தாவுக்காக விளையாடிய முதல் சீசனிலேயே ஆரஞ்ச் கேப் வென்று அசத்தியவர். ஐ.பி.எல் கோப்பை வெல்வதற்கு கொல்கத்தாவுக்கு மிகப்பெரிய துணையாக இருந்தார். அதன்பிறகு அதே ஃபார்மில் ஆடாவிட்டாலும், ஒவ்வொரு சீசனிலும் குறைந்தபட்சம் 350 ரன்கள் எடுத்திருக்கிறார். முக்கியமான போட்டிகளில் இவரது அனுபவம் சில நல்ல பார்ட்னர்ஷிப்களை ஏற்படுத்தி உதவியிருக்கிறது. ஒருவேளை, சுப்மான் கில் கடந்த சீசனுக்கு முன்பே ரெகுலர் ஓப்பனராக ஆடியிருந்தால், உத்தப்பாவின் இடத்துக்குப் போட்டி வந்திருக்கும்.

நம்பர் 3 பேட்ஸ்மேனாக, கொல்கத்தாவின் மார்க்கீ வீரர்… சௌரவ் கங்குலி. கங்குலி இல்லாத ஒரு ஆல்டைம் லெவன் இருந்தால் கலவரமே வந்துவிடும் என்றாலும், அவரது பங்களிப்பைப் புறக்கணித்துவிட முடியாது. தென்னாப்பிரிக்காவில் நடந்த இரண்டாவது சீசனில் மிகவும் சுமாராகத்தான் ஆடினார். ஆனால், தன் சொந்த ஊர் அணிக்கு ஆடிய மற்ற இரண்டு சீசன்களிலும் இவர்தான் டாப் ஸ்கோரர். மூன்றாவது சீசனில் 493 ரன் எடுத்து, அந்த சீசனின் நான்காவது டாப் ஸ்கோரராக வந்தார் சௌரவ். அதுபோக, 8 விக்கெட் வீழ்த்தியிருக்கும் அவரது பார்ட் டைம் பௌலிங்கும் கொல்கத்தாவுக்கு பெரிய உதவியாக இருக்கும். ஆனால், கம்பீரின் தலைமையின் கீழ்தான் தாதா விளையாடவேண்டியிருக்கும்.
ஆடிய 4 சீசன்களில், இரண்டில் 400+ ரன்கள்… இரண்டு முறை 15+ விக்கெட்டுகள்… ஜாக் காலிஸை சேர்ப்பதற்கு இதற்கு மேல் காரணங்கள் தேவையில்லை. ஆறாவது பேட்ஸ்மேனுக்கான ஸ்லாட்டை போட்டியின்றி ஆண்ட்ரே ரஸலுக்குக் கொடுத்துவிடலாம். மீதமிருக்கும் இரண்டு பேட்டிங் ஸ்லாட்டுகள் 5 மற்றும் 6-ல் இரண்டு பேட்ஸ்மேன்களைப் பொருத்த வேண்டும். அந்த இடங்களில் தினேஷ் கார்த்திக் & யுசுப் பதான். இரண்டு சீசன்களில்தான் ஆடியிருக்கிறார் என்றாலும் டி.கே சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். இந்த சீசன் கொஞ்சம் சுமார்தான் என்றாலும், ராஜஸ்தானுக்கு எதிராக ஆடியதைப் போன்ற இன்னிங்ஸ்கள், கொல்கத்தாவின் மிடில் ஆர்டரிலிருந்து (ரஸல் தவிர்த்து) வருவது மிகப்பெரிய விஷயம்!

யுசுப் பதான்… மிகப்பெரிய சீசன்கள் கொண்டிருந்ததில்லை என்றாலும், பல போட்டிகளில் தன்னுடைய கேமியோக்களால் ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், முழு இன்னிங்ஸையும் ஸ்பின்னைக்கொண்டே முடிக்கும் கம்பீருக்கு இவரது ஆஃப் ஸ்பின்னும் உதவியாக இருக்கும். மனீஷ் பாண்டேவை சேர்க்கலாமா என்ற கேள்வி எழலாம். சில போட்டிகளில் மேட்ச் வின்னராக இருந்திருக்கிறார். ஆனால், டி.கே, யுசுப் பதான் இருவரையும் ஒப்பிடும்போது, அவரது நம்பர்கள் மூன்றாவதாகவே இருக்கின்றன. சராசரியில் கார்த்திக்கைவிட குறைவாகவும், ஸ்டிரைக் ரேட்டில் பதானைவிட குறைவாக இருப்பதாலும், லோயர் மிடில் ஆர்டரில் அவரது தாக்கம் பெரிதாக இல்லையென்பதாலும், அவர் தன் இடத்தை இழக்கிறார்.
அப்படியே சுனில் நரீன், பியூஷ் சாவ்லா இருவருக்கும் +1 கொடுத்துவிடலாம். மீதமிருக்கும் இரண்டு ஸ்பாட்டுகள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு. நைட்ரைடர்ஸுக்கும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். எப்படித்தான் அவர்களுக்கு காயம் வந்துசேரும் என்று தெரியாது. ஷோயப் அக்தர், பிரெட் லீ, மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் என உலகத் தர வேகப்பந்துவீச்சாளர்கள் பலர் அந்த அணிக்காக ஆடியிருந்தாலும், யாராலும் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடிந்ததில்லை. அவர்களால் முழு சீசன் விளையாடவும் முடிந்ததே இல்லை!

அவர்களுக்கு மத்தியில் ஓரளவாவது தாக்கம் ஏற்படுத்திய மோர்னே மோர்கல் & உமேஷ் யாதவ் இருவரையும் ஆல்டைம் லெவனில் சேர்ப்போம். மோர்கல் 32, உமேஷ் யாதவ் 48 விக்கெட்டுகளை நைட்ரைடர்ஸுக்காக. அதனால் நிச்சயம் அவர்களை சேர்ப்பதற்கு மாற்றுக்கருத்து இருக்கவேண்டியதில்லை.