கொரோனா வேகமாகப் பரவிவரும் காரணத்தால் அரசு 21 நாள்களுக்கு ஊரடங்கு விதித்துள்ளது. மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பலசரக்குக் கடைகள், காய்கறிக் கடைகள், மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்குகள் மற்றும் வங்கிச் சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் ஒருசில கட்டுப்பாடுகளை விதித்து இயங்கலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், கார், பைக் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளதால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் – டீசல் விற்பனை குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் பெட்ரோல் விற்பனை கிட்டத்தட்ட 17.6 சதவிகிதமும், டீசல் விற்பனை 26 சதவிகிதமும் குறைந்துள்ளன. மேலும், விமான டர்பைன் எரிபொருள் (ATF) விற்பனை 31.6 சதவிகிதம் சரிந்துள்ளது. ஏனெனில், வாகனப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் மக்கள் வீட்டில் இருப்பில் வைத்துகொள்வதற்காக புக் செய்து எல்பிஜி சிலிண்டர்களை வாங்கி வைத்துக்கொண்டனர். எனவே, அதிகம் விற்பனையான ஒரே எரிபொருள் எல்பிஜி (LPG) மட்டுமே. எல்பிஜி விற்பனை மார்ச் மாதத்தில் 1.9 சதவிகிதம் உயர்ந்து 2.286 மில்லியன் டன்னாக உள்ளது.
Also Read: `பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ.8 வரை உயர்த்த முடியும்!’ -விவாதமின்றித் தாக்கலான மசோதா
ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கிறது. மேலும் ஊரடங்கு நீக்கப்பட்டாலும் சில கட்டுப்பாடுகள் தொடரும் எனத் தெரிகிறது. எனவே எரிபொருள் விற்பனை இப்படியே நீடிக்க வாய்ப்புள்ளது என்று தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எரிபொருள் விற்பனை இப்படிச் சரிவைக் காண்பது கடந்த இரண்டரை ஆண்டுகளில் இதுவே முதன்முறை ஆகும். எரிபொருள் விற்பனை 2019-20 நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் 8.2 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: `கொரோனா பாதித்த நபருக்கு அருகில் செல்ல நேர்ந்தால்..!’ – மத்திய அரசின் `ஆரோக்கிய சேது’ செயலி
பெட்ரோல், டீசல் விற்பனை மட்டுமல்லாது, இந்தியாவில் தங்கம் இறக்குமதி கடந்த மார்ச் மாதத்தில் 73 சதவிகிதத்துக்கும் மேலாக வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இது, கடந்த ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியாகும். மார்ச் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி கிட்டத்தட்ட 73% குறைந்து 1.22 பில்லியன் டாலராக உள்ளது.