கோவை அ.தி.மு.க ஐ.டி விங்கைச் சேர்ந்தவர் ரியாஸ்கான். இவர், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகாரளித்தார். அதில், `நான் அ.தி.மு.க தொழில்நுட்பப் பிரிவில் சமூக வலைதளங்களில் வரும் தகவல்களைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருப்பேன். அப்போது, ஹலோ ஆப்பில் கறுப்புக் குதிரை என்ற பெயரில் இயங்கும் கணக்கில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்து கொச்சைப்படுத்தும் வகையில் அவதூறு பதிவு போடப்பட்டிருந்தது.

அதேபோல, உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், அமைச்சர் தங்கமணி சாயலில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி என்று பதிவு போடப்பட்டிருந்தது. மேலும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்தும் அவதூறாக பதிவு போட்டிருந்தனர்.
அ.தி.மு.க-வைச் சார்ந்தவர்களை மிரட்டும் வகையில் அந்தப் பதிவுகள் இருப்பதால், பொது மக்களின் அமைதிக்கு பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. கொரோனா பீதியில் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது, ‘நாம் எந்தப் பிரச்னையும் செய்ய வேண்டாம்’ என்று கட்சியினருடன் ஆலோசித்து முடிவெடுத்தோம்.

அதேநேரத்தில், தமிழக ஆட்சியாளர்களின் பொறுமையை ஆத்திரமூட்டும் வகையிலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பதிவுகள் போட்டுவரும் நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
ரியாஸ்கானின் புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த சுதர்சன் (22) என்ற வெப்டிசைனர்தான் இந்தப் பதிவுகளைப் போட்டது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை விரைந்த சரவணம்பட்டி போலீஸார், அங்கு சுதர்சனை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், “என்னுடைய நண்பர் தி.மு.க-வில் இருக்கிறார். அவர்தான் முதல்வர், அமைச்சர்கள் குறித்து இப்படி பதிவு போடச் சொன்னார்” என்று கூறியுள்ளார். சுதர்சன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நண்பரான தி.மு.க பிரமுகரை போலீஸார் தேடி வருகின்றனர்.