சர்வதேச அளவில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்து வரும் காலத்திலும், விடுமுறை இன்றி மக்களுக்கான சேவையாற்றி வருகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். அப்படிப்பட்டவர்களைச் சமூகம் மதிக்கிறதா, அரசாங்கம் இவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளதா உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ள தூய்மைப் பணியாளர்கள் சிலரிடம் பேசினோம்.

தூய்மைப் பணியாளர்

எண்ணூர் அருகே தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் பெண் ஒருவர் பேசுகையில், “நாங்கதான் இந்த ஊரையே சுத்தம் செய்யறோம். ஆனால் எங்களுக்கு, எந்தச் சலுகையும் அரசாங்கம் அறிவிக்கல. இந்த நேரத்துலேயே கொடுக்கலன்னா, மத்த நாள்ல மட்டும் எப்படி தருவாங்க?

ஒப்பந்த அடிப்படையிலதான் வேலை செய்யறேன். இந்தக் கொரோனா நேரத்துலேயும், குப்பை வகை பிரிச்சி போடலனு சத்தம் போடுறாங்க. நாங்களும் மனுசங்க தானேம்மா! எங்களுக்கு அந்த நோய் வாராதா? அப்படி வந்துட்டா, எங்க குடும்பத்தை யார் பார்ப்பா? இது நோய் இருக்கிற காலம். எதுக்கு இப்ப போய் குப்பைய பிரிச்சிப் போடச் சொல்லணும். குப்பைப் பிரிச்சி போடலனு போட்டோ வேற எடுத்துக்கிட்டுருக்காங்க. சுத்தம் பண்றதே பயமா இருக்கு. அதையும் மீறி, வேற வழியில்லாமத்தான் வவுத்துப் பாட்டுக்காக வரோம். இந்த நேரத்துலேயும் குறை சொல்லி, வேலை அதிகமா கொடுத்தா, நாங்க என்ன செய்யறது… நீயே சொல்லும்மா? சம்பளமும் 360 ரூபாய்தான் தராங்கோ. அதைக் கொஞ்சம் அதிகப்படுத்திக் கொடுத்தாக்கூட நல்லா இருக்கும். அதுக்கும் வழிய காணோம். இப்படி எதுவுமே செய்யாம, வேலை மட்டும் அதிகமா வாங்கனா, நாங்க என்ன செய்யறதும்மா” என்றார் கவலையுடன்.

Also Read: கொரோனா எதிர்ப்பில் கேரளா செய்ததும், தமிழகம் செய்ய வேண்டியதும்… விரிவான அலசல்!

தூய்மைப் பணியாளர் ஒருவர் பேசும்போது, “ `என்ன வேலை செய்றீங்க’னு கேக்கறவங்ககிட்ட `துப்புரவு வேலை செய்யறோம்’னு சொன்னாவே முகம் சுழிக்கிறாங்க. எல்லார் வீட்டு குப்பையையும் நாங்க சுத்தம் பண்றோம். அதை அவங்களால செய்யவே முடியாதுனு தெரியும். அப்படியிருந்தும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க. இந்த நேரத்துல சாப்பாட்டை, அரசாங்கம்கூட கொடுக்கறது இல்ல. எங்க மீது இரக்கப்பட்டு சில தனியார் நிறுவனங்கள் சாப்பாடு தாராங்க. அதைக்கூட எங்க அதிகாரிங்க கொடுக்க மாட்டேங்குறாங்க. என்னத்த சொல்றது போங்க!

தூய்மைப் பணியாளர்

இந்த நோய்க்காலத்துலயாவது, அரசாங்கம் எங்களைக் கவனிச்சா நல்லா இருக்கும். எனக்கு ஒரு செட் துணி, கையுறை, மாஸ்க், கொடுத்திருக்காங்க. அதை இரண்டு செட்டா கொடுத்தா நல்லா இருக்கும். ஒரு சில ஏரியாவுல, அந்த ஒரு செட் துணிகூட கொடுக்கலனு சொல்றாங்க. அவங்களுக்கும் அரசாங்கம் தரணும்” என்றார்.

மற்றொரு தூய்மைப் பணியாளர் பேசுகையில், “எங்களை யாருமே மதிக்கறது இல்லம்மா! இப்படி, கொடுமையான நோய் வந்திருக்கு. சானிடைஸர் கொடுக்கல; மாஸ்க் ஒண்ணுதான் கொடுத்திருங்க. பாதுகாப்பான துணியும் கொடுக்கல. ரொம்ப பயமாத்தான் இருக்கு. எங்களுக்குத்தான் சீக்கிரம் நோய் பரவும். அதனால், எங்களுக்குத் தேவையானதைக் கொடுத்தாதான் எங்களால பயமில்லாம வேலை செய்ய முடியும்” என்றார் .

சாமுவேல்

தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக இயங்கும் செயற்பாட்டாளர் சாமுவேல், “கொரோனா தொற்றுப் பணியில் மருத்துவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர் ஆகிய இரண்டு தரப்புப் பிரிவினரை நாம் பாராட்ட வேண்டும். இந்த இரண்டு தரப்புப் பிரிவினரும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.

இந்தக் கொரோனா மட்டும் அல்ல… பல்வேறு வகையான வைரஸ் தொற்றிலிருந்தும், இவர்கள்தாம் நம்மைப் பாதுகாத்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை நாம் மதிக்கிறோமா… என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்வது சரியானதாக இருக்கும். இதில் மருத்துவர்களைத் தெய்வமாக போற்றுகிறோம். ஆனால், தூய்மைப் பணியாளர்களை மதிப்பதே இல்லை. காரணம் அவர்களுடைய அழுக்கு படிந்த துணி. இங்கு, மதிப்பு, மரியாதை என்பது, ஆடை அலங்காரத்தில்தான் நிரப்பி வைத்திருக்கிறோம். ஏன், நம் வாழ்விடங்களைத் தூய்மையாக வைக்க வேலைசெய்யும், தூய்மைப் பணியாளர்களை மதிப்பதில்லை என்ற மிகப் பெரிய மன வருத்தம் எனக்கு உண்டு. அவர்களுக்கு மரியாதை கொடுப்பதை விடவும் முக்கியமானது அவர்களுக்கான பாதுகாப்பு.

இப்படி, கொடிய வைரஸ் தொற்று, மாநிலம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், களத்தில் இறங்கி பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகளை தமிழக அரசு செய்து கொடுத்துள்ளதா?

நானே நேரடியாகக் களத்தில் சென்று அந்த மக்களிடம் பேசினேன். பெரும்பாலான தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உறைகள்கூட வழங்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். குறிப்பாக, பெரிய அதிகாரிகள் பார்வையிட வரும்போது பாதுகாப்பு உறைகள் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு, வேறு எந்த வசதியும் செய்து தரவில்லை என்கிறார்கள்.

தூய்மைப் பணியாளர்

இந்த வைரஸ் தொற்றில் அனைவரையுமே பாதுகாக்க வேண்டும் என்று இந்த அரசாங்கம் நினைத்தால், அவர்களைத்தான் முதலில் பாதுகாக்க வேண்டும். இந்த மக்கள் பெரும்பாலும், கழிவுநீர் கால்வாய்கள் ஒட்டிய பகுதிகளில் வசிக்கின்ற மக்கள். அவர்களுடைய அன்றாட உணவு, உடை உறைவிடமே சவாலாக இருக்கும்போது, இதில் தூய்மைப் பணி என்பதும் அவர்களுக்கு மேலும் கூடுதல் சவாலானது. அதனால், எளிதில் அவர்களை இந்த வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது. அந்த மக்களுக்கு உள்ள பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு அரசாங்கம் உடனடியாக அவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

Also Read: கொரோனா: உலகை அழிக்கும் உயிரியல் ஆயுதமா?

இதுகுறித்து கக்கூஸ் ஆவணப் பட இயக்குநர் திவ்யபாரதியிடம் பேசியபோது, “இந்தக் கொரோனா காலம் என்பது தூய்மைப் பணியாளர்களுக்கு மிகவும் கடினமான காலம்.

எந்தப் பேரிடர் காலத்திலும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்வதில்லை. குறிப்பாக, சென்னை வெள்ளத்தின்போது, நாயை அடைத்துச்செல்லும் வண்டியில்தான் அந்த மக்களையும் ஏற்றிச் சென்றார்கள். அதேபோன்று அடிப்படை வாழ்வுக்கான எந்த உதவியும் அரசாங்கம் வழங்குவது கிடையாது. மருத்துவர்களுக்கே மாஸ்க் தராத அரசு, தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுத்துவிடுமா என்ன?

திவ்யா பாரதி

சில நாள்களுக்கு முன், 20-க்கும் மேற்பட்ட பெண்களை குப்பை வண்டியில் மாஸ்க் கூட இல்லாமல் துப்புரவுப் பணிக்கு அழைத்துச் செல்வதை நேரிலேயே நான் பார்த்தேன். இப்படிப் பாதுகாப்பு இல்லாமல், அவர்களை அழைத்துச் செல்வதால், அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாதா?

மருத்துவர்களும் தூய்மைப் பணியாளர்களும்தான் தற்போது களத்தில் நின்று வேலைசெய்கிறார்கள். மருத்துவர்களுக்குக் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்தும்போது, ஏன் தூய்மைப் பணியாளர்களுக்கு மட்டும் செயல்படுத்தவில்லை. இப்படி அவர்களைப் புறக்கணிப்பதால், தூய்மைப் பணியாளர்களும் அவர்களுடைய குடும்பம் மட்டும் பாதிக்காது. அவர்களைப் பாதுகாக்க தவறிய நாம்தான் நாற்றத்தில் மூழ்குவோம்” என்றார் கோபமாக.

இது தொடர்பாகக் கருத்துகளை அறிந்துகொள்ள சென்னை மாநகராட்சி ஆணையரைப் பலமுறை தொடர்புகொண்டும், நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.