கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக மது கிடைக்காமல் குடிமகன்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த வீரபத்திரன் என்பவர், கழுத்தை அறுத்துக்கொண்டு மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தமிழகத்தைவிட கேராளாவில் மது கிடைக்காத விரக்தியில் அதிகளவில் தற்கொலை செய்துள்ளனர். அதனால் அம்மாநில அரசு, டாக்டர்கள் பரிந்துரைத்தால் மது வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
Also Read: மது கிடைக்காததால் மாற்றுப்போதை! -போதைக்காகச் சீரழிந்த 3 இளைஞர்களின் வாழ்க்கை
தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் திருட்டுச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. அதனால், டாஸ்மாக் நிர்வாகம், கடைகளில் உள்ள மதுபானங்களை மாவட்டத்தில் ஏதாவது ஓர் இடத்தில் வைத்து பாதுகாத்து வருகிறது. கள்ளச்சந்தையிலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. மதுபோதைக்கு அடிமையான சிலர் சேவிங் லோஷன், மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து குடித்து உயிரிழந்த சம்பவங்களும் தமிழகத்தில் நடந்துள்ளன.
சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள பட்டாபிராம், காந்தி நகர் பகுதியில் மது கேட்டு அடம்பிடித்த தொழிலாளி ஒருவர் கிணற்றுக்குள் குதித்துள்ளார். விடிய விடிய போராடி அவரை உயிருடன் தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர்.
பட்டாபிராம், காந்தி நகரைச் சேர்ந்தவர் மணவாளன் (46). கூலித் தொழிலாளி. இவருக்கு லிதியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மணவாளன் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர். ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது கிடைக்காமல் மனவேதனையடைந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்றிரவு வீட்டின் அருகில் உள்ள கிணற்றுக்குள் மணவாளன் குதித்தார். 70 அடி ஆழ கிணற்றுக்குள் தண்ணீர் இருந்ததால் மணவாளனுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அவர் கிணற்றுக்குள் குதித்ததைப் பார்த்த குடும்பத்தினர் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டனர். இரவு நேரம் என்பதால் போதிய வெளிச்சம் அங்கு இல்லை. இதையடுத்து, டார்ச் லைட் மற்றும் செல்போன் லைட் உதவியுடன் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கிணற்றுக்குள் கயிறு மூலம் இறங்கி மணவாளனை மீட்க முயன்றனர்.
கிணற்றில் குறைந்தளவே தண்ணீர் இருந்ததால் மணவாளன், மூழ்கவில்லை. அதனால், யாராவது என்னைக் காப்பாற்ற கிணற்றுக்குள் இறங்கினால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினார். இதையடுத்து, மணவாளனிடம் அவரின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுபானம் கொடுத்தால் மேலே வருவேன் என்று கூறினார். இதையடுத்து, மதுபானம் வாங்கித் தருவதாகக் குடும்பத்தினர் உறுதியளித்தனர்.
Also Read: கிணற்றுக்குள் விழுந்த சென்னைப் பட்டதாரி பெண்!- காப்பாற்றப்பட்ட புதுமாப்பிள்ளை
அதை நம்பிய மணவாளன், கிணற்றுக்குள் இருந்து மேலே வர சம்மதித்தார். அதனால் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வெளியில் கொண்டுவந்தனர். வெளியில் வந்த மணவாளன், எங்கே மதுபானம் என்று கேட்டார். அப்போது அவரை குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் சமாதானப்படுத்தினர். இதனால் ஆவேசமடைந்த மணவாளன், மீண்டும் கிணற்றுக்குள் குதித்தார். அதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்களில் சிலர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். ஆனால், மணவாளனின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்ததோடு தீயணைப்பு நிலையத்துக்கும் காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி தீயணைப்பு வீரர்கள், கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கினர். அப்போது கிணற்றுக்குள் மணவாளனிடம் தீயணைப்பு வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணவாளன், அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான், கிணற்றுக்குள்ளேயே செத்துவிடுகிறேன், மேலே வர மாட்டேன் என்று மணவாளன் கூறினார். அவரை தீயணைப்பு வீரர்கள் சமாதானப்படுத்தினர்.
அப்போது மணவாளன், `நான் செத்துவிடவா, தேவையில்லாத பேச்சு வேண்டாம், நீங்கள் மேலே ஏறினால் நானும் மேலே வருவேன்’ என்று கூறினார். அதற்கு தீயணைப்பு வீரர்கள் மணவாளனிடம், `நீங்கள் சந்தோஷமாக இருங்கள்’ என்று கூறினர். அதற்கு மணவாளன், `நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் மேலே ஏறுங்கள்’ என்று கூறினார். இதையடுத்து, மணிக்கணக்கில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் மணவாளனை கயிறு மூலம் தீயணைப்பு வீரர்கள் மேலே தூக்கினர். பின்னர் அவருக்கு குடும்பத்தினர், தீயணைப்பு வீரர்கள், பட்டாபிராம் போலீஸார் அறிவுரைக் கூறிவிட்டுச் சென்றனர். மணவாளன் மீது போலீஸார் வழக்குபதிவு செய்யவில்லை.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினர் கூறுகையில், “நேற்றிரவு 9 மணியளவில் கிணற்றுக்குள் ஒருவர் குதித்துவிட்டதாக எங்களுக்குத் தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் சென்றனர். செல்லும் வழியில், கிணற்றில் விழுந்தவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டுவிட்டனர் என்ற தகவல் கிடைத்தது. உடனே எங்களின் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட தயாரானோம். அப்போது மேலே வந்த நபர் மீண்டும் கிணற்றுக்குள் குதித்துவிட்டார் என்று எங்களுக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு இரவு 9.15 மணியளவில் சென்றோம். கிணற்றுக்குள் குதித்த நபர், அங்கிருந்தவர்களை மிரட்டிக்கொண்டிருந்தார். அதனால் அவரிடம் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி வெளியில் மீட்டோம்” என்றனர்.
காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “நேற்றிரவு 7 மணியளவில் மது கேட்டு அடம் பிடித்த மணவாளன் கிணற்றுக்குள் குதித்தார். அவருக்கு வாளியில் மதுவை வைத்து கிணற்றுக்குள் இறக்கினோம். உள்ளேயே மதுவைக் குடித்துவிட்டு வெளியில் வந்த மணவாளன் மீண்டும் மது கேட்டு தகராறு செய்தார். மது கிடைக்காததால் அவர் கிணற்றுக்குள் குதித்துவிட்டார்” என்றனர்.