டெல்லியில் தப்லீக் ஜமாத் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் மலேசியாவைச் சேர்ந்த 10 பேர் பங்கேற்றுள்ளனர். சுற்றுலா விசாவில், இந்தியாவுக்குள் நுழைந்த இவர்கள், மதக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மார்ச் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற இவர்கள், 11-ம் தேதி டெல்லியில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டனர்.

தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகத் தகவல் பரவியது. இதற்கிடையே, மதுரை வந்திறங்கிய 10 மலேசியக்காரர்களும் தங்கள் சுற்றுப் பயணத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. தென்காசி, வல்லம், குற்றாலம் சென்று சுற்றிப் பார்த்தாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசிய அரசு ‘பதிக் ஏர்’ விமானம் வழியாகத் தங்கள் நாட்டு மக்களை மீட்பது அவர்களுக்குத் தெரிந்தது. பிரதமர் மோடி லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்னரே அவர்கள் சென்னை வந்து தங்கியுள்ளனர். நேற்று சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவர்கள் விமானம் ஏற முயன்றனர் விசா நடைமுறையின்போது, அதிகாரிகளிடத்தில் சிக்கிக்கொண்டனர்.

சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு நுழைந்து மதப் பிரசாரத்தில் ஈடுபட்டது குற்றம் என்பதால், இந்த 10 பேரையும் விமானத்தில் ஏற அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, பதிக் ஏர் விமானம் நேற்று காலை 10.40 மணிக்கு 127 மலேசியர்களுடன் கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றது. பிடிபட்ட மலேசியர்கள் மீது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்று நோய்த் தடுப்புச் சட்டம், வெளிநாட்டவர் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read: `தீபாவளி என நினைத்து சுட்டுவிட்டேன்!’- உ.பி போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த பா.ஜ.க மகளிரணித் தலைவி
அதோடு, இவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்படவுள்ளது. கொரோனா தாக்கியிருந்தால் தகுந்த சிகிச்சையளிக்கப்படும் என்று தெரிகிறது.