கொரோனாவில் மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் சிக்கிக்கொள்ளும் கொடுமை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் (மார்ச்) பெல்ஜியம் நாட்டில், ஒரு பூனைக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியிருந்த நிலையில், தற்போது நியூயர்க்கில் ஒரு புலிக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தொற்று மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்குப் பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவில் 3,00,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, நியூயார்க்கில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துவிட்டது. இந்த நிலையில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் நியூயார்க்கில் உள்ள ப்ரோனக்ஸ் (bronx) என்ற உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு புலிக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தப் பூங்காவில் உள்ள 4 வயதான மலாயன் நடியா என்ற புலிக்கு நோய்த் தொற்று இருப்பதாகக் கண்டறிந்துள்ளார்கள். மேலும், இதன் சகோதரியான அசூல் மற்றும் அங்குள்ள இன்னும் இரண்டு புலிகள், சிங்கங்களுக்கும் வறட்டு இருமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து உயிரியல் பூங்கா நிர்வாகம் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக பூங்கா நிர்வாகம் சார்பில், “கொரோனா தொற்று அறிகுறிகளைத் தொடர்ந்து, இந்தப் பரிசோதனையை அனைத்து விலங்குகளுக்கும் நடத்தினோம். அதில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தத் தொற்று உள்ள விலங்குகள் உணவு எடுத்துக்கொள்ளத் தவறவில்லை. அதேநேரத்தில் இந்தத் தொற்றின் எதிரொலியாக எப்படியான எதிர்வினைகளை இந்த விலங்குகள் வெளிப்படுத்தும் என்பதும் தெரியவில்லை. அதை எதிர்கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.