உலக அளவில் பல உயிர்களைப் பறித்துவரும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாதா என்று அனைவரும் எதிர்ப்பார்த்து இருக்கும் நிலையில், நற்செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது `ஆன்டிவைரல் ரிசர்ச்’ என்ற பத்திரிகை.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஏற்கெனவே பல நாடுகளில் கிடைக்கும் ஒரு மாத்திரை கொரோனாவை 48 மணி நேரத்தில் உடலிலிருந்து அழிக்கிறது என்கிறார்கள். `இவர்மெக்டின் (Ivermectin)’ என்ற அந்த மருந்து 48 மணி நேரத்துக்குள் கொரோனா வைரஸ் உடலில் பரவுவதைத் தடுத்து வைரஸைக் கொல்லவும் செய்கிறது என்றும் ஆய்வாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும், 24 மணி நேரத்திலும்கூட சிறப்பான பலனை அளிப்பதாகத் தங்கள் ஆய்வு முடிவில் தெரிவித்திருக்கிறார்கள்.
Also Read: இம்போர்ட்டட், லோக்கல், கம்யூனிட்டி, எபிடெமிக்… நான்கு வகை கொரோனா கடத்திகள்… மருத்துவர் விளக்கம்!
இதே மருந்து டெங்கு, ஜிகா வைரஸ், இன்ஃபுளூயன்ஸா, HIV தொற்று உள்ளிட்ட பல நோய்களுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆய்வுக்கூடச் சோதனை முறையில், கொரோனா நோய்த் தொற்றையும் இது குணப்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்றாலும், மனித உடலில் செலுத்தப்படும்போது எவ்வாறு செயல்படும் என்பதை இன்னும் சோதிக்கவில்லை.

ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்யும்போது, ஒரு முறை மருந்தை செலுத்திய உடனேயே சிறப்பான பலனைக் கொடுத்த ‘இவர்மெக்டின்’, மனித உடலில் எத்தனை முறை செலுத்தப்பட வேண்டும், எவ்வளவு செலுத்த வேண்டும் போன்றவை கவனத்துடன் கண்டறியப்பட வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
‘உலகளவில் இந்தத் தொற்றுநோய் பரவிக் கொண்டிருப்பதாலும், இதற்கு சரியான அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை இல்லை என்பதாலும், ஏற்கெனவே நம்மிடம் இருக்கும் ஒரு மருந்து வைரஸை எதிர்த்துச் செயல்படும் என்றால் இது பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடையும் வாய்ப்பை அதிகப்படுத்தும்’ என்று இதை வரவேற்கிறார், ‘ஆன்டிவைரல் ரிசர்ச்’ பத்திரிகையின் இணை ஆசிரியர் கைலி வேக்ஸ்டாப்.

‘கொரோனா வைரஸை எதிர்த்து ‘இவர்மெக்டின்’ எவ்வாறு செயல்படும் என்று உறுதியாகக் கூறமுடியாது. மேலும் சில மருத்துவ சோதனைகளுக்குப் பின்னரே இதைக் கொரோனா சிகிச்சையில் பரிந்துரைக்க முடியுமா என்பது பற்றித் தெரியவரும்’ என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பயோமெடிசின் டிஸ்கவரி இன்ஸ்டிட்யூட் (BDI), டோஹெர்டி இன்ஸ்டிட்யூட் (Doherty Institute) மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகம், மெல்போர்ன் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.