எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் 19 நாட்களுக்குப்பின்னர் மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்கள் சென்று திரும்பியவர்களை அரசுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. குறிப்பாக டெல்லி சென்று திரும்பியவர்கள் தொடர் தனிமையில் வைத்து பரிசோதிக்கப்படுகின்றனர். அவ்வாறு டெல்லி சென்று கேரளா திரும்பிய 19 வயது மாணவிக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் என்ன அதிர்ச்சி என்றால் அந்த மாணவி 19 நாட்கள் தனிமை கண்காணிப்பில் இருந்துள்ளார். அவருக்கு இதுவரை கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், தற்போது சோதனை முடிவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொரோனா அறிகுறி 14 நாட்கள் இல்லாமல் ஒரு நபர் தனிமையில் இருந்தால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனக் கூறப்பட்டு வரும் நிலையில், 19 நாட்கள் அறிகுறி இல்லமால் கொரோனா உறுதியானது வியப்பாக இருக்கிறது எனவும், அத்துடன் கொரோனாவின் கொடூரத்தையும் உணர்த்துவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அந்த மாணவி மார்ச் 15ஆம் தேதி கேரளாவின் பதனம்திட்டா மாவட்டத்தில் இருந்து எர்ணாகுளம் சென்று அங்கிருந்து ரயில் மூலம் டெல்லி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மார்ச் 17ஆம் தேதி எர்ணாகுளம் திரும்பியிருக்கிறார். தற்போது வந்த ரயில் மற்றும் பயணித்த பேருந்து தொடர்பான தகவல்கள் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
‘கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்தனர்’
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM