இந்தியாவின் ஆளும்கட்சியாகவும் பெரும் தேசியக் கட்சியாகவும் உள்ள பா.ஜ.க, 1980-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் 40-வது ஆண்டு தொடக்கவிழா இன்று நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீடியோ மூலம் தொண்டர்களிடம் பேசினார் பிரதமர் மோடி.

அப்போது, “இந்தியா உட்பட மொத்த உலகமும் ஒரு கடினமான சூழலைச் சந்தித்துவரும் இந்த நேரத்தில், பா.ஜ.க-வின் தொடக்கநாள் வந்துள்ளது. மனிதம் ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்தச் சவாலான நேரத்தில், நாட்டின் மீதான நம் பக்தியைக் காட்ட வேண்டும். கொரோனா வைரஸை எதிர்க்கும் போரில் ஒரு முழுமையான அணுகுமுறையுடன் இந்தியா வேகமாகச் செயல்பட்டுள்ளது. இதை இந்தியர்கள் மட்டுமில்லாது உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகளும் பாராட்டியுள்ளனர்.
Also Read: `விளக்கேற்றிய மோடி; மெழுகுவத்தி ரஜினி!’ – விளக்கொளியில் மிளிர்ந்த இந்தியா #NowAtVikatan
அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து வைரஸுக்கு எதிராகப் போராட வேண்டும். சார்க் நாடுகளின் மாநாடு, ஜி 20 கூட்டத்திலும் இந்தப் பிரச்னை பற்றிதான் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. கொரோனாவை எதிர்கொள்வதில் இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. இந்த நோயின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த விஷயத்தில் இந்தியா பல முடிவுகளை எடுத்து அதைச் செயல்படுத்தியும் காட்டியுள்ளது.

இந்தியா போன்ற பெரிய நாட்டில், ஊரடங்கின்போது மக்கள் மிகவும் முதிர்ச்சியுடன் நடந்துகொண்டனர். இத்தகைய கீழ்படிதலுடன்கூடிய சேவை உணர்வை மக்கள் கடைப்பிடிப்பார்கள் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இந்தப் போரில் நாம் சோர்வடையாமல், ஓய்வெடுக்காமல் உழைக்க வேண்டும். நிச்சயம் இதில் வெற்றிபெற வேண்டும். இதுதான் நாட்டின் ஒரே குறிக்கோள் மற்றும் ஒரே லட்சியம்.
நம் நாட்டின் 130 கோடி மக்களின் ஒன்றிணைந்த பலத்தை நேற்று இரவு 9 மணிக்குப் பார்த்தேன். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வயதினரும் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தி, கோவிட் 19-க்கு எதிரான தீர்மானத்தை வலுப்படுத்தினர். தற்போது நாம் சந்தித்து வரும் நிலைமை எந்த வகையிலும் போருக்குக் குறைவானது இல்லை. மொத்த மனிதகுலத்தையும் காப்பாற்றுவதற்கான போர் இது. ஒவ்வொரு பா.ஜ.க தொண்டரும் இதற்கு தங்களின் பங்களிப்பைத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.