பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் பேரில், மக்கள் தங்கள் வீடுகளின் விளக்குகள், மெழுகுவத்திகள், டார்ச்கள், மொபைல் போன்கள் ஆகியவற்றை நேற்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் ஒளிரச் செய்து கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஒற்றுமையைக் காட்டத் தயாராகி வருகின்றனர். இதற்கிடையில், கொரோனா வைரஸுக்கு எதிரான போர் இன்னும் நீண்டது என்று மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா பேசியுள்ளார்.

தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் நிலையிலேயே உள்ளது. வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து வந்த நபர்களுக்குத்தான் பெரும்பாலும்கொரோனா தொற்று பாஸிட்டிவ் என வந்துள்ளது. அவர்களின் மூலமாக ஒரு சில உள்ளூர் மக்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இது மேலும் பரவி சமூகப் பரவலாக அதிகரித்தால், நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகலாம் என்பதால், அதைத் தடுப்பதற்காக மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்குறித்து தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் உடன் கேபினெட் செயலாளர் ராஜீவ் கவுபா வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அவர்களுடன் ஆலோசித்த கவுபா, சில எச்சரிக்கைகளும் விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பில் ஸ்டேஜ் 2-ல் இருக்கும் இந்தியா ஸ்டேஜ் 3-க்கு செல்லும்முன் அதற்குத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதில், “வைரஸ் பரவலைத் தடுக்க உடனடியாக திட்டங்களை வகுக்க வேண்டும். அடுத்த சில நாள்கள் அனைவருக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். நமது கட்டுப்பாட்டு முயற்சிகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். தேவைக்கேற்ப கிடைக்கக்கூடிய வளங்களை வைத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். நோய் அறிகுறிகள் உள்ள எந்த ஒரு சந்தேக நபரையும் விட்டுவைக்கக் கூடாது. அவர்கள் அனைவரையும் சோதனை செய்வதை மாவட்ட கலெக்டர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

சமூகங்களில் வைரஸ் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த மக்களை தனிமைப்படுத்தும் விஷயத்தில் மாவட்ட கலெக்டர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நமது முன்னுரிமை மக்களின் உயிரைக் காப்பாற்றுவதாக இருக்க வேண்டும், நாங்கள் செயல் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தினால் மட்டுமே அதைச் செய்ய முடியும். ஊரடங்கு நமக்கு சாதகமாக இருக்கிறது. ஸ்டேஜ் 3-க்கு செல்லும்முன் இந்தத் தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்கு நமக்குப் போதுமான காலம் உள்ளது. எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொள்ள நம்மை தயார்படுத்தும். அந்தந்த மாநிலங்கள் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒரு கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் வெகு விரைவாக எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.