உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது கொரோனா வைரஸ். இந்த தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் தொடர்ந்து போராடிவரும் நிலையில் நாளுக்குநாள் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணமே உள்ளது.

சுற்றுலா நகராக அறியப்படும் கோடை வாசஸ்தலமான நீலகிரியில் இரண்டு மாதங்களுக்கு முன்பே கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன.
இங்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர். மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கேரளா மற்றும் கர்நாடகாவை எல்லையாகக் கொண்டுள்ளது நீலகிரி. இதனால் பல அதிரடி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில், டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் மீது கவனம் திரும்பியது. நீலகிரியிலிருந்து டெல்லி மாநாட்டுக்கு மொத்தம் 11 பேர் சென்றுள்ளனர். இதில் இரண்டு பேர் டெல்லியில் உள்ளனர், ஒருவர் பெங்களூருவில் உள்ளார். 8 பேர் நீலகிரிக்குத் திரும்பினர். இந்த 8 நபர்களையும் கண்டறிந்த மாவட்ட நிர்வாகம் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தது.
Also Read: ` சீனாவிலிருந்து ஊட்டிக்கு வந்த 7 பேர்!’ -கொரோனா தடுப்பில் தீவிரம் காட்டும் நீலகிரி மருத்துவக்குழு
இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி சென்று வந்தவர்களில் நான்கு பேர் வசித்துவந்த ஊட்டியில் காந்தள் மற்றும் பிங்கர்போஸ்ட், குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் உள்ள அவர்களது வீடுகள், அவர்கள் வீடு உள்ள பகுதிகளை மாவட்ட நிர்வாகம் முழு அடைப்பை அறிவித்து, யாரும் வெளியில் வராமலும், வெளியாட்கள் உள்ளே செல்ல தடைவிதித்தும் கடந்த 1-ம் தேதி முதல் கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கடந்த 4 நாள்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் நீலகிரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் மாவட்ட நிர்வாகமோ, தமிழக சுகாதாரத்துறையோ உறுதிப்படுத்தவில்லை. 5 நாள்களுக்குப் பிறகு நீலகிரியில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Also Read: ஊட்டிக்கு வராதீங்க மக்களே… நீலகிரி கலெக்டரின் `கொரோனா’ ரெக்வெஸ்ட்
இவர்கள் நேற்று முன்தினம் இரவே கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நான்குபேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பதால் இவர்கள் அருகில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.