நெல்லையில் கொரோனா பாதிப்பு காரணமாக 38 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நோய்த் தொற்று பரவாமல் பாதுகாக்கும் வகையில் நெல்லை மாநகரில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் இது குறித்துப் பேசுகையில், “நெல்லை மாநகரில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
Also Read: `அப்பாகூட உட்கார்ந்து சாப்பிடக்கூட முடியலை’ -நெல்லை காவல்துறை அதிகாரியின் மகள் உருக்கம்
ஆட்சியரின் உத்தரவுப்படி நெல்லை மாநகரில் இன்று முதல் மூன்று முக்கியமான விதிமுறைகளை அமலுக்குக் கொண்டுவந்திருக்கிறோம். முதலாவதாக, நெல்லை மாநகரில் நான்கு சக்கர வாகன இயக்கம் முழுமையாகத் தடை செய்யப்படுகிறது. அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்லும் மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தவிர வேறு யாரும் நான்கு சக்கர வாகனம் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.

இரண்டாவதாக, அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக வீட்டிலிருந்து வெளியே செல்லும் பொதுமக்கள் இரண்டு கிலோ மீட்டருக்கு உள்ளேயே தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ள வேண்டும். 2 கி.மீ தூரத்துக்கு அதிகமான தொலைவுக்குச் சென்றால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்.
மூன்றாவதாக, பால், மருந்து, காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், தமிழக அரசின் உத்தரவுபடி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும். அதற்கு மேலாகக் கடைகள் திறக்கப்பட்டிருக்காது. அதனால் 1 மணிக்குப் பிறகு பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.
இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித் திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அதனால் பொதுமக்கள் விதிமுறைகளை மீறி வெளியே வந்து தங்களுடைய இருசக்கர வாகனங்களைக் காவல்துறையிடம் தானமாகக் கொடுக்க வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
நெல்லை மாநகரில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவரிடம் கேட்டதற்கு, “மாநகரத்தின் எல்லைப் பகுதிகளில் ஏழு சோதனைச் சாவடிகளும் மாநகரத்தின் உட்புறப் பகுதியில் 16 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாநகரத்தில் 48 ரோந்து வாகனங்களும் 1030 காவலர்கள் மற்றும் ஊர்க்காவலர் படையினருடன் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

நெல்லை மாநகரில் இதுவரை 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 130 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் சாலைகளில் போக்குவரத்து குறையவில்லை. பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் சுற்றுகிறார்கள். சமைத்த உணவு மற்றும் குழம்புகளை உறவினர்களிடம் கொடுக்கக் கூட காரில் சுற்றுகிறார்கள். அதனால்தான் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன.
பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவுக்கு முழுமையான ஒத்துழைப்புக் கொடுத்து கொரோனா வைரஸ் நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் எனக் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.