பெரம்பலூர் அருகே தங்கள் ஊரையே தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்களின் செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
ஊருக்குள் வரும் இரண்டு சாலைகளிலும் சோதனைச்சாவடி; வெளிநபரை அனுமதிப்பதும் இல்லை; ஊர்க்காரர்களை அவசியமின்றி வெளியே அனுப்புவதுமில்லை. இது பெரம்பலூர் மாவட்டம் மலையாள பட்டி கிராம மலைவாழ் மக்களின் ஊரடங்கு வாழ்க்கை. வருமுன் காக்கும் விதமாக களத்தில் இறங்கியுள்ளனர் இளைஞர்கள். அவ்வூருக்கு வரும் இரண்டு சாலைகளிலும் சோதனைச்சாவடி அமைத்து வெளியூர் ஆட்கள் உள்ளே நுழையாத படி 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் அந்த ஊர் இளைஞர்கள்.
மருத்துவம் உள்ளிட்ட அவசிய தேவைகளுக்கு மட்டுமே உள்ளூர்க்காரர்களை வெளியே செல்ல அனுமதிக்கின்றனர். வெளியே சென்றவர்கள் திரும்ப வரும் போது எல்லையில் நிறுத்தி கைகளை கிருமி நாசினி கொண்டு நன்றாக கழுவிய பின்னர் தான் ஊருக்குள் அனுமதிக்கின்றனர். மேலும் அவர்கள் சென்றுவந்த வாகனத்திற்கும் கிருமி நாசினி தெளித்து கொரோனா தடுப்பில் ஈடுபடுகின்றனர். இதற்கு முதலில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் இளைஞர்களின் நல்ல முயற்சியை புரிந்து கொண்டு ஆதரவு தெரிவித்து ஒத்துழைத்து வருகின்றனர்.
இதனால் 800 குடும்பங்களை கொண்ட மலையாள பட்டி ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு சானிடைசர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த நீரை கிருமி நாசினியாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க தவறும் நிலையில் மலைவாழ் மக்களின் சுயஊரடங்கு பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM