ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்ற தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் 168 பேரை உடனடியாக பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது, அதில், 50 சதவிகித ஊழியர்களுடன் முக்கியப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மற்றவர்கள் சுழற்சி முறையில் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியைச் சேர்ந்த 168 ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். அவர்களை உடனடியாக பணிக்குத் திரும்பும்படி வங்கியின் பொதுமேலாளர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சேலம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி ரவிச்சந்திரபாபு விசாரித்தார். அப்போது வங்கி ஊழியர்கள் யாரையும் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி வழங்கவில்லை என்றும் வீட்டில் இருந்தபடி பணியாற்ற அறிவுறுத்தப்பட்டதாகவும் வங்கி தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதி, அரசு அறிவித்த நிதியுதவியை பயனாளிகளுக்கு வழங்க வேண்டியுள்ளதால் 168 ஊழியர்களையும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டார்.
கொரோனா சோகம் : 51 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து 6 நிமிட இடைவெளியில் உயிரிழந்த தம்பதி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM