நேற்று விளக்கு ஏற்றுவதற்குப் பதிலாக ஜெய்ப்பூரில் பட்டாசுகளை சிலர் கொளுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதற்கு ஹர்பஜன் சிங் தனது கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரிப்பதைத் தடுக்க, 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 23 ஆம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி , கொரோனாவை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக மீண்டும் 3 ஆம் தேதி காலை 9 மணிக்குக் காணொளி மூலம் மக்களிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் “ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களைக் குறித்துச் சிந்தியுங்கள். செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நேற்று நாடு முழுவதும் உள்ள மக்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு தீபங்களை ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்தக் கருத்தை ஹர்பஜன் சிங்கும் ஆதரித்து அவரது வீட்டில் விளக்கேற்றினார். ‘நாம் அனைவரும் நாளைய சிறந்த இந்தியாவிற்காக தேசியக் கொடியின் கீழ் அணிவகுத்து நிற்போம்’ எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஜெய்ப்பூர் வைசாலி நகர்ப் பகுதியிலுள்ள ஒரு மைதானத்தில் நேற்று இரவு சில அடையாளம் தெரியாதவர்கள் பட்டாசுகளைக் கொளுத்தியுள்ளனர். அது அருகிலிருந்த வீட்டு மாடியில் போய் விழுந்துள்ளது. இதனை ஒரு பத்திரிகையாளர் வீடியோவாக எடுத்துப் பதிவிட்டிருந்தார். அதனை ஹர்பஜன் சிங் ரீ ட்வீட் செய்து தனது மனவேதனையைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து ஹர்பஜன், ‘கொரோனாவுக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கலாம். ஆனால் இந்த முட்டாள்தனத்திற்கு எப்படி ஒரு சிகிச்சையைக் கண்டுபிடிப்பது?’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். தலைமை தீயணைப்பு அதிகாரி ஜகதீஷ் புல்வாரி பி.டி.ஐ-யிடம், ‘இரண்டு தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் இச்சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை’ என்று கூறியுள்ளார்.
We Will find a cure for corona but how r we gonna find a cure for stupidity ?? https://t.co/sZRQC3gY3Z
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 6, 2020
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM