இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்குக் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறினார். இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,067-ஆக அதிகரித்துள்ளது.

லாவ் அகர்வால்

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் சுகாதாரச் செயலர்கள் தங்கள் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளனர். கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலத்தில் புதிதாக 12 பேருக்குக் கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 163-ஆக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அசாம் சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகையில், “அசாமை பொறுத்தவரையில் 26 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 2000 மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்பட்டவில்லை. மத்திய அரசு மற்றும் உள்ளூரில் கிடைக்கப்பெற்ற தகவலின் படி அசாமிலிருந்து 831 பேர் தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 491பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் விடுப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

அசாம் அமைச்சர்

சத்தீஸ்கரைப் பொறுத்தவரையில் தற்போது ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 9 பேர் பூரண குணமடைந்துவிட்டனர். தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட நபரையும் மருத்துவக் குழு தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 22 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 288-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா

ஆந்திர மாநிலத்தில் 303 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 37 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று காலை ஆந்திர அரசு வெளியிட்ட அறிவிப்பில் 243பேர் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 61 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதில் 7 குடும்பத்தைச் சேர்ந்த 55 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் 305 பேருக்குக் கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 159 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று கூறப்படுகிறது. மாநிலத்தில் அதிகபட்சமாக கெளதம புத்தா நகரில் 61 பேருக்குக் கொரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523-ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 20 பேருக்குக் கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் 10 பேர் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் பங்கேற்றவர்கள். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. 7 நோயாளிகள் வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 523 நபர்களில் 330 பேர் தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள். டெல்லியில் நாள் ஒன்றுக்கு 1000 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன’ என அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

கேரளாவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 327-ஆக உயர்ந்துள்ளது. இன்று புதிதாக 13 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பீலா ராஜேஷ்

தமிழகத்தில் மேலும் 50 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 50 பேரில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கொரோனா நோய் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக” பீலா ராஜேஷ் கூறினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.