இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், உள்துறை இணைச் செயலாளர் புனியா சலிலா உள்ளிட்டோர் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்குத் தேவையாக மருத்துவ உபகரணங்களில் தட்டுப்பாடு நிலவுவதாக ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. அதேவேளையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது தொடர்பான முக்கிய பிரச்னைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 693 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,067-ஆக அதிகரித்துள்ளது. தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 1,445 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா காரணமாக இந்தியாவில் இதுவரை 109 பேர் மரணமடைந்துள்ளனர். நேற்று ஒரேநாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் ஏற்பட்ட மரணங்களில் 63 சதவிகித்ததினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 30 சதவிகிதம் பேர் உயிரிழந்துள்ளனர். 40 வயதுக்குட்ட பட்டவர்களில் 7 சதவிகிதம் பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய சுகாதார நிதியில் இருந்து ரூபாய் 1,100 கோடி மாநிலங்களுக்கு ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் 3,000 கோடியை இப்போது விடுவித்துள்ளோம்.
மாநிலங்களில் ஏற்படும் உணவு பற்றாக்குறைய மனதில் கொண்டு 16.94 லட்சம் மெட்ரிக் டன் கொண்ட உணவு தானியங்கள் இந்தியா முழுவதும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 13 மாநிலங்களுக்கு 1.3 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் 8 மாநிலங்களுக்கு 1.32 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 1,340 வேகன்களில் சர்க்கரையும், 958 வேகன்களில் உப்பும், 316 டேங்குகளில் சமையல் எண்ணெய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

‘தப்லிக் ஜமாத் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என நாடு முழுவதும் 25,000 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். ஹரியானாவில் 5 கிராமங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது” என உள்துறை இணைச் செயலாளர் புனியா சலிலா கூறினார். 5 லட்சம் கொரோனா சோதனைக் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் ஏப்ரல் 8 அல்லது 9-ம் தேதிகளில் 2.5 லட்சம் கருவிகள் வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.